திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா என்பது தமிழ்நாட்டில் உள்ள திருவண்ணாமலையில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் நடைபெறும் பழமையானதும், தொன்மையானதுமான தீபத் திருவிழாவாகும். பரம்பொருளான சிவனே, பல வடிவங்களாக அருளுகிறார் என்பதை விளக்கும் ‘ஏகன் அநேகனாகி அநேகன் ஏகனாகுதல்’ என்ற தத்துவத்தை நினைவுகூரும் வகையில் இத்திருவிழா கொண்டாடப்படுகிறது.
கார்த்திகை தீபத் திருவிழாவின் புராணக் கதை
தொகுமுன்பொரு நாள், இந்துக்கடவுள்களான பிரம்மாவிற்கும் விஷ்ணுவிற்கும் இடையே யார் பெரியவர் என்று போட்டி வந்தபோது சிவன் அவர்களிடையே தோன்றி என்னுடைய அடி (பாதம்) மற்றும் முடியை (தலை) முதலில் யார் காண்கிறார்களோ அவர்களே பெரியவர் என தீர்ப்பு கூறி நெருப்பு பிழம்பாக நின்றார். பாதத்தைக்(அடியை) காண பன்றி வடிவமாக சென்ற விஷ்ணுவும், தலையை (முடியை) காண அன்னமாக உருவெடுத்த பிரம்மாவும் இரண்டையுமே காணமுடியாமல் இருவருமே பெரியவர்களில்லை என்று கூறி தங்கள் தோல்வியை ஒப்புக்கொண்டனர். இவ்வாறு சிவன் அவர்களுக்கு நெருப்பு மலையாக காட்சி தந்தது திருவண்ணாமலை என்பதன் நினைவாக இங்கு இந்த தீபத் திருவிழா கொண்டாடப்படுகிறது. ஆனால் இது குறித்து எழுதப்பட்ட வரலாறு ஏதும் கிடையாது.
கார்த்திகை தீபத் திருவிழாவின் பாரம்பரியம்
தொகுதிருவண்ணாமலையில், கார்த்திகைத் தீபத் திருநாள் என்பது பழங்காலத்தில் இருந்தே முக்கியமான நாளாக இருந்ததை சில கல்வெட்டுகள் வழி அறியலாம்.
- கல்வெட்டு எண் 68 என எண்ணிடப்பட்டுள்ள முதலாம் ராஜேந்திரச் சோழனின் 19 ஆம் ஆண்டின் ஆட்சியில் கிட்டத்தட்ட கி பி 1037 இல் திருவண்ணமலையில் கார்த்திகைத் திங்களில் தீபத்திருவிழா சிறப்பாக நடைபெற்றுள்ளது என்பதை "திருவண்ணாமலை உடையார் திருக்கார்த்திகைத் திருநாளில் திருவேட்டை எழுந்தருளி இருந்தால் பெந்திருவவமிர்தமெய்து செய்தருளவும் அடியார்க்குச் சட்டிச்சோறு பிரசாதஞசெய்தருளவும் குடுத்த பொன் ஏழு கழஞ்சில்" என்ற குறிப்பின் வழி அறியலாம். [1] மேலும் இதே மன்னனின் 27ஆம் ஆண்டுக் கல்வெட்டிலும் , முதலாம் ராஜாதிராஜனின் 32ஆம் ஆண்டுக் கல்வெட்டிலும் கார்த்திகைத் திருநாள் தொடர்பான செலவுகளுக்கு இம்மன்னர்கள் அளித்த தானங்களைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளன. ஆனால், இந்த மலை மீது தீபம் ஏற்றப்பட்டது பற்றி மேற்கண்ட சோழர்காலக் கல்வெட்டுகளில் குறிப்புக்கள் கண்டறியப்படவில்லை.[2]
- திருவண்ணாமலை கோவிலை புனரமைத்து பெரிய அளவில் கட்டமைத்த கோயிசாள மன்னரான வீரவல்லாளனின் கல்வெட்டுகளில் பஞ்சபர்வ தீப உற்சவம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
- கல்வெட்டுகளைத்தவிர, இங்குள்ள மடங்களின் குறிப்பு புத்தகங்களிலும், செப்பேடுகளிலும் கார்த்திகை தீபத் திருவிழா குறித்த குறிப்புகளும் இம்மலையின் மேல் தீபம் ஏற்றப்பட்டது பற்றிய குறிப்புகளும் உள்ளன.
இத்தகைய கல்வெட்டு ஆதாரங்கள், செப்பேட்டுச் செய்திகள் ஆகியவற்றை வைத்து, கார்த்திகை திருவிழா சோழர் காலத்திலிருந்து கொண்டாடப்பட்டிருக்கலாம் என்றும் மலை மேல் தீபம் ஏற்றும் நடைமுறை மட்டும் பிற்காலத்தில் ஏற்பட்டிருக்கலாம் என்றும் அரியலூர் அரசுக் கல்லூரியின் முன்னாள் முதல்வரும் வரலாற்றுப் பேராசிரியருமான இல.தியாகராஜன் கண்டறிந்து அவரது கட்டுரை தொகுப்புகளில் கூறியுள்ளார்.[3]
கார்த்திகை தீபத் திருவிழா
தொகுதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மாதம்தோறும் திருவிழாக்கள் கொண்டாடப்பட்டாலும் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். கார்த்திகை மாதம் பௌர்ணமி தினத்தன்று சந்திரன் கிருத்திகை நட்சதிரத்திலிருக்கும்போது கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாடப்படுகிறது. இத்திருவிழா மொத்தமாக 17 நாட்கள் நடைபெறும். இத்திருவிழா 3 நாட்கள் இக்கோவிலின் காவல் தெய்வமான துர்கையம்மன் கோயிலிலும், 10 நாட்கள் அண்ணாமலையார் ஆலயத்திலும், தொடர்ந்து 4 நாட்கள் தெப்பத்திருவிழாவும் நடைபெறும்.[4]
துர்கையம்மன் கோயில்
தொகுகாவல் தெய்வமான துர்க்கையை வழிபட்டு இந்த திருவிழா ஆரம்பிக்கப்படும்.
