திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட்

திருத்தந்தை பதினாறாம் ஆசீர்வாதப்பர் (Pope Benedict XVI, திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட்; 16 ஏப்ரல் 1927 – 31 திசம்பர் 2022), உரோமன் கத்தோலிக்க திருச்சபையின் 265வது திருத்தந்தையாக இருந்தவர். இவர் பவேரியா, ஜெர்மனியில் பிறந்தார். இவரது இயற்பெயர் ஜோசப் ராட்ஸிங்கர் என்பதாகும். 2005 ஏப்பிரல் திங்கள் 19 ஆம் நாள் தனது 78 அகவையில் திருத்தந்தையாகப் பொறுப்பேற்றார். தமக்கு முன்னிருந்தவர்களைப் போலவே திருத்தந்தையாகத் தேர்வு செய்யப்பட்டவுடன் பெயர்மாற்றம் செய்துகொண்டார். 2005 ஏப்பிரல் திங்கள் 24 ஆம் நாள் பாப்பரசராக தமது முதல் திருப்பலியை ஒப்புக்கொடுத்தார். 2005 மே திங்கள் 7 ஆம் நாள் புனித யோவான் லாத்தரன் பேராலயத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் முன்னதாக மூனிச் உயர்மறைமாவட்டத்தின் கர்தினால்-பேராயராக செயற்பட்டுவந்தார். இவர் கத்தோலிக்க திருச்சபையின் 264 திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பரின் மறைவினால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பினார் [1]. இவர் 28 பெப்ரவரி 2013இல் உரோம் நேரம் இரவு 8 மணிக்கு தனது திருத்தந்தை பதவியிலிருந்து விலகினார்.[2]

பதினாறாம் பெனடிக்ட்
Benedict XVI
265ஆம் திருத்தந்தை
பதினாறாம் பெனடிக்ட்
ஆட்சி துவக்கம்ஏப்ரல் 19, 2005
ஆட்சி முடிவுபெப்ரவரி 28, 2013
(7 ஆண்டுகள், 315 நாட்கள்)
முன்னிருந்தவர்அருள் சின்னப்பர் II
பின்வந்தவர்பிரான்சிசு
திருப்பட்டங்கள்
குருத்துவத் திருநிலைப்பாடுசூன் 29, 1951
மைக்கேல் வான் ஃபவுல்காபர்-ஆல்
ஆயர்நிலை திருப்பொழிவுமே 28, 1977
ஜோசப் ஸ்டேங்கிள்-ஆல்
கர்தினாலாக உயர்த்தப்பட்டதுசூன் 27, 1977
பிற தகவல்கள்
இயற்பெயர்யோசப் அலோயிசு ராட்ஸிங்கர்
பிறப்பு(1927-04-16)16 ஏப்ரல் 1927
இறப்பு31 திசம்பர் 2022(2022-12-31) (அகவை 95)
மாட்டர் எக்கிளேசிய மடம், வத்திக்கான் நகர்
குடியுரிமைஇரட்டைக் குடியுரிமை: செருமன் மற்றும் வத்திக்கான்
சமயம்கத்தோலிக்க திருச்சபை
பெற்றோர்யோசப் ராட்ஸிங்கர், மரியா ராட்ஸிங்கர்
கையொப்பம்திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட்-இன் கையொப்பம்
ஆசீர்வாதப்பர் என்ற பெயருடைய மற்ற திருத்தந்தையர்கள்

திருத்தந்தை பெனடிக்டின் படிப்பினைகள்

தொகு

இன்றைய உலகில் மக்களின் முழு வளர்ச்சிக்குக் கிறித்தவ சமயம் துணையாக உள்ளது என்னும் கருத்தைத் திருத்தந்தை பெனடிக்ட் வலியுறுத்துகிறார். உலகமயமாக்கும் போக்கு கடவுள் நம்பிக்கையிலிருந்து மக்களைத் திசைதிருப்பி விடும் ஆபத்து உள்ளது என்றும், உண்மையான மதிப்பீடுகளை வாழ்வில் கடைப்பிடிக்கும்போதுதான் மனித வாழ்க்கை வளம்பெறும் என்றும் அவர் எடுத்துரைக்கிறார்.

