தமிழ் வினைகளின் இலக்கணமயமாக்கம்
இந்த கட்டுரை அல்லது கட்டுரையின் சில பகுதியோ விக்கிபீடியாவின் பதிப்புரிமை கொள்கையை மீறும் ஒரு மூலத்திலிருந்து நகலெடுத்து ஒட்டப்பட்டிருக்கலாம். இலவசமில்லாத பதிப்புரிமை பெறாத உள்ளடக்கத்தை அகற்றுவதன் மூலமோ அல்லது இலவச உள்ளடக்கத்தை சரியாகக் குறிப்பிடுவதன் மூலமோ இந்தக் கட்டுரையினை திருத்தி விக்கிபீடியாவின் வளர்ச்சிக்கு உதவலாம். அல்லது நீக்குவதற்கான கோரிக்கை விடுக்கலாம். இதில் பதிப்புரிமை மீறல் என்பது விக்கிபீடியா கண்ணாடியின்கீழ் வரவில்லை என்பதனை உறுதி செய்யவும். (நவம்பர் 2022) |
இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
1. முன்னுரை
சொற்களும் கட்டுமானங்களும் சில மொழியியல் சூழல்களில் சில இலக்கணச் செயற்பாங்குகளைச் குறிப்பிடுமாறு செய்யும் மாற்றம் இலக்கணமயமாக்கம் (grammaticalization) எனப்படும்; அவ்வாறு இலக்கணமயமாக்கம் அடைந்தால் அவை புதிய இலக்கணச்செயல்பாட்டை உருவாக்கும் (Hopper & Traugott 2003:1). எளிமையாகக் கூறினால் ஒரு சொல் அல்லது சொல்வரிசை அதன் எல்லா அல்லது சில சொற் பொருண்மையை இழந்து கூடுதல் இலக்கணச் செயல்பாட்டை நிறைவேற்றுவது இலக்கணமயமாக்கமாகும். இலக்கணமயமாக்கம் நிகழ்கையில் பெயர்களும் வினைகளும் காலப்போக்கில் துணிவினைகளாகவும் வேற்றுமை உருபுகளாகவும் திரிபுகளாகவும் வாக்கிய இணைப்பான்களாகவும் மாறும்.
வரலாற்று மொழியியலில் அடிப்படையில் இலக்கணமயமாக்கம் என்பது மொழி மாற்றத்தின் செயல்பாடாகும்; இச்செயல்பாட்டால் பொருட்களும் செயல்பாடுகளும் (அதாவது பெயர்கள், வினைகள்) இலக்கணக் குறிப்பான்களாக (ஒட்டுகள், பின்னுருபுகள் போன்றவைகளாக) மாற்றப்படுகின்றன. இலக்கணமயமாக்கம் இருக்கிற கட்டுண்ட மற்றும் திரிபு வடிவங்களிலிருந்து அல்லாமல் பொருள் தரும் சொற்களிலிருந்து புதிய செயல்பாட்டு வடிவங்களை உருவாக்குகின்றது.
தமிழ் வினைகளான ஆகு, இரு, விடு என்பன என்பன ’செய்து’ வினை எச்சத்திற்குப் பின் வினையாற்றுவகைத் துணைவினைகளாகவும் (aspectual auxiliary verbs) போ, வா, இரு, கூடு, பார், முடி, வேண்டு என்பன ‘செய்ய’ வினை எச்சதிற்குப் பின் வேறுபட்ட வினைநோக்குத் துணைவினைகளாகவும் (modal auxilaires) இலக்கணமயமாக்கம் அடைந்துள்ளன. மட்டுமன்றி சில வினைகளின் திரிபுற்ற மற்றும் திரிபுறா வடிவங்கள் வேறுபட்ட வேற்றுமை உறவுகளை உணர்த்தும் பின்னுருபுகளாகவும் இலக்கணமயமாக்கம் அடைந்துள்ளன. எடுத்துக்காட்டாக, இரு என்ற வினையின் இறந்தகால வினையெச்ச வடிவமான இருந்து நீங்கல் வேற்றுமை உறவை குறிப்பிட்டும்படி (எ.கா. அவன் வீட்டிலிருந்து வந்தான்) இலக்கணமயமாக்கம் அடைந்துள்ளது. கொள், வை என்ற வினைகளின் இறந்தகால வினையெச்ச வடிவங்களான கொண்டு, வைத்து என்பன கருவி வேற்றுமை உறவை குறிபிட்டும்படி (எ.கா. அவன் கத்தி கொண்டு/வைத்து வெட்டினான்) இலக்கணமயமாக்கம் அடைந்துள்ளன. வேறு சில வினைகள் பெயர்களுடன் இணைந்து புதிய வினைகளை ஆக்கும் வினையாகியகளாகவும் (வினையாக்க வினைகளாகவும்) இலக்கணமயமாக்கம் அடைந்துள்ளன. எடுத்துக்காட்டாக பின்வரும் சிலவற்றைக் குறிப்பிடலாம்: விசாரணை + செய் > விசாசரணைசெய், அச்சு + அடி > அச்சடி, வாது + இடு > வாதிடு (இந்தப் பட்டியல் நீண்டுகொண்டே போகும்) என்ற கூட்டுவினையாக்கத்தில் செய், அடி என்பன வினையாக்கிகளாகச் செயல்படுகின்றன. ஆகு என்ற வினையின் திரிபு வடிவங்கள் (ஆன, ஆக) பெயரடை ஆக்கியாகவும் (எ.கா. அழகு+ஆன> அழகான) வினையடை ஆக்கியாகவும் (எ.கா. விரைவு+ஆக>விரைவாக) இலக்கணமயமாக்கம் அடைந்துள்ளன. என் என்ற வினையின் பெயரெச்ச வடிவம் என்று என்பது நிரப்புக் கிளவியாக இலக்கணமயமாக்கம் அடைந்துள்ளது.
இலக்கணமயமாக்கச் செயல்பாட்டின் புரிதலுக்காகச் சொற்பொருண்மையுள்ள உள்ளடக்கமுள்ள சொற்களுக்கும் சொற்பொருண்மை இல்லாத இலக்கணச் சொற்கள் அல்லது செயல்பாட்டுச் சொற்களுக்கும் வேறுபாடு பாராட்டவேண்டும். தமிழ் வினைகளின் வேறுபட்ட இலக்கணமயமாக்கத்தை விரிவாக ஆய்வதுதான் இக்கட்டுரையின் நோக்கமாகும்.
2. இலக்கணமயமாக்கக்கோட்பாடு
ஹைனின் (Heine, 2004) கூற்றுபடி இலக்கணமயமாக்கக்கோட்பாடு (grammaticalization theory) என்பது மொழிக்கோட்பாடோ (theory of language) மொழிமாற்றமோ (language change) அன்று. அதன் நோக்கம் இலக்கணமயமாக்கத்தை விளக்குவதாகும்; அதாவது இடம் மற்றும் காலப் போக்கில் இலக்கண வடிவுகள் எவ்வாறு உருவாகின்றன மற்றும் அவை ஏன் அவ்வாறு அமைப்பாக்கம் அடைகின்றன என்பதை விளக்குவதாகும். இலக்கணவாக்கம் ஒரு திசை மாற்றமாகக் கருதுகோள் செய்யப்படுகின்றது. இலக்கணமயமாக்கம் சொல்வகைபாட்டிலிருந்து இலக்கணவகைப்பாட்டிற்கு மாற்றம் விளைவிப்பதாகப் பெரும்பாலும் விளக்கப்படுகின்றது. இந்தக் கண்ணோட்டம் பல எண்ணிக்கையிலான மொழியியல் செயல்பாடுகளைக் கவனித்துக்கொள்கின்றது; ஆனால் பல எண்ணிக்கையிலான இலக்கணவகைபாட்டின் உருவாக்கத்தைக் கணக்கில் எடுக்கவில்லை. இரண்டுவகையிலான குறைபாடுகளைக் கொண்டிருக்கின்றது. முதலாவது இலக்கணமயமாக்கம் சொல் வடிவத்தோடு எல்லைப்படுத்தப்படவில்லை; இலக்கணவடிவுகளும் மேலும் இலக்கணவடிவுகளை அடையும் படிக்கு இலக்கணமயமாக்கம் செய்யும். இரண்டாவதாக மொழியியல் கூறுகளுக்குக் குறிப்பிட்ட சூழல்களும் கட்டுமானங்களும் தேவைப்படுவதால் இலக்கணவாக்கக் கோட்பாடும் இச்செயல்பாடு நடைபெறும் பயன்வழியியல் மற்றும் உருபனியல்-தொடரியல் சூழலோடு தொடர்புடையதாக இருக்கின்றது. இலக்கணமயமாக்கம் ஒருகால மற்றும் இருகால பரிமாணத்தைக் கொண்டிருக்கையில் இதன் அடிப்படை இருகால இயல்பானதாகும்.
