திமிலர் என்பவர்கள் சங்ககாலம் தொட்டே தமிழகத்தில் இருந்த மீனவர்கள் குடிகள் ஆவர். திமில் என்பது சங்க காலத் தமிழர் பயன்படுத்திய கடல் நீர் கலங்களுள் ஒன்றாகும். இக்கலத்தை ஓட்டியவர்கள் திமிலர்கள். மதுரைக்காஞ்சியில் மாங்குடி மருதனார் குறிப்பிடும் வன்கைத் திமிலர் என்னும் வரி இவர்களை நிறையுள்ள கலங்கலையும் செலுத்த வல்ல ஆற்றல் உடையவராய் காட்டுகிறது.[1][2]

திமிலர்

திமிலர்களின் சில பழக்க வழக்கங்கள் தொகு

  • திமிலைக் கடலில் விரைந்து செலுத்துவர்.[3][4]
  • திமிலில் சென்று சுறா மீன்களை வாளால் வெட்டுவர்.[5] தூண்டிலிலும் மீன் பிடிப்பர்.[6] மீன் பிடிக்க வில்லையும் பயன்படுத்துவர்.[7] கயிற்றில் கட்டிய உளியை வீசி மீன் பிடிப்பர்.[8]
  • பிடித்து வந்த மீனை மரநிழலில் உறவினர்களுக்குப் பகிர்ந்தளிப்பர்.[9] வேலால் கிழித்துப் பங்கிடுவர்.[10]
  • நெல்லரிசி புளிக் கட்டுச்சோறு கொண்டு செல்வர்.[11]
  • இரவில் செல்வர்.[12] திமிலில் விளக்கு எரியும்.[13] மாடத்திலிருந்து அதனை எண்ணி விளையாடுவர்.[14][15][16] உப்புக் குவியலின்மீது ஏறியும் எண்ணுவர்.[17] சில நாள் செல்வதில்லை [18]
  • திமிலில் அணி அணியாகச் செல்வர்.[19] கரையேறும்போது பெருத்த ஆரவாரம் இருக்கும்.[20]
  • திமிலில் கொண்டுவந்த மீனை மணல் பரப்பில் மீன் எண்ணெய் ஊற்றி எரியும் கிளிஞ்சல் விளக்கொளியில் இரவில் விற்பர்.[21]
  • வலிமையுடைய திண்திமில் என் தந்தையினுடையது, உன்னுடைய தந்தையினுடையது என உரையாடி மகிழ்வர்.[22][23]
  • யானைமீது செல்வது போல் திமிலில் செல்வர்.[24][25]
  • பழைய திமில்களை அழித்துவிடுவர். பழந் திமில் கொன்ற புது வலைப் பரதவர் (அகம் 10)
  • கொற்கைத் துறைமுகத்தில் திமிலில் சென்றவர் மீன் கொண்டுவராமல் முத்துக் கிளஞ்சல்களைக் கொண்டுவருவர். அவர்களைக் கரையில் உள்ளவர்கள் சங்கு ஊதி வரவேற்பர்.[26]
  • சில இரவு வேளைகளில் சூடான மட்டு [27] பருகிக் குரவை ஆடுவதும் உண்டு.[28]

