திருச்செல்வர் காவியம்

திருச்செல்வர் காவியம் என்னும் கிறித்தவக் காப்பியத்தை பூலோகசிங்க அருளப்ப நாவலர் என்னும் யாழ்ப்பாணக் கவிஞர் உருவாக்கி 1896இல் வெளியிட்டார். ஈழத்தில் முதன்முதலில் எழுந்த தமிழ்க் கிறித்தவக் காப்பியம் இதுவென்பது அறிஞர் பலரது கருத்தாகும்.

நூலாசிரியர்

தொகு

இந்நூலை ஆக்கியோன், தமது காலத்தில் "கல்வி கேள்விகளில் முதிர்ந்தவரும், கல்விச் சிங்கருமாய்" விளங்கிய "யாழ்ப்பாணம் தெல்லிமாநகரில் வசித்த பூலோகசிங்க முதலியார்" என இந்நூலின் முதலச்சுப் பதிப்பின் முகவுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நூலின் இரண்டாம் பதிப்பு

தொகு

1896இல் வெளிவந்த முதல் பதிப்பின் மூலப் பிரதியை மாற்றம் எதுவுமின்றி, யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் கிறித்தவ மற்றும் இசுலாமிய நாகரிகத்துறைகள் தலைவராக இருந்த ஏ.ஜே.வி. சந்திரகாந்தன் இரண்டாவது பதிப்பாக 1997இல் வெளியிட்டார்.

இரண்டாவது பதிப்பில் "திருச்செல்வர் காப்பியம் அறிமுகம்" என்னும் 19 பக்கங்கள் கொண்ட பகுதி புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. இதில் மூல நூலின் 24 படலங்களுக்கும் சுருக்கமான அறிமுகம் தரப்படுகிறது.

நூலின் கருப்பொருள்

தொகு

இந்நூலில் "திருச்செல்வர்" என்பவரின் வரலாறு புனைவுகளோடு இணைத்து கூறப்படுகிறது. நிலவளமும் நீர்வளமும் மிக்க சிந்து நாட்டை அவினேர் என்றொரு மன்னன் ஆண்டுவந்தான். அவனுக்கு அழகியதோர் ஆண் மகவு பிறந்தது. அக்குழந்தைக்கு "திருச்செல்வன்" என்று பொருள்படும் "சூசேப்பா" என்று பெயரிட்டான்.

திருச்செல்வன் கிறித்தவ மறை பற்றி தெரியவந்தால் எங்கே கிறித்தவனாக மாறிவிடுவானோ என்று அஞ்சிய மன்னன் அவினேர் தன் மகனை அரண்மனைக்குள் அடைத்துவைத்து காவலாளரை நிறுத்தினான். உலகத்தில் நிலவுகின்ற துன்பதுயரங்களைத் தன் மகன் அறியா வண்ணம் அவன் அரண்மனைக்குள்ளேயே எல்லா இன்பங்களையும் அனுபவிக்க வழிசெய்தான். ஆனால் உலகத்தில் பசி, பிணி, சாவு போன்ற தீமைகள் உள்ளன என்று திருச்செல்வன் அறியவருகின்றான். ஒருநாள் வியாபாரி போன்று மாறுவேடம் அணிந்து ஒருவர் திருச்செல்வனை அணுகுகின்றார். வறலாம் என்னும் பெயர்கொண்ட அவர் உண்மையில் ஒரு கிறித்தவத் துறவி. அவர் வழியாக திருச்செல்வன் கிறித்தவனாக மாறுகின்றான்.

இதை அறிந்த அவினேர் சினங்கொண்டு எழுந்து வறலாமைக் கொல்லத் தேடுகின்றான். பல துறவிகளைக் கொல்கின்றான். திருச்செல்வனோ தான் தழுவிய கிறித்தவ மறையை விட்டு விலகப் போவதில்லை என்று உறுதியாக இருந்தான்.

இறுதியில் அரசன் தன் மகனை மகிழ்விக்க என்ன செய்யலாம் என்று ஆலோசனை கேட்டான். அமைச்சன் ஒருவன் கூறுவான்: "நன்மையானாலென்ன, தீமையானாலென்ன, எதை ஒருவன் பற்றிப் பிடித்தானோ அதை மற்றோர் எவரும் மாற்றலரிது. அன்றியும் எந்தச் சமயத்தோரும் அன்பும் நன்றிய்ம் உண்மையும் கொண்டொழுகுவராயின் இறைவன் அவர்க்கு நன்றே செய்வார். மேலும் மைந்தனைத் துன்புறுத்தினால் எதிர்காலம் அரசைப் பரிபாலனம் செய்பவர் யாரென்பதையும் மனங்கொள்ள வேண்டும். எனவே, தங்கள் மைந்தன் சிந்தை மகிழ அரசில் பாதி ஈந்து மணிமுடி சூட்டி அன்போடு அவன் செல்லும் வழியையும் ஆதரிப்பதே தகுந்த அறிவு நெறி ஆகும்."