இலக்கணமயமாக்கச் செயல்பாட்டில், ஒரு திரிபுறா சொல் (அல்லது உள்ளடக்கச் சொல்) ஒரு இலக்கணச் சொல்லாக (அல்லது செயல்பாட்டுச் சொல்லாக) மாற்றப்படுகிறது. சொல் அதன் சொல்வகைப்பாட்டை விட்டு மற்றொன்றில் நுழையும் செயல்முறை உடனடியானது அல்ல; தனிப்பட்ட மாற்றங்கள் படிப்படியாகத் தொடர்ச்சியாக நிகழ்கிறது. இலக்கணமயமாக்கதின் மேலூரும் நிலைகள் ஒரு சங்கிலியை உருவாக்கும்; இது பொதுவாக ஒரு தொடர்பம் (cline) என்று அழைக்கப்படுகிறது. இந்த மாற்றங்கள் பொதுவாக வெவ்வேறு மொழிகளில் இதேபோன்ற ஒழுங்கமைப்பைப் பின்பற்றுகின்றன (Hopper and Traugott 2003:6). மொழியியலாளர்கள் தொடர்பம் என்பதன் துல்லியமான வரையறையையோ அல்லது கொடுக்கப்பட்ட நேர்வுகளில் அதன் சரியான பண்புகளையோ ஏற்றுக்கொள்வதில்லை. தொடர்பத்தின் மீதுள்ள நிலைகள் எப்போதும் ஒரு நிலையான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கவில்லை மாறுபடும் என்றும் நம்பப்படுகிறது,. இருப்பினும், ஹேப்பர் மற்றும் டிராகோட்டின் இலக்கணமயமாக்கத்தின் புகழ்பெற்ற அமைப்பொழுங்கு வடிவின் பல்வேறு நிலைகளை விவரிக்கிறது:
உள்ளடக்கச்சொல்→ இலக்கணச்சொல் → இடைச்சொல்→ திரிபு ஒட்டு
இந்தக் குறிப்பிட்ட தொடர்பம் "இலக்கணத்தின் தொடர்பம் (the cline of grammaticality)" (Hopper and Traugott 2003, p. 7) அல்லது "வகைபாடுசார் தரக்குறைவின் சுழற்சி (cycle of categorical downgrading)" (Givon 1971) என்று அழைக்கப்படுகின்றது மற்றும் இது ஒரு பொதுவான ஒன்றாகும். இந்தத் தொடர்பத்தின் வலது பக்கம் உள்ள ஒவ்வொன்றும் இடதுபுறம் வருகின்றவற்றைக் காட்டிலும் அதிக இலக்கண மற்றும் குறைவான சொல் வடிவத்தை உருப்படுத்தம் செய்கின்றன.
3. இலக்கணமயமாக்கத்தின் வழிமுறைகள்
ஒரு தெளிவான வரையறையில் "இலக்கணமயமாக்கம்" என்ற சொல்லை அறிவது கடினம். இருப்பினும், இலக்கணமயமாக்கத்துடன் தொடர்புடைய சில செயல்முறைகள் உள்ளன. தொழில்நுட்ப அடிப்படையில் இலக்கணமயமாக்கம் நான்கு ஒன்றுக்கொன்று தொடர்புடைய இயக்கமுறைகளை உள்ளடக்கும் (Bernad & Kuteva, 2002: 16).
அ. பொருண்மைக் குறையாக்கம் (desemanticization) (அல்லது “பொருண்மை வெளுப்பு” “semantic bleaching”) – பொருண்மை பொருளடக்கத்தின் இழப்பு
ஆ. நீட்சி (extension) (அல்லது சூழல் பொதுமையாக்கம்/context generalization) – புதிய சுழல்களில் பயன்படுத்தல்.
இ. இலக்கண வகைப்பாட்டு மாற்றம் (decategorialization) – சொல் அல்லது பிற குறைந்த இலக்கணமயமாக்கப்பட்ட வடிவுகளின் சிறப்பான உருபனியல்-தொடரியல் பண்புகளை இழத்தல்.
உ. தேய்மானம் (erosion) (அல்லது ஒலியல் குறைப்பு (“phonetic reduction”) – ஒலியியல்சார் சரக்கில் இழப்பு
இந்த வழிமுறைகள் பண்புகளின் இழப்பை உட்படுத்தினாலும் இலக்கணமயமாக்கம் செய்யும் மொழியியல் கூறுகள் பொருண்மையியல், உருபனியல்-தொடரியல், ஒலியியல்சார் சாரத்தை இழப்பது போன்று பேறையும் காட்டும்.
3.1. பொருண்மையியல்சார் குறுக்கம் (Semantic bleaching)
பொருண்மையியல்சார் குறுக்கம் அல்லது பொருண்மைசார் நீக்கம் (desemanticization), இலக்கணமயமாக்கலின் ஒரு சிறப்பியல்பாகத் தொடக்கத்திலிருந்து கருதப்படுகின்றது. இது சொற்பொருள் உள்ளடக்க இழப்பு என விவரிக்கப்படுகிறது. மேலும் குறிப்பாக, இலக்கணமயமாக்கதைக் குறிப்பிடுகையில், பொருண்மையியல்சார் குறுக்கம் சொல்லின் இலக்கண உள்ளடக்கம் மட்டும் தக்கவைக்கப்பட்டு அதன் அனைத்து (அல்லது பெரும்பாலான) சொற்பொருள் உள்ளடக்கமும் இழப்பது பற்றி குறிக்கிறது, (Heine 1993:89). எடுத்துக்காட்டாக, ஒரு உருபனை இலக்கணம்சார்-வன்பொருள்-போன்ற வழியில் (grammatical-hardware-like way) பயன்படுத்த இயலும் படிக்கு அந்த உருபனின் பொருண்மைக்கூறுகளின் பகுதியளவை நீக்குதல், அதன் துல்லியமான உள்ளடக்கத்தின் சிலவற்றை இழக்கச்செய்தல் என்று ஜேம்ஸ் மாடிசஃப் (Matisoff 1991: 384) பொருண்மை குறுக்கத்தை விளக்குகிறார். ஜோன் ஹைமான் பின்வருமாறு எழுதுகின்றார்: "ஒரு உருபன் அதன் நோக்கத்தை இழக்கையில் பொருண்மையியல்சார் குறுக்கம் நேர்கின்றது: சில குறுகிய கருத்துக்களின் குழுமத்திலிருந்து அவற்றின் பரந்த பரப்பெல்லையை விளக்கவரும்; இறுதியாக அதன் பொருண்மையை முற்றிலும் இழக்கும் (Haiman 1991:154.). ஹைமான் இதை இலக்கணமயமாக்கத்துடன் எப்போதும் தொடர்பு கொண்டிருக்கும் இரண்டு வகையான மாற்றங்களில் ஒன்று எனக் கண்டார் (பிற ஒலியியல்சார் குறுக்கம்).