கிறித்தவ சமயம் பகுத்தறிவுக்கு எதிராகப் போவதில்லை. மனிதர் பகுத்தறிவு கொண்டுள்ளார்கள் என்றால் அப்பகுத்தறிவு கடவுளுக்கு எதிரானதல்ல, மாறாக, அது கடவுள் மனிதருக்கு வழங்குகின்ற கொடை. அக்கொடையை நன்றியோடு ஏற்பது மனிதரின் பொறுப்பு.

கடவுளால் படைக்கப்பட்ட உலகத்தை மனிதர் தம் பகுத்தறிவின் துணைகொண்டு ஆய்ந்து அறிந்து சீரமைக்கும் பொறுப்பு கொண்டுள்ளார்கள். எனவே கடவுள் நம்பிக்கை என்பது மூட நம்பிக்கை அல்ல; மாறாக, மனித பகுத்தறிவுக்கு உகந்ததே கடவுள் நம்பிக்கை. ஆனால், பகுத்தறிவு தன்னால் எல்லாம் கூடும் என்று மமதை கொண்டு, கடவுளின் துணை வேண்டாம் என்னும் போக்கில் போவது தவறு. இப்போக்கினைத் திருத்தந்தை பெனடிக்ட் பகுத்தறிவு மிகைவாதம் (rationalism) என்று அடையாளம் காட்டிக் கண்டிக்கின்றார். மேலும், உண்மை என்று ஒன்று இல்லை எனவும், மனிதர் உண்மையான மதிப்பீடுகளை அடையாளம் கண்டு அவற்றைக் கடைப்பிடிக்க இயலாது என்றும் கூறுகின்ற சூழ்நிலைவாத அடக்குமுறை (dictatorship of relativism) என்னும் கொள்கையையும் அவர் தவறு எனக் காட்டுகின்றார்.

திருத்தந்தை பெனடிக்ட் வெளியிட்ட படிப்பினை ஏடுகள்

தொகு

திருத்தந்தை பெனடிக்ட் பல போதனை ஏடுகளை வெளியிட்டுள்ளார். அவற்றுள் மூன்று சுற்றுமடல்களும் (encyclicals)[3] அடங்கும். அவை கீழ்வருவன:

1) கடவுள் அன்பாய் இருக்கிறார் (God is Love - இலத்தீனில் Deus Caritas Est)[4]:

இது திருத்தந்தை பெனடிக்ட் வெளியிட்ட முதல் சுற்றுமடல். 2005, திசம்பர் 25ஆம் நாள், கிறிஸ்து பிறப்புவிழாவன்று கையொப்பமாகி, 2006, சனவரி 25இல் வெளியிடப்பட்ட இம்மடலில் கடவுளுக்கும் அன்புக்கும் இடையே நிலவும் நெருங்கிய பிணைப்பு விளக்கப்படுகிறது. கடவுள் மனிதரைத் தம் சாயலாகப் படைத்துள்ளார். கடவுளின் உள்ளார்ந்த இயல்பு அன்பு ஆகும். அந்த அன்பு மனிதரின் இயல்பாகவும் உள்ளது. எனவே மனிதர் கடவுளையும் மனிதரையும் அன்புசெய்யும் திறன் கொண்டுள்ளார்கள். மனிதர் காட்டும் அன்புக்கு ஊற்றாகவும் அது நிகழ்வதற்கு வழியாகவும் அமைவது கடவுளின் அன்புதான். கடவுளையும் மனிதரையும் பிணைக்கின்ற இந்த அன்பு மனிதரின் தனி வாழ்விலும், குடும்ப வாழ்விலும், சமூக வாழ்விலும் துலங்க வேண்டும்.

இச்சுற்றுமடலின் முதல் சொற்கள் விவிலியத்திலிருந்து எடுக்கப்பட்டவை: கடவுள் அன்பாய் இருக்கிறார் (1 யோவான் 4:16). மேலும், அன்பில் நிலைத்திருக்கிறவர் கடவுளோடு இணைந்திருக்கிறார். கடவுளும் அவரோடு இணைந்திருக்கிறார் (1 யோவான் 4:16).

