தாவூதி போரா

தாவூதி போராக்கள் சியா இசுலாத்தின் இசுமாயிலி கிளையினுள் உள்ள ஒரு பிரிவாகும்.

மக்கள்தொகை தொகு

உலகம் முழுவதும் உள்ள 10 லட்சம் தாவூதி போரா முஸ்லிம்களில், சுமார் 9 லட்சம் பேர் இந்தியாவில் வசிக்கின்றனர். தமிழகத்தைப் பொருத்தவரை சென்னையில் இரண்டாயிரம் குடும்பங்களும் கோவை, திருப்பூர், ஈரோடு, திருச்சி, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட இடங்களில் இரண்டாயிரம் குடும்பங்களும் வசிக்கின்றன.

மூலம் தொகு

நான்கு நூற்றாண்டுகள் போரா முஸ்லிம்களின் பீடமாகவும், தாயகமாகவும் இருந்தது யேமன். அங்கிருந்துதான் 700 ஆண்டுகளுக்கு முன் போரா முஸ்லிம்கள் இந்தியாவுக்கு, குறிப்பாக, மும்பைக்கு வந்தனர். இவர்களது ஜமாஅத் பெயர் அஞ்சுமன்-னே-நஜ்மி. 25-வது மத குருவில் இருந்து இந்தியாவில் இம் மதப் பிரிவினரின் சரித்திரம் தொடங்குகிறது.[1] இங்கிலாந்து, அமெரிக்கா, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை, சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகளிலும் போரா முஸ்லிம்கள் வாழ்கின்றனர். அங்கிருப்பவர்களும்கூட இந்தியாவில் இருந்து சென்றவர்கள்தான்.

நிறுவனங்கள் தொகு

போரா முஸ்லிம்களின் சர்வதேசத் தலைமையகம் மும்பையில் உள்ளது. குஜராத்தில் பெரும்பான்மையாகவும் இதர மாநிலங்களிலும் வசிக்கிறார்கள். தாய் மொழி குஜராத்தி. அரபி, ஆங்கிலத்துடன் அந்தந்த மாநில மொழியில் பரிச்சயம் உண்டு.

சென்னையில் உயர் நீதிமன்றத்துக்கு எதிரே பிரம்மாண்டமாக அமைந்துள்ளது போரா முஸ்லிம்களின் மசூதி.

கூடி வாழ்வது, இவர்களின் சிறப்பு. கோவை பீளமேடு ஆவாரம்பாளையம் சாலையில் "புர்ஹானி நகர்' என்ற தனிக் குடியிருப்பே உள்ளது. இவர்களது மசூதி "அல் குத்பி அல் மஸ்ஜித்' என அழைக்கப்படுகிறது.இவர்களது உலக மத குரு தை அல்- முத்லக் என அழைக்கப்படும் டாக்டர் சையத்னா முஹம்மது புர்ஹானுதீன் சாஹிப். 52-வது போரா மத குருவான இவருக்கு வயது 91. இவர் பிறந்தது சூரத்தில். ஆரம்பக் கல்வியைத் தந்தையும், 51-வது மத குருவுமான சையத்னா தாஹிர் சைபுதீன் சாஹிப்பிடம் கற்றார்.

தந்தையின் நினைவாக இவர் உருவாக்கிய டாக்டர் சையத்னா தாஹிர் சைபுதீன் நினைவு அறக்கட்டளையால் ஆயிரக்கணக்கான முஸ்லிம்களும், முஸ்லிம் அல்லாதவர்களும் பயன் அடைந்து வருகின்றனர்.

70-களில் மும்பையில் புர்ஹானி வணிகவியல், கலைக் கல்லூரியை இவர் தோற்றுவித்தார். இன்று இவரது நிர்வாகத்தின் கீழ் உலகம் முழுவதும் 400-க்கும் மேற்பட்ட கல்வி நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.

