தளவாய் சேதுபதி
தளவாய் சேதுபதி என்கிற இரண்டாம் சடைக்கன் சேதுபதி (ஆட்சிக் காலம்: கி.பி. 1635 - 1645) என்பவர் இராமநாதபுரம் சமஸ்தான மன்னராக கூத்தன் சேதுபதிக்கு அடுத்து ஆட்சிக்கு வந்து 10 ஆண்டுகள் ஆட்சிபுரிந்தார். இவர் கூத்தன் சேதுபதியின் தம்பியாவார்.
வாரிசு உரிமை
தொகுகூத்தன் சேதுபதி மன்னர் இறந்தபோது அவரது இரண்டாவது மனைவியான செம்பிநாட்டு மறப்பெண்மணி அல்லாத மனைவிக்கு பிறந்த தம்பித் தேவர் என்ற மகன் இருந்தார். இராமநாதபுர அரண்மனை வழக்கப்படி சேதுபதி மன்னருக்கு அவரது செம்பி நாட்டு மறவர் குலப் பெண்மணியின் மூலமாகப் பிறந்த மகனுக்கே சேதுபதி பட்டம் உரியதாக இருந்தது. இதனால் தம்பித் தேவரின் அரசுரிமையை மறுத்த இராமநாதபுரம் அரண்மனைப் பெரியவர்கள் கூத்தன் சேதுபதியின் தம்பியான சடைக்கத் தேவரை இரண்டாவது சடைக்கன் சேதுபதியாக அங்கீகரித்துச் சேதுபதி பட்டத்தினை அவருக்குச் சூட்டினர்.
திருமலை நாயக்கருடனான பிணக்கு
தொகுசேதுபதி மன்னருடன் ஏற்பட்ட பிணக்கால், மதுரை திருமலை நாயக்கர், 1639இல் சேதுநாட்டின் மீது தனது தளவாயான இராமப்பையனின் தலைமையில் மிகப்பெரிய படையினை அனுப்பினார். வலிமைவாய்ந்த மதுரைப் படையினைச் சமாளிக்க ஏற்ற இடமாக இராமேஸ்வரம் தீவைக் கருதிய சேதுபதி மன்னர் அங்கு சென்றார். ஆனாலும் மதுரைப் படைகள் பாம்பனிற்கும் மண்டபத்திற்கும் இடையே கடலின்மீது ஒரு பாலம் அமைத்து அதன் வழியாக சென்றன. இதையடுத்து இராமேசுவரம் தீவில் இராமேஸ்வரம் நகருக்கு முன்னதாக உள்ள இன்றைய தங்கச்சிமடத்தில் மோதிய சேதுபதி படைகளை தோற்கடித்த மதுரைப் படைகள் சேதுபதியை சிறைபிடித்து மதுரையில் சிறைவைத்தனர்.
இதன்பிறகு சேதுபதி பட்டத்திற்கு ஏற்கனவே உரிமை கொண்டாடிவந்த கூத்தன் சேதுபதியின் மகனான தம்பித் தேவரை திருமலைநாயக்கர் மறவர் சீமையின் மன்னராக அமர்த்தினார். ஆனால் தம்பித் தேவரை மன்னராக ஏற்றுக்கொள்ள மறுத்தவர்களால் சேதுபதி சீமையில் குழப்பம், கலகம், சீரழிவு போன்றவை ஏற்பட்டன. இதையடுத்து திருமலைநாயக்க மன்னர் இரண்டாவது சடைக்கன் சேதுபதியை 1640இல் விடுவித்துப் போகலூருக்குத் திருப்பி அனுப்பி வைத்தார். இதையடுத்து இரண்டாம் சடைக்கன் சேதுபதி மீண்டும் மன்னராக பொறுப்பேற்றார்.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ எஸ். எம். கமால் (2003). "சேதுபதி மன்னர் வரலாறு/iii. தளவாய் (எ) இரண்டாம் சடைக்கன் சேதுபதி". நூல். சர்மிளா பதிப்பகம். pp. 28–30. பார்க்கப்பட்ட நாள் 21 சூன் 2019.