பிறரோடு பகிர்தலும் பிறரிடமிருந்து பெறுதலும் அன்பின் இரு அடிப்படைப் பண்புகள் ஆகும். இதுவே கடவுளின் இயல்பு கூட. அவர் தம்மையே மனிதருக்குக் கையளித்து, தம் உறவை மனிதரோடு பகிர்கின்றார். அதே வேளையில் கடவுள் மனிதரிடமிருந்து பெறுகின்ற அன்பில் கடவுள் மகிழ்கின்றார். இந்த இருவகை அன்பு கிரேக்க கலாச்சாரத்தில் eros, மற்றும் agape என்று அறியப்பட்டன. தன்னையே பலியாக்கி அளிக்கும் அன்பு (agape) பிறருக்கு வாழ்வளிக்கும். பிறரிடமிருந்து பெறும் அன்பு (eros) புலன்களுக்கு மகிழ்வூட்டித் திளைக்கச் செய்யும். இவை இரண்டிற்குமே ஊற்று கடவுள்தாம் என்பதால் இவற்றை மனிதர் பிரித்தலாகாது.

2) எதிர்நோக்கால் மீட்படைகிறோம் (Saved by Hope - இலத்தீனில் Spe Salvi)[5]:

இச்சுற்றுமடல் 2007, நவம்பர் 30ஆம் நாள் கையொப்பமிடப்பட்டு வெளியானது. உலகில் ஏற்படுகின்ற துன்பங்களின் நடுவே நம்பிக்கை இழக்காமல் வாழ்வது எப்படி, ஒளிமயமான எதிர்காலத்தை எதிர்நோக்கி வாழ்வது எப்படி என்று இம்மடல் விளக்குகிறது. மனிதர் பிற மனிதரை மதிக்காமல் அடிமைகள்போல நடத்துகின்ற வேளைகளில், காரணமின்றி இழிவுபடுத்துகின்ற வேளைகளில் எதிர்நோக்கு என்னும் நற்பண்பு நம்மிலிருந்து மறைந்துவிடலாகாது. துன்பமும் துயரமும் அநீதியும் அடிமைத்தனமும் ஒருநாள் மறைந்தொழியும் என்பது கிறித்தவம் தருகின்ற நம்பிக்கை, எதிர்நோக்கு. இதைத் திருத்தந்தை பெனடிக்ட் இம்மடலில் விளக்குகின்றார்.

இம்மடலின் கருத்து தூய பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது:நமக்கு மீட்புக் கிடைத்துவிட்டது. எனினும் எதிர்நோக்கும் அளவில்தான் அது கிடைத்துள்ளது. கண்ணுக்குத் தெரிகிறதை நோக்குதல் எதிர்நோக்கு ஆகாது. ஏற்கனவே கண்ணால் காண்கிறதை எவராவது எதிர்நோக்குவாரா? (உரோ 8:24).

3) உண்மையில் தோய்ந்த அன்பு (Love in Truth - இலத்தீனில் Caritas in Veritate)[6]:

இச்சுற்றுமடல் 2009, சூன் 29ஆம் நாள் கையொப்பமிடப்பட்டு, சூலை 7ஆம் நாள் வெளியிடப்பட்டது. இதில் திருத்தந்தை பெனடிக்ட் சமூக நீதி பற்றிப் பேசுகின்றார். இன்றைய உலகில் நிலவுகின்ற சமூக அநீதிகள் பல. ஏழை நாடுகளுக்கும் செல்வம் படைத்த நாடுகளுக்கும் இடையே நிலவும் இடைவெளி அதிகரித்துக்கொண்டே போகிறது. நிதி நிறுவனங்கள் மக்களை ஏமாற்றி செல்வம் குவிக்கின்றன. இலாப நோக்கோடு மட்டுமே வியாபார உறவுகள் ஏற்படுத்தப்படுகின்றன. சுற்றுச்சூழல் மாசடைவது பற்றிப் போதிய விழிப்புணர்வு ஏற்படவில்லை. இத்தகு குறைபாடுகளைக் களைய வேண்டும் என்றால் மனிதரிடையே அன்பு வளர வேண்டும் என்று பெனடிக்ட் அறிவுறுத்துகிறார். அந்த அன்பு உண்மையின் அடிப்படையில் எழ வேண்டும். அப்போதுதான் மக்களிடையே நீதி நிலவும் சமுதாயம் உருவாகும்.

சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தும் சமயத் தலைவர்

தொகு

திருத்தந்தை பெனடிக்ட் நவீன சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றார். வத்திக்கான் நகரிலிருந்து திருத்தந்தையின் உரைகள் யூடியூபில் வெளியாகின்றன. முகநூல் வழியாகவும் வத்திக்கான் செய்தித் தொடர்பில் ஈடுபட்டுள்ளது.

2012 திசம்பர் மாதத்திலிருந்து திருத்தந்தை பெனடிக்ட் டிவிட்டர் வழியாகத் தொடர்பு கொள்கின்றார். 12/12/12 அன்று அவர் அனுப்பிய முதல் டிவிட்டர் செய்தி:

நண்பர்களே, டிவிட்டர் வழி உங்களோடு தொடர்பு கொள்வதில் மிக்க மகிழ்ச்சி. உங்கள் தாராள ஆதரவுக்கு மிக்க நன்றி. உங்களுக்கு என் இதயப்பூர்வமான ஆசியை வழங்குகின்றேன்.

திருத்தந்தை உலகில் பரவலாகப் பேசப்படுகின்ற எட்டு மொழிகளில் டிவிட்டர் செய்திகளை அனுப்பினார். அம்மொழிகள்: எசுப்பானியம், போர்த்துகீசியம், ஆங்கிலம், இத்தாலியம், பிரெஞ்சு, போலிஷ், செருமன், அரபி ஆகியன.

இலத்தீன் மொழியில் டிவிட்டர் செய்தி

தொகு

2013, சனவரி 20ஆம் நாள் திருத்தந்தை முதல் முறையாக இலத்தீன் மொழியில் டிவிட்டர் செய்தி அனுப்பினார்.[7]

"Unitati christifidelium integre studentes quid iubet Dominus? Orare semper, iustitiam factitare, amare probitatem, humiles Secum ambulare"

என்று இலத்தீனில் அனுப்பப்பட்ட அச்செய்தி தமிழில்,

"கிறித்தவர் நடுவே ஒற்றுமை ஏற்பட வேண்டும் என்று உளமார விரும்புவோர் என்ன செய்யவேண்டும் என்று ஆண்டவர் விரும்புகிறார்? இடைவிடாது இறைவேண்டல் செய்க, நீதி நெறியில் ஒழுகுக, நேர்மையான வாழ்வு நடத்துக, ஆண்டவரோடு பணிவுடன் வழிநடந்திடுக."

இலத்தீன் மொழியைப் பேசுவோர் மிகச் சிலரே என்றாலும், எசுப்பானியம், போர்த்துகீசியம், பிரெஞ்சு, இத்தாலியம் உரோமேனியம் ஆகிய மொழிகளைப் பெற்றெடுத்த தாய்மொழி என்னும் பெருமை இலத்தீனுக்கு உண்டு என்பதாலும், பல அறிவியல் துறைகளில் வழக்கத்திலுள்ள கலைச் சொற்கள் இலத்தீனில் உள்ளன என்பதாலும் அம்மொழியைப் பலர் பயின்றுவருகின்றனர்.

திருத்தந்தை பெனடிக்ட் டிவிட்டர் வழியாக 2 மில்லியன் மக்களோடு தொடர்பு கொண்டுள்ளார். இலத்தீன் மொழித் தொடர்பாளர்கள்தான் மிகக் குறைந்த எண்ணிக்கையில், 5000 பேராக உள்ளனர்.

