திருத்தொண்டர்கள் அணியின் முதல் கர்தினால்
திருத்தொண்டர்கள் அணியின் முதல் கர்தினால் என்பவர் கத்தோலிக்க கர்தினால்களுல் திருத்தொண்டர்கள் அணியின் மூத்த கர்தினால் ஆவார். திருத்தந்தைத் தேர்தலில் புதிய திருத்தந்தை தேர்வு செய்யப்பட்டப்பின்பு (தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆயராக இல்லாதிருப்பின் கர்தினால் முதல்வரால் அவருக்கு ஆயர்நிலை திருப்பொழிவு செய்யப்பட்டப்பின்பு[1]) அவரின் பெயரை உலகிற்கு அறிவிக்கும் உரிமை இவருக்கு உரியது. Habemus Papam என இலத்தீனில் அறியப்படும் இவ்வறிவிப்பு வத்திக்கான் நகரின் புனித பேதுரு பேராலய உப்பரிகையிலிருந்து அறிவிக்கப்படுவது வழக்கம்.
முக்காலத்தில் திருத்தந்தையின் முடிசூட்டு விழாவில் புதிய திருத்தந்தைக்கு முடிசூட்டி அவருக்கு தோள் துகிலை (pallium) அணிவிக்கும் உரிமையும் இவருக்கு இருந்தது. ஆயினும் 1978இல் திருத்தந்தை முதலாம் யோவான் பவுல் முடிசூட்டு விழாவுக்குப்பதில் பதவியேற்பு விழாவினைக்கொண்டாடினார். அவருக்குப்பின் வந்த திருத்தந்தையரும் இவ்வழக்கத்தையேப் பின்பற்றியதால் முடிசூட்டும் வழக்கம் இல்லாமற்போயிற்று.
உரோமைத் தலைமைக்குருவான திருத்தந்தைக்குப் பதிலாக உயர் மறைமாவட்ட ஆயர்களுக்கு தோள் துகிலை அணிவிக்கவோ அல்லது அதை அவர்களுடைய பதிலாள்களுக்கு அளிக்கவோ இவருக்கு உரிமை உண்டு.[2]