3.2. உருபனியல்சார் குறுக்கம் (morphological reduction)
ஒரு மொழியியல் வெளிப்பாடு ஒரு சொற்பொருளிலிருந்து இலக்கணப் பொருளுக்கு மாறிவிட்டால் அது அதன் தொடக்க வகைபாட்டின் பண்புகளாக இருந்த உருபனியல் மற்றும் தொடரியல் கூறுகளை, ஆனால் இலக்கணச் செயல்பாட்டிற்குப் பொருந்தாத கூறுகளை இழக்க நேரிடலாம் (Heine & Kuteva 2007: 40). இது வகைப்பாட்டு மாற்றம் அல்லது உருபனியல் குறுக்கம் என்று அழைக்கப்படும். எடுத்துக்காட்டாக வினையாக வரும் என் என்பது என்று நிரப்புக்கிளவியாக வருதல். எ.கா. அவன் நாளை வருகின்றான் என்றாள்: அவன் நாளை வருகிறான் என்று கூறினாள்.
3.3.ஒலியியல்சார் குறுக்கம் (Phonetic erosion)
ஒலியியல்சார் குறுக்கம் ஒலியனியல்சார் தேய்வு (phonological attrition)) அல்லது ஒலியனியல்சார் குறைப்பு (phonological reduction) எனவும் அழைக்கப்படும். இச்செயல்பாடு செயல்பாடு பெரும்பாலும் இலக்கணமயமாக்கத்துடன் தொடர்புடையது. இது மொழியியல் வெளிப்பாடு இலக்கணமயமாக்கத்தின் போது ஒரு ஒலியியல்சார் அலகை இழக்கிறது என்பதைக் குறிக்கிறது. ஹைன் பின்வருமாறு குறிப்பிடுகிறார்: "ஒரு சொல்லன் (lexeme) ஒரு இலக்கணக் குறியீடாகப் பயன்படுத்தப்படுகையில், அது குறுக்கத்திற்கு உள்ளாகும்; அதாவது ஒலியனியல் கூறு சில வழியில் குறைக்கப்படலாம் மற்றும் அதைச் சுற்றியுள்ள ஒலியனியல்சார் கூறுகளுடன் அதிக அளவில் சார்ந்துவரலாம்." (Heine 1993, p.106). பெர்ண்ட் ஹைன் மற்றும் தானியா குடெவா (Bernd Heine and Tania Kuteva) ஒலியியல்சார் குறுக்கத்துடன் பொருந்தும் நேர்வுகளின் பல்வேறு வகைகளை விளக்கியுள்ளார்:
· முழு அசைகளின் இழப்பு உட்பட ஒலியனியல்சார் பகுதிகளின் இழப்பு.
· அசைஅழுத்தம் (stress), சுரம் (tone) அல்லது இசையோட்டம் (intonation) போன்ற மீக்கூறு பண்புகளின் (suprasegmental properties) இழப்பு.
· ஒலினியல்சார் சுதந்திரத்தை இழத்தல் மற்றும் அருகிலுள்ள ஒலியனியல்சார் அலகுகளுடன் ஒத்துப்போதல்.
· ஒலியியல்சார் எளிமைப்படுத்தல்
4. தமிழ் வினைச் சொற்களின் இலக்கணமயமாகத்தின் வகைகள்
தமிழ் வினைச்சொற்களில் இலக்கணமயமாக்கத்தின் வகைகளை இலக்கணமயமாக்கதின் செயல்முறையின் விளைவுகளின் அடிப்படையில் பின்வருமாறு வகைப்படுத்தலாம்:
1. வினையாற்றுவகை துணைவினைகளாக இலக்கணமயமாக்கம் செய்தல்
2. வினைநோக்கத் துணைவினைகளாக இலக்கணமயமாக்கம் செய்தல்
3. செயப்பாட்டுத் துணைவினையாக இலக்கணமயமாக்கம் செய்தல்
4. காரணத் துணைவினையாக இலக்கணமயமாக்கம் செய்தல்
5. உளப்பாங்குத் துணைவினையாக இலக்கணமயமாக்கம் செய்தல்
6. உளப்பாங்கில்லாத் துணைவினையாக இலக்கணமயமாக்கம் செய்தல்
7. வினையாக்கிகளாக இலக்கணமயமாக்கம் செய்தல்
8. பெயரடை மற்றும் வினையடை ஆக்கிகளாக இலக்கணமயமாக்கம் செய்தல்
9. பின்னுருபுகளாக இலக்கணமயமாக்கம் செய்தல்
10. நிரப்புக் கிளவியாக இலக்கணமயமாக்கம் செய்தல்
இவற்றில் 1-6-ஐ துணைவினையாக இயக்கணமயமாக்கம் செய்தல் என்பதன் கீழ் அடக்கலாம். 7-8-ஐ ஆக்கிகளாக இலக்கணமயமாக்கம் செய்தல் என்ற தலைப்பில் அடக்கலாம்.
4.1. துணைவினைகளாக இலக்கணமயமாக்கம் செய்தல்
தொகு4.1. 1.வினையாற்றுவகை துணைவினைகளாக இலக்கணமயமாக்கம் செய்தல்
தொகுஆகு, இரு, விடு ஆகிய வினைகளும் (கொண்டு +இரு>) கொண்டிரு போன்ற கூட்டுவினைகளும் ’செய்து’ வினையெச்சவடிவ முதன்மை வினைகளுடன் இணைந்து வினையாற்றுவகைத் துணைவினைகளாக (aspectual auxiliaries) இலக்கணமயமாக்கம் செய்யும்.
4.1.1.1. ஆகு என்பதன் இலக்கணமயமாக்கம்
4.1.1.1.1. ’செய்து’ வினையெச்சம்+ஆயிற்று
ஆகு என்ற வினை ’இறந்தகாலம், படர்க்கையிடம், ஒருமை, ஒன்றன்பால்’ இவற்றிற்கு திரிபுற்று (ஆகு+த்+து> ஆயிற்று) ’செய்து’ வினையெச்ச இயக்கு முதன்மை வினைகளுடன் (affective main verbs) இணைந்து முற்றுவினையாற்றுவகைத் துணைவினையாக (perfect aspectual auxiliary) (Steever 1983: 374, Lehmann 1993:210) இலக்கணமயமாக்கம் செய்யும்.
அவன் அந்த வேலையை (முடி-த்து+ஆயிற்று>)முடித்தாயிற்று.
ராஜா கடனைத் (திருப்பிக்கொடு-த்து+ஆயிற்று<) திருப்பிக்கொடுத்தாயிற்று.
ஆயிற்று என்பது பேச்சுவழக்கில் ஆச்சு என ஒலியியல்சார் குறுக்கம் அடையும்.
அவன் அந்த வேலைய செய்தாச்சு
4.1.1.1.2. வினைப்பெயர்+ஆகு
ஆகு இறந்தகால வினைமுற்றுவிகுதிக்குத் திரிபுற்று, அல் என்ற பெயராக்கியால் பெயராக்கம் அடைந்த வினைப் பெயர்களின் பின்னர் இணைந்து தொடங்கு வினையாற்றுவகைத் துணைவினையாக (inceptive aspectual auxiliary) (Lehman, 1993: 210) இலக்கணமயமாக்கம் செய்யும்.
ராணி அரங்கத்தில் (ஆடல்-ஆனாள்>) ஆடலானாள்
4.1.1.2. இரு என்பதன் இலக்கணமயமாக்கம்
இரு துணைவினையாக ’செய்து’ வினையெச்சவடிவ இருப்பல்லா முதன்மை வினையுடன் (non-stative main verb) இணைந்து முற்றுவினையாற்றுவகைத் துணைவினையாக (Steever 1983:308, Lehmann 1993:206) இலக்கணமயமாக்கம் செய்யும்.
ராஜா சென்னைக்குப் (போ-ய்+இருக்கிறான்>) போயிருக்கிறான்
இரு ’செய்து’ வினையெச்சவடிவ இருப்பு முதன்மை வினையுடன் (stative main verb) இணைந்து தொடர் வினையாற்றுவகைத் துணைவினையாக (progresstive aspectual auxiliary) (Steever 1983:306, Lehman 1993:206) வினையாக்கம் செய்யும்.