அவருடைய டிவிட்டர் கைப்பிடி "@Ponttifex" என்னும் இலத்தீன் சொல் ஆகும். அதற்கு "இணைப்பாளர்" (= பாலம் அமைப்பவர்) என்று பொருள்.

பணி துறப்பு

தொகு

2013 பிப்ரவரி மாதம் 28ம் தேதியிலிருந்து திருத்தந்தை பதவியிலிருந்து ஓய்வுபெறுவதற்கான விருப்பத்தை வெளியிட்டு அறிக்கை ஒன்றை 11 பிப்ரவரி 2013 அன்று திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் வெளியிட்டார். முதுமை காரணமாக திருத்தந்தைக்குரிய பணிகளை சரியாக ஏற்று நடத்தமுடியா நிலையில் இம்முடிவை எடுத்துள்ளதாகவும், 2005ம் ஆண்டு ஏப்ரல் 19ம் நாள் கர்தினால்கள் அவையால் தன் வசம் ஒப்படைக்கப்பட்ட இப்பொறுப்பிலிருந்து பிப்ரவரி 28ம் தேதி உரோம் நேரம் இரவு 8 மணியிலிருந்து பதவி விலகுவதாக அவ்வறிக்கையில் கூறியிருந்தார். இவர் நடுக்குவாதத்தால் பாதிக்கப்பட்டிருப்பதால் தனது பணிகளை சரியாக ஏற்று நடத்தமுடியா நிலையில் பணி துறப்பு முடிவை எடுத்திருக்கலாம் என்றொரு கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.[8] மேலும் பதினாறாம் பெனடிக்ட், தனக்கு பின் திருதந்தையாக தெரிவு செய்யப்படுபவருக்கு நிபந்தனையற்ற கீழ்ப்படிதலை வாக்களித்தார்.[9]

பணிதுறப்புக்குப்பின்பு வத்திக்கான் நகரின் தோட்டத்திலுள்ள "மாத்தர் எக்லேசியே" (திருச்சபையின் அன்னை) என்னும் துறவு இல்லத்தில் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் தங்கி இறைவேண்டலில் ஈடுபட்டிருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மறைவு

தொகு

முன்னாள் போப் பதினாறாம் பெனடிக்ட் உடல்நலக்குறைவு காரணமாக தனது 95 வயதில் அவரது வாடிகன் இல்லத்தில் 31 டிசம்பர் 2022 அன்று காலமானார்.

கத்தோலிக்க கிறித்தவர்களின் தலைமைப் பொறுப்பான போப் பதவியை சுமார் 8 ஆண்டுகள் வகித்த 16-வது பெனடிக்ட், 2013-ம் ஆண்டில் உடல்நிலையை காரணம் காட்டி பதவி விலகினார். இதன் மூலம் 1415-ம் ஆண்டு 12-வது கிரிகோரிக்குப் பிறகு போப் பதவியில் இருந்து விலகிய முதல் நபரானார்.

16-வது பெனடிக்ட் தமது வாழ்க்கையின் கடைசி ஆண்டுகளை வாட்டிகனில் உள்ள மாத்தர் எக்லெசியா மடாலயத்தில் கழித்தார்.[10]

மேற்கோள்கள்

தொகு
  1. 16ஆம் பெனடிக்ட்
  2. Benedict XVI: The end of a long goodbye
  3. சுற்றுமடல்
  4. "கடவுள் அன்பாய் இருக்கிறார்"
  5. "எதிர்நோக்கால் மீட்படைகிறோம்"
  6. "உண்மையில் தோய்ந்த அன்பு"
  7. திருத்தந்தை பெனடிக்டின் முதல் இலத்தீன் டிவிட்டர் செய்தி
  8. "Pope Benedict XVI to Resign due to Parkinson's Disease". The Descrier. February 11, 2013. பார்க்கப்பட்ட நாள் February 11, 2013.
  9. எதிர்காலத் திருத்தந்தைக்கு என் நிபந்தனையற்ற மரியாதையையும், கீழ்ப்படிதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் - திருத்தந்தை 16ம் பெனடிக்ட்
  10. முன்னாள் போப் பதினாறாம் பெனடிக்ட் காலமானார்