- முதல் நாள்: இத்திருவிழா "துர்காம்பாள் உற்சவம்" என்று கூறுவர். இன்று இரவு துர்கையம்மன் விமானத்தில் வீதி உலா வருவார்.
- இரண்டாம் நாள்: பிடாரி திருவிழா என்பர். பிடாரி அம்மன் சிம்ம வாகனத்தில் வீதி உலா வருவார்.
- மூன்றாம் நாள்: "விக்னேஷ்வர பூஜை"என்பர். விக்னேஸ்வரர் வெள்ளி மூசிக வாகனத்தில் வீதி உலா வருவார்.
கார்த்திகை தீபத் திருவிழா
தொகு- முதல் நாள் : காலை மூலவர் சந்நிதி முன்பு தங்க கொடிமரத்தில் கொடியேற்றம். பஞ்ச மூர்த்திகள் வெள்ளிவிமானத்தில் புறப்பாடு.
- இரண்டாம் நாள்: காலையில் விநாயகர், சந்திரசேகர் சூரிய பிரபை வாகனத்தில் வீதி உலா வருவார்கள்.
- மூன்றாம் நாள்: காலையில் விநாயகர், சந்திரசேகர் பூதவாகனத்திலும், மாலை பஞ்ச மூர்த்திகள் வெள்ளி விமானத்தில் புறப்பாடு.
- நான்காம் நாள்: காலையில் விநாயகர், சந்திரசேகர் நாக வாகனத்திலும், இரவு வெள்ளி மூஷிகம், மயில், காமதேனு, கற்பகவிருட்சம், ரிஷப வாகனங்களில் பஞ்ச மூர்த்திகள் திரு வீதி உலா வருவர்.
- ஐந்தாம் நாள்: காலையில் விநாயகர், சந்திரசேகர் மூஷிகம், கண்ணாடி ரிஷப வாகனத்திலும், இரவு பஞ்சமூர்த்திகள் திரு வீதி உலா வருவர்.
- ஆறாம் நாள்: வெள்ளித் தேர் திருவிழா என்பர். காலையில் 63 நாயன்மார்களும் மாடவீதி உலா வருவார்கள். இரவு பஞ்சமூர்த்திகள் திரு வீதி உலா வருவர்.[5]
- ஏழாம் நாள்: பெரிய தேர் திருவிழா என்பர். பஞ்சமூர்த்திகளின் திருத்தேர் விருச்சக லக்கனத்தில் தேர் வடம் பிடித்து இழுப்பார்கள்.[6]
- எட்டாம் நாள்: பிச்சாண்டவர் உற்சவம் என்பர். இரவு பஞ்சமூர்த்திகள் குதிரை வாகனத்தில் வருவர்.
- ஒன்பதாம் நாள்: சுவாமி புருஷமிருக வாகனத்தில் உலா வருவார்.இரவு பஞ்சமூர்த்திகள் கைலாய, காமதேனு வாகனங்களில் வீதி உலா வருவர்.
- பத்தாம் நாள்: காலை 4 மணிக்கு பரணி தீபம்.பகல் 12 மணிக்கு பிரம்ம தீர்த்ததில் தீர்த்தவாரி. மாலை 6 மணிக்கு பஞ்சமூர்த்திகள் தங்க விமானங்களில் எழுந்தருளுதல் மற்றும் அர்த்தநாரீஸ்வரர் வருகையை தொடர்ந்து மகா தீபம் ஏற்றுதல்.[7]
தெப்பத்திருவிழா
தொகு- பதினோராம் நாள்:இரவு சந்திரசேகரர் தெப்பத்தில் வருதல்.
- பன்னிரண்டாம் நாள்:பராசக்தி தெப்பத்தில் வருதல்.
- பதின்மூன்றாம் நாள்:சுப்பிரமணியர் தெப்பத்தில் வருதல்.
- பதினான்காம் நாள்:சண்டிகேஸ்வரர் விழா
இவ்வாறு 17 நாட்கள் இத்திருவிழா நடைபெற்று வருகிறது. [8]
மேற்கோள்கள்
தொகு- ↑ "முதலாம் இராஜேந்திர சோழன் – தொகுப்பு 1".
- ↑ "திருவண்ணாமலை தீபம் வரலாறு: பல நூற்றாண்டு கதைகளை சுமக்கும் மகாதீபத்தின் அரிய தகவல்கள்".
- ↑ "கல்வெட்டு ஆய்வாளர் இல. தியாகராஜன்".
- ↑ "தி.மலை கார்த்திகை தீபத் திருவிழா".
- ↑ "திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா 2023 – ஆறாம் நாள் இரவு!".
- ↑ "திருவண்ணாமலையில் களைகட்டும் கார்த்திகை தீபத் திருவிழா: தேரோட்டத்தை காண அலைமோதும் பக்தர்கள் கூட்டம்".
- ↑ "கார்த்திகை தீபவிழாவிற்கு தயாராகும் திருவண்ணாமலை.. அண்ணாமலையார் கோவிலில் பந்தகால்".
- ↑ "கார்த்திகை தீபம்".