ராஜா நாற்காலியில் (உட்கார்-ந்து+ இருக்கிறான்>) உட்கார்ந்திருக்கிறான்
4.1.1.3. கொண்டிரு என்பதன் இலக்கணமயமாக்கம்
கூட்டுவினை கொண்டிரு ’செய்து’ வினையெச்சவடிவ முதன்மை வினையுடன் இணைந்து தொடர்வினையாற்றுவகைத் துணைவினையாக இலக்கணமயமாக்கம் செய்யும்.
அவன் மைதானத்தில் ஓடிக்-கொண்டிருக்கிறான்.
4.1.1.4. கொண்டுவா என்பதன் இலக்கணமயமாக்கம்
கூட்டுவினை கொண்வா ’செய்து’ வினையெச்சவடிவ முதன்மை வினையுடன் இணைந்து தொடர்வினையாற்றுவகைத் துணைவினையாக இலக்கணமயமாக்கம் செய்யும்.
விலை ஏறிக்கொண்டுவரும்.
4.1.1.5. விடு என்பதன் இலக்கணமயமாக்கம்
விடு துணைவினையாக ’செய்து’ வினையெச்ச முதன்மை வினையுடன் இணைந்து முற்றுவினையாற்றுவகை துணைவினையாக (aspectual auxiliary) (Annamalai 1982: 103, Lehman 1993:206) இலக்கணமயமாக்கம் செய்யும்.
ராஜா வீட்டைவிட்டிப் போய்-விட்டான்.
நான் இந்த நூலைப் படித்து-விட்டேன்.
4.1.2. வினைநோக்குத் துணைவினைகளாக இலக்கணமயமாக்கம் செய்தல்
தொகுஆகு, இரு, அட்டு, கூடு, பார், மாடு, முடி, போ, வா, வேண்டு, என்ற வினைகள் ’செய்ய’ வினையெச்சவடிவ முதன்மை வினையுடன் இணைந்து வினைநோக்குத் துணைவினைகளாக இலக்கணமயமாக்கம் செய்யும். அவை சூழல் சாத்தியம், கட்டாயம், விழைவு, அனுமதி போன்ற வினைநோக்குகளாக இலக்கணமயமாக்கம் செய்யும். இத்துணை வினைகளை மூன்றாகப் பகுக்கலாம். முதல் வகையைச் சாரும் வேண்டு, கூடு, முடி என்பன குறை உருபனியலைக் கொண்டிருக்கின்றன (Lehman 1993:211). இவற்றின் முற்று வினைவடிவம் உம் என்ற போர்ட்மண்டோ உருபனையோ (எதிர்காலம்+படர்க்கை இடம்+ஒன்றன்பால்) ஆம் என்ற போர்ட்மண்டோ உருபனையோ (எதிர்மறை+படர்க்கை இடம்+ஒன்றன்பால்) ஏற்கும். அட்டு, ஆகு என்பன இரண்டாவது வகையைச் சாரும். அட்டு ஒலியனியல் குறுக்கம் அடிப்படையில் அ என்ற உயிரை இழந்து ட்டு என்று குறுகும் (Lehman 1993:212). இதனுடன் போர்ட்மாண்டோ உருபனான உம் சேர்ந்து ட்டும் என்று வரும். இது போன்று ஆகு என்ற வினையும் உம் என்ற போர்ட்மாண்டோ உருபனுடன் இணைந்து ஆகும் என்ற வடிவம் அடைந்து பின்னர் ஒலியனியல் குறுக்கம் அடிப்படையில் ஆம் என்று குறுகும். மூன்றாவது வகையில் போ, வா, இரு, பார் என்பன வரும். இவை எல்லா கால மற்றும் மாற்றுபெயர் ஒட்டுகளை ஏற்று வரும் (Lehman 1993:212).
4.1.2.1. வேண்டு என்ற வினையின் இலக்கணமயமாக்கம்
வேண்டு என்பது உம் என்ற போர்ட்மாண்டோ உருபனையோ ஆம் என்ற எதிர்மறை ஒட்டையோ ஏற்று ’செய்ய’ வினையெச்ச வடிவிற்குப் பின் வந்து வினைநோக்குத் துணைவினையாக (Lehman 1993:212) இலக்கணமயமாக்கம் செய்யும். உம் ஒட்டேற்று விளையும் (வேண்டு+உம்>) வேண்டும் என்பது பேசுபவரால் திணிக்கப்பட்ட அகக் கட்டாய வினைநோக்கை (internal obligation imposed by the speaker) இலக்கணமயமாக்கம் செய்யும்; (வேண்டு+ஆம்>) வேண்டாம் என்பது புறக்கட்டாய எதிர்மறை வினைநோக்கை (Lehman 1993:212) இலக்கணமயமாக்கம் செய்யும்.
1. அகக் கட்டாய வினைநோக்கு
ராஜா இப்போது ஊருக்குப் போக வேண்டும்
2. புறக்கட்டாய எதிர்மறை வினைநோக்கு
ராஜா இந்த மருந்தைச் சாப்பிட வேண்டாம்
3. கடமை
நீ உன் மனைவியிடம் அன்பு செலுத்த வேண்டும்
4. அறிவுரை
ராஜா ஓய்வு எடுக்க வேண்டும்
4.1.2.2. வேண்டிவா, வேண்டி இரு என்ற கூட்டு வினைகளின் இலக்கணமயமாக்கம்
(வேண்டி+வா>) வேண்டிவா, வேண்டி இரு என்ற வினைகள் ’செய்ய’ வினையெச்ச வடிவிற்குப் பின் இணைந்துவந்து புறக் கட்டாய வினைநோக்குத் துணைவினைகளாக (Lehman 1993:213) இலக்கணமயமாக்கம் செய்யும்.
ராஜா சென்னைக்குப் போகவேண்டிவரும்.
ராஜா சென்னைகுப் போகவேண்டி இருக்கும்.
4.1.2.3. கூடு என்ற வினையின் இலக்கணமயமாக்கம்
கூடு என்ற வினை உம் என்ற போர்ட்மண்டோ உருபனையும் (கூடு-உம்> கூடும்) ஆது என்ற எதிர்மறை ஒட்டையும் (கூடு+ஆது> கூடாது) ஏற்று வந்து ’செய்ய’ வினையெச்ச வடிவடிவிற்குப் பின் வந்து சூழல் சாத்தியம், கட்டாயம், விழைவு, அனுமதி ஆகிய வினைநோக்குகளை (Lehman 1993: 213) இலக்கணமாக்கம் செய்யும்.
1.சூழல் சாத்தியம்
இன்று மழை பெய்யக் கூடும்
2. எதிர்மறை கட்டாயம்
இந்தக் குளத்தில் குளிக்கக் கூடாது
3.எதிர்மறை விழைவு
நீ ராஜாவோடு பேசக் கூடாது
4.எதிர்மறை அனுமதி
நீ வண்டி ஓட்டக்கூடாது
நீ உள்ளே வரக்கூடாது.
4.1.2.4. அட்டு என்ற வினையின் இலக்கணமயமாக்கம்
அட்டு என்ற வினை உம் என்ற போர்ட்மாண்டோ உருபனை ஏற்று அட்டும் என்ற வடிவம் அடைந்து, ஒலியியல் குறுக்கம் காரணமாக ட்டும் என்ற வடிவம் பெற்று ‘செய்ய’ வினையெச்ச வடிவ முதன்மை வினையின் பின்னர் இணந்து வந்து படர்க்கையிட அறிவுறுத்தல், படர்க்கையிட வியங்கோள் ஆகிய வினைநோக்குகளை (Lehman 1993: 214) இலக்கணமயமாக்கம் செய்யும்.
