திருமந்திரம் சட்டைமுனி கயிலாயசித்தர் உரை

சட்டைமுனி கயிலாய சித்தர் [1] 16 ஆம் நூற்றாண்டில் வாழந்த ஒரு துறவி. இவர் எப்போதும் சட்டை அணிந்துகொண்டே இருந்ததால் சட்டைமுனி, சட்டமுனி என்றெல்லாம் வழங்கப்பட்டார். அவரது சட்டை கம்பளியாக இருந்தபடியால் கம்பளிச்சட்டைமுனி எனவும் இவரைக் கூறினர். இவர் திருமந்திரம் நூலிலுள்ள 113 பாடல்களை மட்டும் தொகுத்து உரை எழுதியுள்ளார். இந்த 113-ல் 10 பாடல்களுக்கு உரை இல்லை.[2] திருமந்திரம் நூலில் இல்லாத 27 பாடல்களும் இதில் இடம்பெற்றுள்ளன. இவர் எடுத்துக்கொண்ட திருமந்திரப் பாடல்கள் திருமந்திரம் நூலிலுள்ள வரிசை முறையைப் பின்பற்றவில்லை. தமக்கு ஏற்ற முறையில் அடுக்கிக்கொண்டு உரை எழுதுகிறார்.

இவரது உரையில் வரும் 'மூலன் உரை செய்த முப்பது உபதேசம்' என்னும் பகுதி திருமந்திரத்தில் சேர்க்கப்பட்டுள்ள இடைச்செருகல் பாடலைச் [3] சுட்டுகிறது.

திருமூலம் நூலிலுள்ள குழூஉக்குறிகளுக்கும், தெகைக்குறிப்புகளுக்கும் இவரது உரையில் விளக்கங்கள் உள்ளன.

எடுத்துக்காட்டு தொகு

திருமந்திரப் பாடல் [4]

பத்துப் பரும்புலி யானை பதினைந்து
வித்தகர் ஐவர் வனோதகர் [5] ஈர் எண்மர்
அத்தகு மூவர் அறுவர் மருத்துவர்
அத்தலை ஐவர் அமர்ந்து நின்றாரே

இப்பாடலுக்கு இவர் தரும் உரை விளக்கம்

பரும்புலி பத்து - தசநாடி
யானை பதினைந்து - தசவாயு (10), மற்றும் முக்கியன், பிரபஞ்சனன், வயிரம்பு, அந்தர்யாமி, மகாப் பிராணன் (5)
வித்தகர் ஐவர் - இந்திரியம்
விநாயகர் ஈரெண்மர் - அந்தரங்கத்து அட்டமதம் (8), பகிரங்கத்து அட்டமதம் (8) ஆக 16
மூவர் - முக்குணம்
அறுவர் மருத்துவர் - காம குரோத லோப மோக மத மாற்சரியம் (6)
அத்தலை ஐவர் - பஞ்ச பூதம் (5)

அடிக்குறிப்பு தொகு

  1. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1976, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, மூன்றாம் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. பக். 71. 
  2. வெளியீடு - திருவாடுதுறை ஆதீனம் 1954. இந்தப் பதிப்பில் சட்டைமுனி கயிலாய சித்தர் 'கன்னடியத் திருமேனி' உடையவர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
  3. மூலன் உரை செய்த மூவாயிரம் தமிழ்
    மூலன் உரை செய்த முந்நூறு மந்திரம்
    மூலன் உரை செய்த முப்பது உபதேசம்
    மூலன் உரை செய்த மூன்றும் ஒன்றாகுமே (திருமந்திரம் 3046)

  4. திருமந்திரம் 2888, இவரது பாடல் வரிசையில் 81
  5. விநாயகர் - இவர் கொண்டுள்ள பாடம்