தமிழ் இலக்கணத்தில் தழிஞ்சி என்பது புறப்பொருள் திணைகளுள் ஒன்றான வஞ்சித் திணையின் ஒரு துறை அல்லது உட்பிரிவு ஆகும். "தழிஞ்சு" என்பது "தழுவுதல்" என்னும் பொருள் தருவது. இங்கே தழுவுதல் என்பது உடலைத் தழுவுதலை அன்றி மறப்பண்பு தழுவுதல், வீரம் தவறாத மானத்தைத் தழுவுதல் போன்ற பொருள்கள் கொண்டது. மதராசுப் பல்கலைக் கழகம் வெளியிட்ட தமிழ் லெக்சிக்கன், தழிஞ்சி என்பதற்கு "போரில் ஆயுதங்களால் தாக்குண்டு கேடுற்ற தன் படையாளரை முகமன்கூறியும் பொருள்கொடுத்தும் அரசன் தழுவிக்கோடலைக் கூறும் புறத்துறை" என்றும் "ஒரு வீரன் தனக்குத் தோற்றோடுவோர்மேற் படையெடாத மறப்பண்பினைக் கூறும் புறத்துறை" என்றும் விளக்கம் கூறுகிறது.

இதனை விளக்க, தனக்குத் தோற்றுப் புறமுதுகு காட்டும் பகைவர் மேல் கூரிய வாளினை வீசாத மறப் பண்பை விரும்பிச் செல்வது[1] என்னும் பொருள்படும் பின்வரும் பாடல் புறப்பொருள் வெண்பாமாலையில் வருகிறது.

அழிகுநர் புறக்கொடை அயில்வாள் ஓச்சாக்
கழிதறு கண்மை காதலித்து உரைத்தன்று

எடுத்துக்காட்டு

தொகு
கான்படு தீயின் கலவார்தன் மேல்வரினும்
தான்படை தீண்டாத் தறுகண்ணன் - வான்படர்தல்
கண்ணியபின் அன்றிக் கறுத்தார் மறம்தொலைதல்
எண்ணியபின் போக்குமோ எஃகு
- புறப்பொருள் வெண்பாமாலை 51.

குறிப்பு

தொகு
  1. இராமசுப்பிரமணியன், வ. த., 2009. பக். 88, 89

உசாத்துணைகள்

தொகு
  • இராமசுப்பிரமணியன், வ. த., புறப்பொருள் வெண்பாமாலை, மீனாட்சி புத்தக நிலையம், மதுரை, 2009.
  • கௌரீஸ்வரி, எஸ். (பதிப்பாசிரியர்), தொல்காப்பியம் பொருளதிகாரம் இளம்பூரணனார் உரை, சாரதா பதிப்பகம், சென்னை, 2005.

இவற்றையும் பார்க்கவும்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தழிஞ்சி&oldid=3850548" இலிருந்து மீள்விக்கப்பட்டது