மேற்கோள்கள் தொகு

  1. பரந்தோங்கு வரைப்பின் வன்கைத் திமிலர்
    கொழுமீன் குறைஇய துடிக்கண் துணியல் - மதுரைக்காஞ்சி - 320
  2. ஓங்கு திரைப் பரப்பின் வாங்கு விசைக் கொளீஇ,
    திமிலோன் தந்த கடுங் கண் வய மீன், (அகம் 320)
  3. கரை பொரு முந்நீர்த் திமிலின் போழ்ந்து (புறம் 303)
  4. கடுஞ் செலல் கொடுந் திமில் (அகம் 330)
  5. திமில் மேற்கொண்டு, திரைச் சுரம் நீந்தி, வாள் வாய்ச் சுறவொடு வய மீன் கெண்டி, (நற்றிணை 111)
  6. கடுஞ் சுறா எறிந்த கொடுந் திமிற் பரதவர், வாங்கு விசைத் தூண்டில் (நற்றிணை 199)
  7. நீர்ச் சுரத்து எறிந்து, வாங்கு விசைக், கொடுந் திமிற் பரதவர் கோட்டு மீன் எறிய, நெடுங் கரை இருந்த குறுங் கால் அன்னத்து, வெண் தோடு இரியும் (குறுந்தோகை 304)
  8. திண் திமில், எல்லுத் தொழில் மடுத்த வல் வினைப் பரதவர், கூர் உளிக் கடு விசை மாட்டலின், பாய்பு உடன், கோட் சுறாக் கிழித்த கொடு முடி நெடு வலை (அகம் 340)
  9. கயிறு கடை யாத்த கடு நடை எறி உளித், திண் திமில் பரதவர் ஒண் சுடர்க் கொளீஇ, நடு நாள் வேட்டம் போகி, வைகறைக், கடல் மீன் தந்து, கானற் குவைஇ, ஓங்கு இரும் புன்னை வரி நிழல் இருந்து, தேம் கமழ் தேறல் கிளையொடு மாந்தி (நற்றிணை 388)
  10. கொடுந் திமிற் பரதவர் வேட்டம் வாய்த்தென, இரும் புலாக் கமழும் சிறுகுடிப் பாக்கத்துக், குறுங் கண் அவ் வலைப் பயம் பாராட்டி, கொழுங் கண் அயிலை பகுக்கும் துறைவன் (அகம் 70)
  11. நெடுந் திமில் தொழிலொடு வைகிய தந்தைக்கு, உப்பு நொடை நெல்லின் மூரல் வெண் சோறு, அயிலை துழந்த அம் புளிச் சொரிந்து, கொழுமீன் தடியொடு குறுமகள் கொடுக்கும் (அகம் 60)
  12. திண் திமில் விளக்கில், பல் மீன் கூட்டம் என்னையர்க் காட்டிய, எந்தையும் செல்லுமார் இரவே (அகம் 240)
  13. முந்நீர் நாப்பண் திமில் சுடர் போல, செம்மீன் இமைக்கும் மாக விசும்பின் (புறம் 60)
  14. நெடுங் கால் மாடத்து, ஒள் எரி நோக்கி, கொடுந் திமில் பரதவர் குரூஉச் சுடர் எண்ணவும், (பட்டினப்பாலை 112)
  15. திண் திமில் விளக்கம் எண்ணும் (நற்றிணை 372)
  16. மீன் கொள் பரதவர் கொடுந் திமில் நளி சுடர் வான் தோய் புணரிமிசைக் கண்டாங்கு, (அகம் 65)
  17. உப்பின் குப்பை ஏறி, எல் பட, வரு திமில் எண்ணும் (அகம் 190)
  18. திரை பாடு அவிய, திமில் தொழில் மறப்ப (அகம் 260)
  19. நிரைதிமில் மருங்கில் படர்தரும் துறைவன், (அகம் 210)
  20. நிரை திமில் வேட்டுவர் கரை சேர் கம்பலை, மதுரைக்காஞ்சி 116)
  21. நெடுங் கடல் அலைத்த கொடுந் திமிற் பரதவர், கொழு மீன் கொள்ளை அழி மணல் குவைஇ, மீன் நெய் அட்டிக் கிளிஞ்சில் பொத்திய, சிறு தீ விளக்கில் துஞ்சும், (நற்றிணை 175)
  22. எந்தை திமில், இது, நுந்தை திமில் என, வளை நீர் வேட்டம் போகிய கிளைஞர், திண் திமில் எண்ணும் (நற்றிணை 331)
  23. பல் மீன் வேட்டத்து என்னையர் திமிலே, (குறுந்தொகை 123)
  24. நிரை திமில் களிறாக, திரை ஒலி பறையாக, கரை சேர் புள்ளினத்து அம் சிறை படையாக, அரைசு கால் கிளர்ந்தன்ன உரவு நீர்ச் சேர்ப்ப (கலித்தொகை 149)
  25. இவர், திமில், எறிதிரை (கலித்தொகை 136)
  26. இலங்கு இரும் பரப்பின் எறி சுறா நீக்கி, வலம்புரி மூழ்கிய வான் திமிற் பரதவர், ஒலி தலைப் பணிலம் ஆர்ப்ப, கல்லென, கலி கெழு கொற்கை எதிர்கொள, (அகம் 350)
  27. பாயசம்
  28. திண் திமில் வன் பரதவர், வெப்பு உடைய மட்டு உண்டு, தண் குரவைச் சீர் தூங்குந்து (புறம் 24)
"https://ta.wikipedia.org/w/index.php?title=திமிலர்&oldid=3883089" இலிருந்து மீள்விக்கப்பட்டது