தாழ்த்தும் வெல்லம்
இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |
தாழ்த்தும் வெல்லம் வெல்ல வகைகளில் ஒன்றே. அல்டிகைடு குழு ஒன்றைக் கொண்டுள்ள அல்லது அல்டிகைடு குழு ஒன்றை சமபகுதியத்தன்மை மூலம் உருவாக்கக்கூடிய சீனி/ வெல்ல வகைகளே தாழ்த்தும் வெல்லங்கள் ஆகும். இவ்வெல்லங்களில் உள்ள அல்டிகைடு குழு இலத்திரன்களை வழங்கி ஏனைய பொருட்களைத் தாழ்த்தும் வல்லமை உடையது. பெனடிக்ட் கரைசல் மூலம் சீனியைச் சோதனை செய்யும் போது தாழ்த்தும் வெல்லங்களே இலகுவில் அடையாளம் காணப்படுகின்றன. அல்டிகைடு அற்ற அல்லது அல்டிகைட்டுக்களைத் தோற்றுவிக்க முடியாத வெல்லங்கள் அமிலத்தால் பிணைப்பு உடைக்கப்பட்ட பின்னரே இச்சோதனையில் நேர் முடிவைத் தருகின்றன. இவ்வாறான சுக்ரோசு போன்ற கீட்டோஸ் குழுவுடைய வெல்லங்கள் தாழ்த்தா வெல்லங்களாகும்.
வேதியியல்
தொகுதாழ்த்தப்படக்கூடிய பொருட்கள் காணப்பட்டால் அல்டிகைடு இலத்திரன்களை இவ்வெல்லங்கள் வழங்கி ஒக்சியேற்றமடையும். அல்டிகைடு உள்ள வெல்லங்கள் அல்டோசு என்றும், கீட்டோன் குழு உள்ள வெல்லங்கள் கீட்டோசு எனவும் அழைக்கப்படும். ஃப்ரக்டோசு போன்ற கீட்டோசு வெல்லங்கள் ஒரு கார ஊக்கியின் கீழேயே அல்டிகைடு குழுவை உருவாக்கி ஏனைய வேதியியல் பொருட்களைத் தாழ்த்துகின்றது.
உதாரணங்கள்
தொகுகுளுக்கோசு, கலக்டோசு, கிளிசரல்டிகைட் ஆகிய ஒருசக்கரைட்டுகளும், மோல்டோசு, லக்டோசு ஆகிய இருசக்கரைட்டுகளும் தாழ்த்தும் வெல்லங்களாகும். மோல்டோசு மற்றும் லக்டோசுக்களின் வளைய மூலக்கூற்றுக் கட்டமைப்பில் அல்டிகைட்டுக்களாகத் திறக்கக்கூடிய தன்மை இருப்பதால் இவற்றுக்கும் தாழ்த்தும் பண்பு உள்ளது. ட்ரெஹாலோசு மற்றும் சுக்ரோசு ஆகிய இருசக்கரைட்டுகளால் அல்டிகைட்டுக் குழுவை உருவாக்க முடியாததால் இவை தாழ்த்தா வெல்லங்களாகும்.
தாழ்த்தும் வெல்லத்துக்கான சோதனை
தொகுநீல நிறமான பெனடிக்ட் கரைசல் அல்லது பீலிங்கின் கரைசல் ஆகியவற்றைப் பயன்படுத்தி தாழ்த்தும் வெல்லங்களுக்கான சோதனையை மேற்கொள்ளலாம். தாழ்த்தும் வெல்லங்கள் இச்சோதனைக் கரைசல்களிலுள்ள Cu2+ அயனை Cu+ அயனாகத் தாழ்த்துகின்றது. இவ்வாறு தோன்றும் Cu+ நீரில் கரையாத Cu2O ஐத் தோற்றுவிக்கும். இது செந்நிற வீழ்படிவாகத் தோன்றி தாழ்த்தும் வெல்லம் கரைசலில் உள்ளதை உறுதிப்படுத்துகின்றது.
சுக்ரோசு (சாதாரண சீனி) ஒரு தாழ்த்தும் வெல்லமல்ல. எனவே நேரடியாக வெல்லச் சோதனைக்குட்படுத்தப்பட்டால் சிவப்பு நிறமாற்றத்தைக் காட்டாது. எனவே இவ்வாறான தாழ்த்தா வெல்லங்கள் ஐதான ஐதரோகுளோரிக் அமிலம் மூலம் நீரேற்றப்பட்டு பின்னர் காரம் (NaOH ஐப் பயன்படுத்தலாம்) ஒன்றின் மூலம் கரைசலை நடுநிலையாக்கி பின்னரே வெல்லச்சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றது.