திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் (நூல்)
திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்பது ராபர்ட் கால்டுவெல் என்பாரால் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட A Comparative Grammar of the Dravidian or South Indian Family of Languages என்ற நூலின் தமிழாக்கம் ஆகும் இது தென்னிந்தியாவில் பரந்துள்ள பல்வேறு மொழிகள் தொடர்பான ஒரு ஒப்பீட்டு ஆய்வு நூல் ஆகும். இந் நூல் 1856 ஆம் ஆண்டில் முதன்முதலாக வெளியிடப்பட்டது. தமிழ் மொழிக்கு வெளிநாட்டவர் ஆற்றிய பணிகள் பற்றிப் பேசும்போது முதன்மையாகப் பேசப்படும் நூல்களுள் இதுவும் ஒன்று. திராவிட மொழிகளின் தனித்துவத்துக்கான சான்றுகளை ஒருங்கிணைத்து அனைவரும் ஏற்றுக் கொள்ளத்தக்கதாக நிறுவியமையே இந் நூலின் முக்கியமான சாதனை எனலாம்.
நோக்கம்
தொகுஇந்நூலை எழுதிய கால்டுவெல் தனது நூலின் தொடக்கத்தில் இதன் நோக்கம் பற்றிப் பின்வருமாறு கூறுகிறார்.
- திராவிட மொழிகளின் மிகப் பழைய அமைப்பு முறை அவற்றின் தனிச் சிறப்பு ஆகியவை பற்றி முழு விளக்கங்களையும் பெறுவதற்கான ஆராய்ச்சிக்குத் துணை புரியும் நம்பிக்கையில் அவ்வினப் பல்வேறு மொழிகளின் இலக்கண விதிகளையும் அமைப்பு முறைகளையும் ஆராய்வதும், ஒன்றோடொன்று ஒப்பு நோக்குவதுமே இந் நூலின் நோக்கமாம்.
அத்துடன் மேலும் விளக்குகையில்;
- .......திராவிட மொழிகளுக்குள்ளே மிகப் பழைய காலத்திலேயே திருந்திய நிலை பெற்றதும், நனி மிக நாகரிகம் உடையதாக ஆக்கப் பெற்றதும், பல வகையில் அவ்வின மொழிகளின் பிரதிநிதியாக விளங்குவதுமாகிய தமிழ் மொழியின் அமைப்பு முறை பற்றிய விளக்கங்களைப் பெரும் அளவில் தருவதே இந்நூலாசிரியரின் இடைவிடாச் சிறப்பு நோக்கமாம்.
என்று தமிழ் மொழி பற்றிய தகவல்கள் இந்நூலில் இருக்கும் என்பதைக் கால்டுவெல் கோடிட்டு காட்டுகிறார். இவ்வாறு ஒப்பீட்டு மொழியியல் நூலொன்றிற்கான பொதுவான நோக்கங்களையே ஆசிரியர் எடுத்துக் கொண்டாலும், அவற்றுக்கும் மேலாகத் திராவிட மொழிகள் தொடர்பாக அன்றைய இந்தியாவிலும், அதற்கு வெளியிலும் நிலவிய பிழையான கருத்துக்களை மாற்றவும் இந்நூல் உதவியது.
தமிழ் மற்றும் ஏனைய திராவிட மொழிகள் உட்பட்ட எல்லா இந்திய மொழிகளுக்கும் தாய் சமஸ்கிருதமே எனப் பலரும் நம்பியிருந்த ஒரு கால கட்டத்தில், அதனை மறுத்துத் திராவிட மொழிகளின் தொன்மையையும், சிறப்பையும் தகுந்த சான்றுகளுடன் நிறுவி அவற்றுக்குரிய தனிப் பெருமையை உலகுக்கு உணர்த்திய பெருமையும் இந்நூலைச் சாரும். தமிழ், சமஸ்கிருதத்துக்குப் புறம்பான தனியான ஒரு மொழிக் குடும்பம் என்பது மட்டுமன்றி இம் மொழிகளிலிருந்து சமஸ்கிருதமும், பிற இந்திய-ஆரிய மொழிகள் பலவும் கூட சொற்களைக் கடன் வாங்கியுள்ளன என்றும் இந் நூல் எடுத்துக் காட்டுகின்றது.