1. படர்க்கையிட அறிவுறுத்தல்
ராஜா உள்ளே வரட்டும்
2.படர்க்கையிட வியங்கோள்
அவர்கள் மகிழ்ச்சியாய வாழட்டும்
ட்டும் கேள்வி ஒட்டு ஆ-உடன் அல்லது கேள்விச் சொல்லுடன் சேர்ந்துவந்து விழைவு வினைநோக்கை இலக்கணமயமாக்கம் செய்யும்.
நான் வரட்டுமா
நாம் எப்போது அங்கு வரட்டும்
4.1.2.5. ஆகு என்ற வினையின் இலக்கணமயமாக்கம்
ஆகு போர்ட்மாண்டோ உருபன் உம்-ஐ ஏற்று (ஆகு+உம்>) ஆகும் என்ற வடிவம் அடைந்து ஒலியனியல் குறுக்கம் காரணமாக ஆம் என்ற வடிவம் பெற்று, அல்-ஏற்று பெயராக்கமடைந்த முதல் வினையின் பின்னர் இணந்து வந்து சூழல் சாத்தியம், உய்த்துணரும் சாத்தியம், அனுதி ஆகிய வினைநோக்குகளை (Lehman 1993: 214) இலக்கணமயமாக்கம் செய்யும்.
1.சூழல்சாத்தியம்
இன்று மழை பெய்யலாலாம்
2.உய்த்துணரும் சாத்தியம்
3.அனுமதி
நீங்கள் உள்ளே வரலாம்
ஆகு என்ற வினை ஆது என்ற எதிர்மறை ஒட்டை ஏற்று வந்து ஆகாது என்ற வடிவில் அல்-ஏற்று பெயராக்கமடைந்த முதல் வினையின் பின்னர் இணந்து வந்து எதிர்மறை கட்டாயம், எதிர்மறை விழைவு, எதிர்மறை அனுமதி ஆகிய வினைநோக்குகளை (Lehman 1993: 214) இலக்கணமயமாக்கம் செய்யும்.
1.எதிர்மறை கட்டாயம்
பொய் பேசல்-ஆகாது
இந்த குளத்தில் குளிக்கல்-ஆகாது
2. எதிர்மறை விழைவு
நீ ராஜாவுடன் பேசல்-ஆகாது
3.எதிர்மறை அனுமதி
நீங்கள் வண்டி ஓட்டல்-ஆகாது
4.1.2.6. போ, வா என்ற வினைகளின் இலக்கணமயமாக்கம்
போ என்ற வினை ’செய்ய’ வினையெச்ச வடிவ முதன்மை வினையின் பின்னர் இணைந்து வந்து எண்ணம், கணிப்பு ஆகிய வினைநோக்குகளை வெளிப்படுத்தும் தூணைவினைகளாக (Lehman 1993: 217) இலக்கணவயமாக்கம் செய்யும். சில குறிப்பிட்ட முதல்மை வினைகளுடன் வா என்ற வினை எண்ணைம் என்ற வினைநோக்கை வெளிப்படுத்தும் துணைவினைகளாக இலக்கணமாக்கம் செய்யும்.
1. எண்ணம்
ராஜா ஒரு வீடு கட்டப் போகிறான்
ராஜா குமாரிடன் பேச வந்தான்
2. (பேசுபவரின்) கணிப்பு
மழை பெய்யப் போகிறது
4.1.2.7. இரு என்ற வினையின் இலக்கணமயமாக்கம்
இரு என்ற வினை ‘செய்ய’வினைவடிவ முதன்மை வினையின் பின்னர் இணந்து வந்து எழுவாயின் எண்ணம், கணிப்பு திட்டம் ஆகிய வினைநோக்குகளை வெளிப்படுத்தும் துணைவினைகளாக (Lehman 1993: 217) இலக்கணமயமாக்கம் செய்யும்.
ராஜா ஒரு வீடு கட்ட இருக்கிறான்
4.1.2.8. பார் என்ற வினையின் இலக்கணமயமாக்கம்
பார் என்ற வினை ‘செய்ய’வினைவடிவ முதன்மை வினையின் பின்னர் இணந்து வந்து விருப்ப முயற்சி என்ற வினைநோக்கை வெளிப்படுத்தும் துணைவினையாக (Lehman 1993: 218) இலக்கணமயமாக்கம் செய்யும்.
ராஜ அவளைக் கொல்லப் பார்த்தான்.
4.1.2.9. மாடு என்ற வினையின் இலக்கணமயமாக்கம்
மாடு என்ற வினை வரலாற்றுமொழியியல் அடிப்படையில் ‘செய்’ எனப் பொருள்படும் மற்றும் இது குறை வினையாக மாற்றம் அடைந்துள்ளது. மாடு ‘செய்ய’ வடிவ முதன்மை வினையின் பின்னர் இணந்து எதிர்மறை விருப்பம், மறுத்தல், எதிர்கால எதிர்மறை என்ற வினைநோக்குகளை வெளிப்படுத்தும் துணைவினைகளாக (Lehman 1993: 218) இலக்கணமயமாக்கம் செய்யும்.
ராஜா மேடையில் பாடமாட்டான்.
குமார் விருந்துக்கு வரமாட்டான்.
4.1.3. செயப்பாட்டு வினைபாட்டுத் துணைவினையாக இலக்கணமயமாக்கம் செய்தல்
தொகுபடு என்ற வினை ’செய்ய’ வடிவ முதன்மை வினையின் பின்னர் இணந்து வந்து செயப்பாட்டு வினைபாட்டை வெளிப்படுத்தும் துணைவினையாக (Lehman 1993: 218) இலக்கணமயமாக்கம் செய்யும்.
ராஜா ஒரு பாம்பைக் கொன்றான்.
ஒரு பாம்பு ராஜாவால் கொல்லப்பட்டது.
4.1.4.காரணவினைப்பாடுத் துணைவினையாக இலக்கணவயமாக்கம் செய்தல்
செய், வை, பண்ணு என்னும் வினைகள் ’செய்ய’ வடிவ முதன்மை வினையின் பின்னர் இணந்து வந்து காரணவினைப்பாட்டை இலக்கணமயமாக்கம் செய்யும்.
அவள் அவனைத் பாடச் செய்தாள்.
ராஜா அவளைப் பேச வைத்தான்.
அவன் அவளைத் தூங்கப் பண்ணினான்
4.1.5. உளப்பாங்குத் துணைவினையாக இலக்கணமயமாக்கம் செய்தல்
தொகுஸ்டீவர் (Steever 1983: 417) உளப்பாங்கு என்ற வகைப்பாட்டை பேசுபரின் அகவயமான மதிப்பீட்டைக் குறிப்பிடும் படி அதாவது பேசுபவர் தனது சொந்தக் கருத்தைக் குறிப்பிடும் படி முன்மொழிகின்றார். தொலை, போடு, தள்ளு, கிட, கிழி, போ, தீர் என்ற வினைகள் ’செய்ய’ வடிவ முதன்மை வினையின் பின்னர் இணந்து வந்து வேறுபட்ட உளப்பாங்கை உணர்த்தும் துணைவினைகளாக இலக்கணமயமாக்கம் செய்யும்.
4.1.5.1.தொலை என்ற வினையின் இலக்கணமயமாக்கம்
தொலை என்ற வினை ’செய்ய’ வடிவ முதன்மை வினையின் பின்னர் இணந்து வந்து முதன்மை வினை குறிப்பிடும் நிகழ்வின்மீது பேசுபவரின் எதிர்மறை உளப்பாங்கை அதாவது நிகழ்வின் மீதான பேசுபவரின் விரோதமான உளப்பாங்கை வெளிப்படுத்தும் துணைவினையாக (Lehman 1989: 222) இலக்கணமயமாக்கம் செய்யும். ராஜா அவளிடம் உண்மையைச் சொல்லித் தொலைத்தான்
4.1.5.2.போடு என்ற வினையின் இலக்கணமயமாக்கம்
போடு என்ற வினை ’செய்ய’ வடிவ முதன்மை வினையின் பின்னர் இணந்து வந்து முதன்மை வினை குறிப்பிடும் நிகழ்வின்மீது எழுவாய் காட்டிய கவனக்குறைவு சார்ந்த பேசுபவரின் உளப்பாங்கை வெளிப்படுத்தும் துணைவினையாக (Lehman 1993: 222) இலக்கணமயமாக்கம் செய்யும்.
