திணை மயக்கம்

அகத்திணைப் பாடல்களில் திணை என்பது வாழ்க்கையின் உரிப்பொருளைக் கொண்டு தீர்மானிக்கப்படும்.

இந்த உரிப்பொருள் மயங்குவது இல்லை. [1] முதற்பொருள் நிலம், பொழுது என இருவகைப்படும். இவற்றில் நிலம் மயங்காது. [2] ஏனையவை மயங்கும்.

ஒரு நிலத்துக்கு உரிய பூ வேறு நிலத்தில் பூக்க வாய்ப்பு உண்டு. நெய்தல் பூ மருத நிலத்தில் பூக்கும். ஒரு நிலத்துக்கு உரிய பறவை வேறு நிலந்நிலும் பறக்கும். இப்படி வரும்போது அந்தப் பூவையும், புள்ளையும் அந்தந்த நிலத்தோடு சாரத்திப் பொருள் உணர்ந்துகொள்ளவேண்டும். காலமும் அப்படித்தான். குறிஞ்சி நிலத்துக்கு உரிய யாமம் என்னும் சிறுபொழுதும், கூதிர் என்னும் குளிர்காலமும் பிற நிலங்களிலும் வருமல்லவா? [3] இப்படி வருவதுதான் திணை மயக்கம்.

ஐந்திணைக்கு உரிய எல்லாப் பொருளும் திணைமயக்கமாக வரும் என நாற்கவிராச நம்பி குறிப்பிடுகிறார். [4] இதற்கு எழுதப்பட்ட உரை எந்தப் பொருள் எந்தத் திணையில் மயங்கி வந்துள்ளது என்பதை விளக்கிப், பல மேற்கோள் பாடல்களைத் தந்துள்ளது.

மயங்கி வந்த பாடல்கள்

தொகு
  • நெய்தல் நிலத்தில் முல்லைக்கு உரிய மாலைப் பொழுது [5]
  • பாலைத்திணைப் பாட்டில் மருதத் திணைக்கு உரிய ஊடல் என்னும் உரிப்பொருள். [6]
  • பாலைத்திணைப் பாட்டில் இரங்கல் என்னும் நெய்தல் உரிப்பொருள். [7]
  • முல்லைத்திணைப் பாட்டில் மருதத் திணைக்கு உரிய ஊடல் உரிப்பொருள். [8]
  • முல்லைத்திணைப் பாட்டில் நெய்தல் திணைக்கு உரிய இரங்கல் உரிப்பொருள். [9]

மேலும் சிலவற்றைச் சிற்றட்டகம் மூலத்தில் காணலாம்.

அடிக்குறிப்பு

தொகு
  1. உரிப்பொருள் அல்லன மயங்கவும் பெறுமே - தொல்காப்பியம் களவியல் 15.
  2. திணை மயக்குறுதலும் கடி நிலை இலவே; நிலன் ஒருங்கு மயங்குதல் இல' என மொழிப- புலன் நன்கு உணர்ந்த புலமையோரே - தொல்காப்பியம் அகத்திணையியல் 14
  3. எந் நில மருங்கின் பூவும் புள்ளும் அந் நிலம் பொழுதொடு வாராஆயினும், வந்த நிலத்தின் பயத்த ஆகும் - தொல்காப்பியம் அமத்திணையியல் 21
  4. முத்திறப் பொருளும் தத்தம் திணையொடு
    மரபின் வாராது மயங்கலும் உரிய (நம்பியகப்பொருள் 251)
  5. கறங்கு மணி நெடுந் தேர் கண் வாள் அறுப்ப,
    பிறங்கு மணல்மேல் அலவன் பரப்ப,
    வறம் கூர் கடுங் கதிர் வல் விரைந்து நீங்க,
    நிறம் கூரும் மாலை வரும். (திணைமொழி ஐம்பது 48)

  6. வள மலர் ததைந்த வண்டு படு நறும் பொழில்
    முளை நிரை முறுவல் ஒருத்தியொடு, நெருநல்
    குறி நீ செய்தனை என்ப; அலரே,
    குரவ நீள் சினை உறையும்
    பருவ மாக் குயில் கௌவையின், பெரிதே! (ஐங்குறுநூறு 369)

  7. வெறுக்கைக்குச் சென்றார், விளங்கிழாய்! தோன்றார்;
    ‘பொறுக்க!’ என்றால், பொறுக்கலாமோ?-ஒறுப்பபோல்
    பொன்னுள் உறு பவளம் போன்ற, புணர் முருக்கம்;
    என் உள் உறு நோய் பெரிது! (திணைமாலை நூற்றைம்பது 67)

  8. உதுக்காண் அதுவே: இது என மொழிகோ?-
    நோன் சினை இருந்த இருந் தோட்டுப் புள்ளினம்
    தாம் புணர்ந்தமையின், பிரிந்தோர் உள்ளத்
    தீம் குரல் அகவக் கேட்டும், நீங்கிய
    ஏதிலாளர் இவண் வரின், போதின்
    பொம்மல் ஓதியும் புனையல்;
    எம்மும் தொடாஅல் என்குவெம்மன்னே. (குறுந்தொகை 191)

  9. என்னரே, ஏற்ற துணை பிரிந்தார்? ‘ஆற்று’ என்பார்
    அன்னரே ஆவர், அவரவர்க்கு; முன்னரே
    வந்து, ஆரம், தேம் கா வரு முல்லை, சேர் தீம் தேன்
    கந்தாரம் பாடும், களித்து. (திணைமாலை நூற்றைம்பது 106)

"https://ta.wikipedia.org/w/index.php?title=திணை_மயக்கம்&oldid=1562273" இலிருந்து மீள்விக்கப்பட்டது