91-ல் சையத்னாவின் 80-வது பிறந்த நாளை முன்னிட்டு, சுற்றுச்சூழல் ஆராய்ச்சி, விழிப்புணர்வை வளர்க்க புர்ஹானி பவுண்டேஷன் (இந்தியா) நிறுவப்பட்டது. 99-ல் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் வேந்தராகப் பொறுப்பேற்றார் சையத்னா. "நீங்கள் எங்கு வாழ்கிறீர்களோ, அந்தத் தேசத்துக்கு உண்மையாக இருங்கள்' என்பதே போரா முஸ்லிம்களுக்கு இவர் வலியுறுத்தும் நெறி.

அழகிய கடன் தொகு

"புர்ஹானி கரசன் ஹசன்னா' என்ற டிரஸ்ட் மூலமாக தாவூதி போரா முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு வட்டி இல்லாமல் கடன் வழங்கப்படுகிறது. கரசன் ஹசன்னா என்றால் வட்டியில்லாக் கடன் என்று பொருள். அதாவது, இறைவழியில் அழகிய கடன் என்று பொருள்.ஆயிரக்கணக்கான போரா முஸ்லிம்கள் தொழிலிலும் வர்த்தகத்திலும் கொடிகட்டிப் பறக்க இந்த வட்டியில்லாக் கடன் உதவுகிறது.இந்த டிரஸ்ட்டை ஒரு குழு நிர்வகிக்கிறது. மாதந்தோறும் அவரவர் தகுதிக்கு ஏற்ப ஒரு குறிப்பிட்ட தொகையை சந்தாவாக இதற்குச் செலுத்த வேண்டும்.

மூன்று மாத சந்தா செலுத்திய பிறகு, செலுத்திய தொகையைப் போல மூன்று மடங்கு தொகை கடன் பெறலாம். கடன் வாங்குபவரின் திருப்பிச் செலுத்தும் தகுதியை ஆராய்ந்து அதற்கேற்ப 10 முதல் 20 சம தவணைகள் என திருப்பிச் செலுத்தும் காலக் கெடு நிர்ணயிக்கப்படுகிறது. கடன் தவணையுடன் மாத சந்தாவையும் அவர் தொடர்ந்து செலுத்தி வர வேண்டும்.

பெண்களுக்குச் சம உரிமை தொகு

இப் பிரிவு முஸ்லிம்களில் பெண்கள் மசூதிக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள். ஆண்கள் தொழும் அதே நேரத்தில் அதே மசூதியில், ஆனால் தனி இடத்தில் பெண்களும் தொழுகிறார்கள்.

தனி வெண்ணிற உடை தொகு

தொழுகைக்கு ஆண்கள் தூய வெள்ளையில் குர்தா, பைஜாமா, மேல் கோட் போன்ற சாயா ஆடையும், தொப்பியும் அணிந்து வர வேண்டும்.

15 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் கண்டிப்பாக "ரிதா' எனப்படும் புர்கா அணிய வேண்டும். ரம்ஜான், பக்ரீத் உள்ளிட்ட எல்லா இஸ்லாமியப் பண்டிகைகளையும் கொண்டாடுகிறார்கள். மொஹர்ரம் இவர்களுக்கு சிறப்புக்குரிய பண்டிகை. ஆண்டுதோறும் மதகுரு சையத்னாவின் பிறந்தநாள் விழாவை மிகச் சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள்.

மும்பை செல்லும் ஜகாத் தொகு

ஈட்டும் வருவாயில் இரண்டரை சதவீதம் ஏழைகளுக்குத் தர வேண்டிய வரி (ஜகாத்). இது வசூலிக்கப்பட்டு மும்பையில் உள்ள தலைமை அலுவலகத்துக்கு அனுப்பப்படுகிறது. அங்கிருந்து தேவை அடிப்படையில் பல இடங்களுக்கும் பிரித்தளிக்கப்படுகிறது.

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாவூதி_போரா&oldid=3321841" இலிருந்து மீள்விக்கப்பட்டது