ராஜா வாசல் கதவை மூடிப்போட்டான்.
4.1.5.3.தள்ளு என்ற வினையின் இலக்கணமயமாக்கம்
தள்ளு என்ற வினை ’செய்ய’ வடிவ முதன்மை வினையின் பின்னர் இணந்து வந்து முதன்மை வினை குறிப்பிடும் நிகழ்வின் துரிதமான நேர்வுசார்ந்த பேசுபவரின் உளப்பாங்கை வெளிப்படுத்தும் துணைவினையாக (Lehman 1993: 222) இலக்கணமயமாக்கம் செய்யும்.
அவள் குழந்தைகளைப் பெற்றுத் தள்ளினாள்.
4.1.5.4.கிட என்ற வினையின் இலக்கணமயமாக்கம்
கிட என்ற வினை ’செய்ய’ வடிவ முதன்மை வினையின் பின்னர் இணந்து வந்து முதன்மை வினை குறிப்பிடும் நிலையின் தொடர்வினையாற்றுவகையையும் அந்நிலை குறித்த பேசுபவரின் எதிர்மறை உளப்பாங்கை வெளிப்படுத்தும் துணைவினையாக (Lehman 1993: 223) இலக்கணமயமாக்கம் செய்யும்.
அந்த கடை பூட்டிக்கிடக்கின்றது.
4.1.5.5.கிழி என்ற வினையின் இலக்கணமயமாக்கம்
கிழி என்ற வினை ’செய்ய’ வடிவ முதன்மை வினையின் பின்னர் இணந்து வந்து முதன்மை வினை குறிப்பிடும் செயல் அதைச் செய்பவரால் நிறைவெற்றப்பெறாது என்ற பேசுபவரின் எதிர்மறை உளப்பாங்கை வெளிப்படுத்தும் துணைவினைகளாக (Lehman 1993: 223) இலக்கணமயமாக்கம் செய்யும்.
ராஜா பாட்டுப்பாடிக் கிழித்தான்.
அவன் படித்துக் கிழித்தான்.
4.1.5.6.போ என்ற வினையின் இலக்கணமயமாக்கம்
போ என்ற வினை ’செய்ய’ வடிவ முதன்மை வினையின் பின்னர் இணந்து வந்து முதன்மை வினை குறிப்பிடும் நிலைமாற்றச் செயல் எதிர்மறையானது, நல்லதல்ல, அல்லது விரும்பத்தகாதது என்ற பேசுபவரின் எதிர்மறை உளப்பாங்கை வெளிப்படுத்தும் துணைவினையாக (Lehman 1993: 223-224) இலக்கணமயமாக்கம் செய்யும்.
முகம்பார்க்கும் கண்ணாடி உடைந்து போயிற்று.
4.1.5.7. தீர் என்ற வினையின் இலக்கணமயமாக்கம்
தீர் என்ற வினை ’செய்ய’ வடிவ முதன்மை வினையின் பின்னர் இணந்து வந்து முதன்மை வினை குறிப்பிடும் நிலைமாற்றச் செயல் எதிர்மறையானது, நல்லதல்ல, அல்லது விரும்பத்தகாதது என்ற பேசுபவரின் எதிர்மறை உளப்பாங்கை வெளிப்படுத்தும் துணைவினையாக (Lehman 1993: 224) இலக்கணமயமாக்கம் செய்யும்.
ரஜா அவளைத் திட்டித் தீர்த்தான்.
4.1.6. உளப்பாங்கில்லாத் துணைவினையாக இலக்கணமயமாக்கம் செய்தல்
தொகுகொள், அழு, பார், வை, கொடு என்ற வினைகள் ’செய்ய’ வடிவ முதன்மை வினையின் பின்னர் இணந்து வந்து உளப்பாங்கில்லாத் துணைவினைகளாக இலக்கணமயமாக்கம் செய்யும்.
4.1.6.1. கொள் என்ற வினையின் இலக்கணமயமாக்கம்
கொள் என்ற வினை ’செய்ய’ வடிவ முதன்மை வினையின் பின்னர் இணந்து வந்து முதன்மை வினை வெளிப்படுத்தும் செயலை எழுவாய் தானாகவே முன்வந்து செய்வதை வெளிப்படுத்தும் துணைவினையாக (Paramasivam 1979: 33, Lehman 1993:225) இலக்கணமயமாக்கம் செய்யும்.
ராஜா கல்யாணம் செய்து கொண்டான்.
ராஜா தன்னைத்தானே அடித்துக்கொண்டான்.
இரண்டாவது வாக்கியத்தில் கொள் தற்சுட்டு வினைப்பாட்டை (reflexive voice) இலக்கணமயமாக்கம் செய்யும்.
4.1.6.2. அழு என்ற வினையின் இலக்கணமயமாக்கம்
அழு என்ற வினை ’செய்ய’ வடிவ முதன்மை வினையின் பின்னர் இணந்து வந்து முதன்மை வினை வெளிப்படுத்தும் செயல் எழுவாய்க்கு விருப்பமில்லாமல் நிகழ்ந்தது (Lehman 1993: 223-226) என்பதை வெளிப்படுத்தும் துணைவினையாக இலக்கணமயமாக்கம் செய்யும்.
ராஜா அவளுக்குக் கடன் கொடுத்து அழுதான்.
4.1.6.3. பார் என்ற வினையின் இலக்கணமயமாக்கம்
பார் என்ற வினை ’செய்ய’ வடிவ முதன்மை வினையின் பின்னர் இணந்து வந்து முதன்மை வினை வெளிப்படுத்தும் செயலை எழுவாய் மதிப்பிடவோ கணிப்பிடவோ முயல்வதை (Lehman 1993: 223-226) வெளிப்படுத்தும் துணைவினையாக இலக்கணமயமாக்கம் செய்யும்.
அவன் பழத்தைச் சாப்பிட்டுப் பார்த்தான்.
4.1.6.4. வை என்ற வினையின் இலக்கணமயமாக்கம்
வை என்ற வினை ’செய்ய’ வடிவ முதன்மை வினையின் பின்னர் இணந்து வந்து முதன்மை வினை வெளிப்படுத்தும் செயலை எழுவாய் எதிர்கால நோக்கத்திற்காகவோ நன்மைக்காகவோ செய்வதை (Lehman 1993: 223-227) வெளிப்படுத்தும் துணைவினையாக இலக்கணமாக்கம் செய்யும்.
அவன் ஜன்னலைத் திறந்துவைத்தான்.
4.1.6.5. கொடு என்ற வினையின் இலக்கணமயமாக்கம்
கொடு என்ற வினை ’செய்ய’ வடிவ முதன்மை வினையின் பின்னர் இணந்து வந்து முதன்மை வினை வெளிப்படுத்தும் செயலை எழுவாய் மற்றொருவரின் நன்மைக்காகச் செய்வதை (Lehman 1993: 223-227) வெளிப்படுத்தும் துணைவினையாக இலக்கணமாக்கம் செய்யும்.
ராஜா அவளுக்குக் கடிதம் எழுதிக்கொடுத்தான்.
ராணி அவனுக்குக் காய்கறி வெட்டிக் கொடுத்தாள்.