இதைக் கேட்ட அரசன் அமைதியடைந்தான். தனது மகன் திருச்செல்வனைக் கட்டித் தழுவி, அவனுக்குத் தன் நாட்டில் பாதியைக் கொடுத்தான்.

திருச்செல்வன் தன் தந்தையை நோக்கி, "தந்தையே, கானகம் சென்று கடுந்தவம் செய்து வானகம் பெற வேண்டுமென்றே வாஞ்சையுற்றேன். தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பதால் தங்கள் கட்டளையைச் சிரமேல் கொண்டேன்" என்றான். திருச்செல்வனுக்கு முடி சூட்டப்பட்டது.

சிறிது காலம் அரசாண்ட பின் அபினேர் மன்னனும் கிறித்தவ மறையைத் தழுவினான். பின்னர் துறவு மேற்கொண்டான். திருச்செல்வரும் துறவு பூண்டார். திருச்செல்வருக்குக் கிறித்தவத்தை அறிவித்த வறலாம் உயிர்நீத்து விண்ணகம் ஏகினார். திருச்செல்வரும் இவ்வுலகை நீத்துப் பேரின்ப வாழ்வை அடைந்தார். இவ்வாறு திருச்செல்வர் காவியம் நிறைவுறுகிறது.

கவுதம புத்தரின் புனைவு வரலாறு திருச்செல்வர் கதை ஆயிற்றா?

தொகு

திருச்செல்வர் எனப் பொருள்படுகின்ற "சூசேப்பா" என்னும் பெயரைக் கொண்ட ஒருவருடைய வரலாறு பூலோகசிங்க அருளப்ப நாவலருக்கு எவ்வாறு கிடைத்தது என்பது அந்நூலின் முதல் பதிப்பின் முன்னுரையில் கீழ்வருமாறு குறிப்பிடப்படுகிறது:

சிறந்தவிப் பாரிலே நிறைந்தபல் வளமுஞ் செறிந்து விளங்கும் சிந்து தேசத்திலே, கி.பி. எட்டாம் நூற்றாண்டிலே செங்கோல் செலுத்திய "அபினேர்" என்னும் அஞ்ஞான அரசனுக்கு மைந்தனாய்ப் பிறந்து, இளமையிலேயே அற்புதமாய்ச் சத்தியவேதத்திற் சேர்ந்து, அதனால் நேரிட்ட தடைகளைக் கடந்து, பின்னர் தந்தை முதலியோரையும் சத்திய வேதத்துட் சேர்த்து ஈற்றில் வனஞ்சென்று தவஞ்செய்து மோட்சபாக்கியம் பெற்ற "திருச்செல்வராயன்" சரித்திரத்தை அர்ச்சியசிஷ்ட் தமசேனு அருளப்பர், கி.பி. எழுநூற்று முப்பத்து மூன்றாம் வருடத்திலே மகாத்துமாக்கள் சொல்லக்கேட்டதாய் எழுதி வைத்தனர். அச்சரித்திரத்தைச் சத்தியவேதக் குருமார், தமிழில் மொழிபெயர்த்துக் கொடுக்க, அச்சரித்திரம் உண்மையும் மிக உருக்கமும் உள்ளதென மதித்து, அதனை ஓர் காவியமாகப் பாடின் யாவர்க்கும் இன்பமும் சுவையுமாயிருக்குமென நினைந்து, கல்வி கேள்விகளில் முதிர்ந்தவரும், கவிச்சிங்கருமாய் யாழ்ப்பாணம் தெல்லிமாநகரில் வசித்த "பூலோக சிங்க முதலியார்" என்னும் பெயருடைய "அருளப்ப நாவலர்" யாவரும் மெச்சச் சொற்சுவை பொருட்சுவை செறிய இனிய காவிய ரூபமாக்கினர்.

இங்கே குறிப்பிடப்படுகிற வரலாற்றுப் புனைவு இந்தியாவிலிருந்து மேலை நாடு சென்ற பவுத்த மரபைச் சார்ந்ததாக இருக்கலாம் என்றும் புத்தரின் வரலாறே இங்கு வேறுவடிவத்தில் தோன்றுகிறது என்றும் அறிஞர் கருதுகின்றனர்.

ஆதாரம்

தொகு
  • பூலோகசிங்க அருளப்ப நாவலர், திருச்செல்வர் காவியம், இரண்டாம் பதிப்பு. பதிப்பாசிரியர்: அருட்திரு. கலாநிதி ஏ.ஜே.வி. சந்திரகாந்தன், தலைவர், கிறிஸ்தவ, இஸ்லாமிய நாகரிகத்துறைகள், யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம், திருநெல்வேலி. வெளியீடு: திருமறைக் கலாமன்றம், யாழ்ப்பாணம், 1997. முதல் பதிப்பு: 1896.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருச்செல்வர்_காவியம்&oldid=3175869" இலிருந்து மீள்விக்கப்பட்டது