திருச்சி பாரதன்

திருச்சி பாரதன் (செப்டம்பர் 30, 1934 - நவம்பர் 26, 2008) எனும் புனைப்பெயரில் கவிதை, கட்டுரைகள் எழுதியவர் ர. தங்கவேலன்.

வாழ்வியல் அறிமுகம் தொகு

இவர் திருச்சிராப்பள்ளியில் கோ. ரங்கசாமி - காமாட்சிக்கு மகனாக 30-9-1934 இல் பிறந்தார். இவர் தமது பள்ளிப் பருவத்தில் திருச்சி வெல்லமண்டியில் சில மாதங்கள் கணக்கராகப் பணிபுரிந்தார். அப்போது இவரது நண்பரும் சிறந்த புதின எழுத்தாளருமான நாதன் எனும் ஐ. சண்முகநாதனின் வழிகாட்டுதலின் பேரில் தினத்தந்தி நாளிதழில் செய்தி ஆசிரியராகப் பணியாற்றினார். தம்முடைய 12 ஆம் வயதிலேயே கையெழுத்துப் பிரதி பத்திரிகை ஒன்றையும் நடத்தினார்.

இரத்தக் கண்ணீர் எனும் படத்தில் வரும்குற்றம் புரிந்தவன்..எனும் பாடலை இயற்றிய கு. சா. கி எனப்படும் கு. சா. கிருஷ்ணமூர்த்தி அவர்களின் மீதுள்ள பற்றினால் அவரைத் தம் குருவாக ஏற்றார். கு. சா. கி தாசன் என்ற பெயரைத் தாமே விரும்பி ஏற்றுக்கொண்டார். 'யாருக்கும் யாரும் அடிமை இல்லை' என்று கூறிய கு. சா. கி திருச்சி பாரதன்என்ற பெயரையும் சூட்டினார். காலப்போக்கில் அப்பெயரே நிலைத்துவிட்டது.[1]

படைப்பு பணிகள் தொகு

இவர் முருகனுக்காக முருகுப்பாவை என்ற நூலை எழுதினார். அகநானூறு போலவே,குகநானூறு, சுகநானூறு ஆகிய நூல்களையும் படைத்துள்ளார். இதில், குகநானூறு நூலுக்காகத் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் ஐந்தாயிரம் ரூபாய் பரிசு வழங்கிச் சிறப்பித்துள்ளது.[2] தமிழ் நாற்பது என்ற நூலையும், முருகப்பெருமான் மீது 1340 இசைப்பாடல்கள் கொண்ட குகன் கீதாஞ்சலிஎன்ற நூலையும் இயற்றியுள்ளார். இவர் படைப்புகளுள் ஒன்றான கந்தன் காவியம் எனும் நாட்டிய நாடகம் 700 முறைக்குமேல் அரங்கேற்றப்பட்டுள்ளது. தமிழக அரசின் கரும்பலகைத் திட்டத்திற்காக இவர் எழுதிய,பூந்தோட்டம்எனும் நூலின் 6000 பிரதிகளை வாங்கிக் கொண்டார்கள். 1955 இல் இவர் எழுதிய அப்பாவின் ஆசைஎனும் குழந்தைகளுக்கான நாடகம் டி.கே.எஸ் கலைக்குழுவால் அரங்கேற்றப்பட்டு தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களிலும் மேடையேற்றப்பட்டது. இந்தியாவிலேயே முதன்முதலில் தொழில்முறையில் குழந்தைகளுக்கான நாடகம் எழுதிய பெருமை இவருக்குண்டு.[3] இவரது பல கவிதைகள் புதுதில்லி சாகித்திய அகாதெமி நடுவண் அரசு நிறுவனத்தால் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன.

விருதுகள் தொகு

தமிழக அரசால், கலைமாமணி விருதும், ஸ்ரீரங்கம் செண்பகத் தமிழ் அரங்கு-500 தமிழ்ப்பெருவிழாவில்,இயற்றமிழ் மாமணிவிருதும், இந்தியப் பல்கலைத் தமிழாசிரியர் மாநாட்டில் நாடகப் பாவலர் விருதும் பெற்றுள்ளார்.

மறைவு தொகு

தமது 75 ஆம் வயதில் 75 படைப்புகளைத் தந்த இவர் 26-11-2008 இல் மறைந்தார்.

மேற்கோள்கள் தொகு

  1. அன்பு,பாலம்- மாத இதழ்'திருச்சி பாரதன் பவளவிழா' சிறப்பிதழ் 03-1-15
  2. ப.முத்துக்குமாரசுவாமி '20 ஆம்நூற்றாண்டில் 100 தமிழ்க்கவிஞர்கள்'- பக்கம்-156.
  3. முனைவர் மா.தாமோதரகண்ணன்' கலைமாமணி கவிஞர் திருச்சி பாரதன்'- அங்குசம் இணைய இதழ்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருச்சி_பாரதன்&oldid=2716658" இலிருந்து மீள்விக்கப்பட்டது