4.2. ஆக்கிகளாக இலக்கணமயமாக்கம் செய்தல்
4.2.1. வினையாக்கிகளாக இலக்கணமயமாக்கம் செய்தல்
தொகுதமிழ் பெயரையும் வினையையும் இணைத்து புதிய வினைப் பொருண்மையைத் தரும்படிக்கு வினையாக்கம் செய்கின்றது. ஒரு குறிப்பிட்ட என்ணிணிக்கையிலான வினைகள் சில தேர்ந்தெடுக்கப்பட்ட பெயர்களுடன் இணைந்து புதிய வினைகள் உருவாக்கப்படுகின்றன. இவ்வினைகளை வினையாக்கிகள் என்று கூறலாம். இவ்வினையாக்கிகள் பெயருடன் இணைந்து புதிய வினப்பொருளை ஆக்கும்போது தமது மூலப்பொருண்மையைப் பெரும்பாலும் இழந்து விட்டு வினையாக்கிகளாக (அதாவது வினையாக்க ஒட்டு போன்று) இலக்கணமயமாக்கம் செய்யும்.
வரிசை எண் | வினையாக்கிகள் | வினையாக்கிகளால் உருவாக்கப்பட்ட கூட்டு வினைகள் |
1 | அடி | கண்+அடி > கண்ணடி |
2 | அடை | முடிவு+அடை> முடிவடை |
3 | அளி | பரிசு+அளி > பரிசளி |
4 | ஆகு | வெளி+ஆகு >வெளியாகு |
5 | ஆக்கு | சோறு+ஆக்கு>சோறாக்கு |
6 | ஆடு | கூத்து+ஆடு>கூத்தாடு |
7 | ஆட்டு | சீர்+ஆட்டு>சீராட்டு |
8 | ஆற்று | பணி+ஆற்று>பணியாற்று |
9 | இடு | பார்வை+இடு>பார்வையிடு |
10 | உறு | கேள்வி+உறு>கேள்வியுறு |
11 | உறுத்து | துன்பு+உறுத்து>துன்புறுத்து |
12 | ஊட்டு | நினைவு+ஊட்டு>நினைவூட்டு |
13 | எடு | ஓய்வு+எடு>ஓய்வெடு |
14 | எய்து | மரணம்+எய்து>மரணமெய்து |
15 | ஏல் | பதவி+ஏல்>பதவியேல் |
16 | ஏறு | வெளி+ஏறு>வெளியேறு |
17 | ஏற்று | வெளி+ஏற்று>வெளியேற்று |
18 | கட்டு | ஈடு+கட்டு>ஈடுகட்டு |
19 | காட்டு | ஆசை+காட்டு>ஆசைக்காட்டு |
20 | கூறு | புறம்+கூறு>புறங்கூறு |
21 | கொடு | பேச்சு+கொடு>பேச்சுக்கொடு |
22 | கொள் | தொடர்பு+கொள்>தொடர்புகொள் |
23 | செய் | விசாரணை+செய்>விசாரணைசெய் |
24 | சொல் | கோள்+சொல்>கோள்சொல் |
25 | தட்டு | மட்டம்+தட்டு>மட்டம்தட்டு |
26 | படு | வெட்கம்+படு>வெட்கப்படு |
27 | படுத்து | துன்பம்+படுத்து>துன்பப்படுத்து |
28 | பண்ணு | யோசனை+பண்ணு>யோசனைபண்ணு |
29 | பார் | வேவு+பார்>வேவுபார் |
30 | பிடி | அடம்+பிடி>அடம்பிடி |
31 | புரி | மணம்+புரி>மணம்புரி |
32 | பெறு | ஓய்வு+பெறு>ஓய்வுபெறு |
33 | போ | சோரம்+போ>சோரம்போ |
34 | போடு | சத்தம்+போடு>சத்தம்போடு |
35 | மூட்டு | கோபம்+மூட்டு>கோபமூட்டு |
36 | வா | வலம்+வா>வலம்வா |
37 | வாங்கு | பழி+வாங்கு>பழிவாங்கு |
38 | விடு | மூச்சு+விடு>மூச்சுவிடு |
39 | வை | அடமானம்+வை>அடமானம்வை |
4.2.2. பெயரடை மற்றும் வினையடை ஆக்கிகளாக இலக்கணமயமாக்கம் செய்தல்
தொகு4.2.2.1. ஆகு என்ற வினையின் இலக்கணமயமாக்கம்
ஆகு என்ற வினையின் பெயரெச்ச வடிவமான ஆன என்பதும் ’செய்ய’ வினையெச்ச வடிவமான ஆக என்பதும் ஒரு குழுமப் பெயர்களுடன் சேர்ந்து முறையே பெயரடையாக்கி ஆகவும் வினையடை ஆக்கியாகவும் இலக்கணமயமாக்கம் செய்யும்.
அழகு+ஆன>அழகான
எளிது+ஆன>எளிதான
அழகு+ஆக>அழகாக
அழகு+ஆன>அழகான
4.2.2.1. என் என்ற வினையின் இலக்கணமயமாக்கம்
என் என்பதன் ’செய்து’ வினையெச்ச வடிவம் (என்று) ஒலிக்குறிப்புச் சொற்களுடன் இணைந்துவந்து வினையடையாக்கியாக இலக்கணமயமாக்கம் செய்யும்.
திடீர்+என்று >திடீரென்று
படார்+என்று >படாரென்று
4.3. பின்னுருபுகளாக இலக்கணமயமாக்கம் செய்தல்
தொகுதிரிபுற்ற வினைகள் வேறுபட்ட சொல்வகைப்பாட்டையோ செயல்பாட்டையோ குறிப்பிடும்படி வரலாற்று மொழியியல் மாற்றம் அடையும். எடுத்துக்காட்டாக தமிழில் பல பின்வரும் திரிபுற்ற சில வினைகள் பின்னுருபுகளாக இலக்கணமயமாக்கம் செய்யும். இருந்து, ஒட்டி, குறித்து, கொண்டு, சுற்றி, தவிர்த்து, தாண்டி, நோக்கி, பற்றி, பார்த்து, பிந்தி, முந்தி, விட்டு, வைத்து என்பன முறையே இரு, ஒட்டு, குறி, கொள், சுற்று, தவிர், தாண்டு, நோக்கு, பற்று, பார், முந்து, வை என்ற வினைகளின் ‘செய்து’ வினையெச்ச வடிவங்களாகும். இவற்றில் இருந்து என்பது ஏழாம் வேற்றுமை உருபுடன் இணைந்து வந்து பின்னுருபாக இலக்கணமயமாக்கம் செய்யும். ஒட்டி, குறித்து, கொண்டு, சுற்றி, தவிர்த்து, தாண்டி, நோக்கி, பற்றி, பார்த்து, விட்டு, வைத்து என்பன இரண்டாம் வேற்றுமை உருப்புக்குப் (ஐ என்பதற்கு) பின்னர் வந்து பின்னுருபுகளாக இலக்கணமாக்கம் செய்யும். பிந்தி, முந்தி என்பன நான்காம் வேற்றுமை உருபுக்குப் (கு என்பதற்கு) பின்னர் வந்து பின்னுருபுகளாக வினையாக்கம் செய்யும்.
1.அ. அவன் வீட்டிலிருந்து வெளியேறினான் (பின்னுருபு)
1.ஆ. அவன் வீட்டில் இருந்துவந்தான்.
2.அ. அவன் அந்தத் தலைப்பை ஒட்டிப் பேசினான் (பின்னுருபு)
2.ஆ. அவன் போஸ்டர் ஒட்டிப் பிழைக்கின்றான்
3.அ.அவன் அவளைக் குறித்து பேசினான். (பின்னுருபு)
3.ஆ. அவன் அவள் சொல்வதைக் குறித்துக்கொண்டான்
4.அ. அவன் கத்திகொண்டு பழம் வெட்டினான் (பின்னுருபு)
4.ஆ. அவன் பென்சிலைச் சீவிக்கொண்டு பேசினான்
5.அ. அவன் வீட்டைச் சுற்றி மரங்கள் நட்டான். (பின்னுருபு)
5.ஆ. அவன் கோவிலைச் சுற்றிவந்தான்
6.அ. அவனைத் தவிர்த்து எல்லோரும் வந்தார்கள் (பின்னுருபு)
6.அ. அவன் அவளைப் பார்ப்பதைத் தவிர்த்து வந்தான்
7. அவன் கோயிலைத் தாண்டி வீட்டுக்குச் சென்றான் (பின்னுருபு)
7.ஆ. அவன் ஆற்றைத் தாண்டி அக்கரைக்குச் சென்றான்
8.அ. அவன் அவளை நோக்கி நடந்தான். (பின்னுருபு)
8.ஆ. குழந்தை முகத்தை நோக்கிச் சிரிக்கின்றது.
9.அ. அவன் அவளைப்பற்றி பேச்சினான் (பின்னுருபு)
9.ஆ. அவன் அவள் கையைப் பற்றி இழுத்தான்.
10.அ. ராஜா அவளைப் பார்த்துப் பேசினான் (பின்னுருபு)
10.ஆ. அவன் குழந்தையைப் பார்த்துக்கொண்டான்
11.அ.அவன் வீட்டை விட்டு வெளியேறினான் (பின்னுருபு)
11.ஆ.அவள் தன்கொள்கைகளை விட்டுக்கொடுத்தாள்
12.அ. அவன் கத்திவைத்துப் பழம் வெட்டினான். (பின்னுருபு)
12.ஆ. அவன் பணத்தைப் பெட்டியில் வைத்துப் பூட்டினான்
13.அ. ராஜா அவளுக்குப் பிந்தி வந்தான் (பின்னுருபு)
13.ஆ. அவள் அவனைக் காட்டிலும் பிந்திக்கொண்டாள்
14.அ.அவன் அவளுக்கு முந்தி வந்தான். (பின்னுருபு)
14.ஆ. அவன் அவளை முந்தி ஓடினான். (’செய்து’ வினையெச்சம்)
ஒழிய, கூட, தவிர, போல, விட, என்பன முறையே ஒழி, கூடு, தவிர், போல், விடு என்பதன் ’செய்ய’ வினையெச்ச வடிவங்களாகும். இவற்றில் தவிர, போல, விட என்பன இரண்டாம் வேற்றுமை உருபுக்குப் பின்னர் வந்து பின்னுருபாக இலக்கணமயமாக்கம் செய்யும். ஒழிய, கூட என்பன எழுவாய் வேற்றுமையின் பின்னர் வந்து பின்னுருபாக இலக்கணமயமாக்கம் செய்யும்.
15.அ. அவள் ஒழிய எல்லோரும் வந்தார்கள் (பின்னுருபு
15.ஆ. அவன் அங்கிருந்து ஒழிந்தான்.
16.அ. அவன் அவள் கூட வந்தான். (பின்னுருபு)
16.ஆ. அவன் அவளுடன் கூட விரும்புகிறான்.
17.அ. அவனைத் தவிர எல்லோரும் வந்தார்கள்
17.ஆ. அவள் அங்கு செல்வதைத் தவிர்த்தாள்.
18. அவன் ராஜாவைப் போல இருக்கிறான்
19.அ.அவன் அவளைவிட நல்லவன். (பின்னுருபு)
19.ஆ. அவன் அவளை விட விரும்பவில்லை.
இல்லாமல், அல்லாமல் என்பன முறையே இல், அல் என்ற எதிர்மறை வினைகளின் வினையெச்ச வடிவங்களாகும். இவை எழுவாய் வேற்றுமையின் பின்னர் வந்து பின்னுருபாக இக்கணமயமாக்கம் செய்யும்.
20.அ. பணம் இல்லாமல் வாழ்கையை நடத்த இயலாது.
20.ஆ. அவனிடம் பணம் இல்லை.
21.அ. அவன் அல்லாமல் ஒரு அணுவும் அசையாது.
21.ஆ. இங்கே வந்தது அவன் அல்ல.
4.4. நிரப்புக் கிளவியாக இலக்கணமயமாக்கம் செய்தல்
தொகுஎன் என்ற வினயின் வினையெச்ச வடிவான என்று என்பது நிரப்புக்கிளவியாக இலக்கணமயமாக்கம் செய்யும்.
அவள் பானை உடைந்துவிட்டது என்று கூறினாள்
அவன் நாளை வருவேன் என்று கூறினான்.
5. முடிவுரை
ஹோப்பர் மற்றும் ட்ரோகோட் (Hopper and Traugott, 2003) இலக்கணமயமாக்கத்தின் தொடர்பம் (cline) இருகால உட்குறிப்பையும் ஒருகால உட்குறிப்பையும் கொண்டிருக்கும் என்று கூறுகின்றனர். வடிவுகளும் சொற்களும் காலப்போக்கில் மாறும் இயல்பான பாதையை உருப்படுத்தம் செய்யும். தொடர்பத்தின் ஒரு முனையில் முழு அல்லது சொல் வடிவமும் மறுமுனையில் குறைந்த அல்லது இலக்கண வடிவமும் இருக்குமாறு மனக்கோட்டில் வடிவுகளின் வரிசைமுறையாகக் காண இயலும். ஹோப்பர் மற்றும் ட்ரோகோட் இருகால அல்லது வரலாறுப் பார்வையின் படி சொல்வடிவுகளின் மாற்றங்களை இயல்பான செயல்பாடாகவும் ஒருகாலப் பார்வையின் படி இச்செயல்பாட்டை வரலாறு சார்ந்தது என்பதைவிட தவிர்க்க இயலாதது என்றும் காண இயலும்.
மீள நிகழும் தொடர்பங்களைப் படிப்பதும் ஆணவமாக்கலும் பொதுவாக மொழியியலாளர்களை இலக்கணமயமாக்கத்தின் மற்றும் மொழி மாற்றத்தின் பொதுவிதிகளை உருவாக்குவதை இயலச்செய்கின்றது. மாற்றங்களை ஆணவப்படுத்துதல் மொழி எதிர்காலத்தில் உருவாகும் கிரமத்தை வெளிப்படுத்த உதவ இயலும்.
துணை நூல்கள்
Annamalai, E. 1982. Dynamics of verbal extensions in Tamil. In International Journal of Dravidian Linguistics 11:22-166.
Aitchison, Jean. (2001). Language Change, Progress or Decay? Cambridge: Cambridge University Press.
Haiman, John. (1991) "From V/2 to Subject Clitics: Evidence from Northern Italian" pp 135–158 Approaches to grammaticalization: Focus on theoretical and methodological issues edited by Elizabeth Closs Traugott, Bernd Heine. John Benjamins Publishing 1991.
Heine, Bernd. (1993). Auxiliaries: Cognitive Forces and Grammaticalization. Oxford: Oxford University Press.
Heine, Bernd. (2004). Grammaticalization. In Joseph B.D. and Janda R. D. (eds.). The Handbook of Historical Linguistics. Blackwell Reference Online, Blackwell Publishing Inc.
Heine, Bernd and Kuteva, Tania. 2002. World Lexicon of Grammaticalization. Cambridge: Cambridge University Press.
Hopper, Paul J. (1991). "On some principles of grammaticalization". In Elizabeth Closs Traugott and Bernd Heine, eds. Approaches to Grammaticalization, Vol. I. Amsterdam: John Benjamins,. pp. 17–36.
Hopper, Paul J. and Elizabeth Traugott. 2003. Grammaticalization. Cambridge: Cambridge University Press.
Givon, Talmy. (1971). "Historical syntax and synchronic morphology: an archaeologist's field trip", Papers from the Regional Meetings of the Chicago Linguistic Societv, 1971, 7, 394-415.
Lehmann, C. 2015. Thoughts on grammaticalization (third edition). Berlin: Language science press.
Rangan, K. 1970. Modals as main verbs in Tamil. In Proceedings of the First All India Conference of Linguistics. Poona: Deccan College.
Stever, S.B. 1983. A study in auxiliation: the grammar of indicative auxiliary verb system in Tamil. Unpublished PhD dissertation. Chicago: University of Chicago.1. முன்னுரை

Stever, S.B. 1983. A study in auxiliation: the grammar of indicative auxiliary verb system in Tamil. Unpublished PhD dissertation. Chicago: University of Chicago.