திருவாய்மொழி

தமிழ் வைணவ இலக்கிய படைப்பு

பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவரான நம்மாழ்வார் இதனைப் பாடியுள்ளார். திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி ஆகிய வேறு மூன்று நூல்களையும் இவர் பாடியுள்ளார். இவர் 10ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். நம்மாழ்வாரின் பாட்டுடைத் தலைவர் திருமால். இவர் திருமாலைத் தெய்வமாகக் கொண்டு பாடல்களைப் பாடினாலும் பிற சமயக் கோட்பாடுகளையும் மதித்துப் போற்றியவர். நம்மாழ்வாரின் திருவாய்மொழி 1102 பாசுரங்களைக் (பாடல்களைக்) கொண்டது. இதில் பல்வேறு வகையான விருத்தப் பாடல்கள் அந்தாதியாக அமைந்துள்ளன. இவற்றிற்கு ஈடு உரை என்று போற்றப்படும் ஐந்து உரைகள் உள்ளன. இது பாடலின் பொருளாழத்தை நுட்பமாக விளக்குகிறது. இந்நூலின் பாடல்களில் பல அகத்திணைத் துறைகளாக உள்ளன.

திருவாய்மொழியின் கட்டமைப்பு

தொகு

இந்த நூல் 10 பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது., ஒவ்வொன்றும் சுமார் 100 பாசுரங்கள். ஒவ்வொரு நூறு பாடலும் 10 தசாப்தங்களாக ( திருவாய்மொழி ) (பாசுரம் ) பிரிக்கப்பட்டுள்ளது. அந்த பத்தி தசாப்தங்களில் ஒவ்வொரு தசாப்தத்திலும் 10 பாசுரங்கள்.இந்த பாடலின் சிறப்பம்சம் என்னவென்றால் அந்தாதி அடிப்படையில் அமைக்கப்பட்ட பாடல் ஆகும். அதாவது பாடலின் இறுதிச்செல் மற்றும் அடுத்தபாடலின் தொடக்கச்செல் இரண்டும் ஒரே மாதிரி இருப்பது அந்தாதியாகும். இது அனைத்து 1,102 வசனங்களிலும் இந்த அந்தாதி முறை திருவாய்மொழியின் முதல் பாசுரமம் முதலாக இறுதிப் பாசுரமம்.வரையும்  கொண்டு செல்கிறது.

நம்மாழ்வார் “ஆயிரம் பாடல்கள் தமிழ் நில மக்களாலும், இசைக் கலைஞர்களாலும், பக்தர்களாலும் மேலும் வெளிநாட்டிலும் பரவ வேண்டும்” என்று கூறியதாகக் கூறப்படுகிறது. இப்பாடல்களில் விஷ்ணுவே தமிழ் மற்றும் சமஸ்கிருத இலக்கியங்களுக்கு இடையே உள்ள ஒற்றுமையின் அடையாளமாக இருக்கிறார். நம்மாழ்வாருடைய பாடல்களில் விஷ்ணுவை திருமால் அல்லது மாயோன் என்றும் குறிப்பிடுகிறார். விஷ்ணு தமிழில் முல்லை நிலக் கடவுளாக அறியப்படுகிறார்.சமஸ்கிருத புராணங்கள் நம்மாழ்வாருக்குத் தெரியும், அவற்றை அவர் அடிக்கடி குறிப்பிடுகிறார், ஆழ்வார் தமிழ் இலக்கிய நடைபடி. உதாரணமாக திருமாலை நாயகனாக வர்ணித்தத பாடல்கள், ஆழ்வார் தன்னை நாயகியாக வர்ணித்து திருமாலை நாயகனாக வர்ணித்த பாடல்கள் போன்று பல பாடல்கள் பாடப்பட்டுள்ளது. செம்மொழியான தமிழ்க் கவிதைகளை வரைந்து, மரபுகள் பக்தி சூழலுக்கு ஏற்றவாறு அமைந்திருக்கின்றன. [1]

பயன்பாடு

தொகு

பாடல்கள்

தொகு

உயர்வு அற உயர் நலம் உடையவன் எவன்? அவன்
மயர்வு அற மதி நலம் அருளினன் எவன்? அவன்
அயர்வு அறும் அமரர்கள் அதிபதி எவன்? அவன்
துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே

என்பது இந்நூலின் முதல் பாடல். இறைவன் நல்லவன். நல்லறிவை அருளினன். அமரர்க்கும் தலைவன். துயரை அறுக்கும் சுடர். அவனை உள்ளத்தால் வழிபடுகிறேன் – என்கிறார்

மனன் அகம் மலம் அற,மலர்மிசை எழுதரும்

மனன் உணர்வு அளவு இலன், பொறி உணர்வு அவை இலன்

இனன் உணர் முழு நலம், எதிர் நிகழ் கழிவினும்

இனன் இலன் என்னுயிர், மிகுநரை இலனே (1-1-2)

இறைவன் மனமாசுகள் அற்றுப்போக ,மலர்ந்து எழுச்சியுறும் உள்ளுணர்ச்சியால் அளவிட முடியாதவன்,ஐம்பொறிகளால் அறியப்படாதவன்;மூன்று காலங்களிலும் ஒப்பில்லாதவன்.மேம்பட்டவர் இல்லாதவன்;என் உயிரே அவன் !

அவரவர் தமதமது அறிவு அறி வகைவகை
அவரவர் இறையவர் என அடி அடைவர்கள்
அவரவர் இறையவர் குறைவு இலர் இறையவர்
அவரவர் விதிவழி அடைய நின்றனரே (1-1-5)

ஒவ்வொருவரும் அவரவர் அறிவுக்கு எட்டிய இறைவன் திருவடிகளை அடைவார்கள். எந்த இறைவனும் குறையில்லாதவன். அவரவர் விதிப்படி அவரவர் இறைவனை அடைவார்கள்.

உளன் எனில் உளன் அவன் உருவம் இவ் உருவுகள்
உளன் அலன் எனில் அவன் அருவம் இவ் அருவுகள்
உளன் என இலன் என இவை குணம் உடைமையில்
உளன் இரு தகைமையொடு ஒழிவு இலன் பரந்தே. (1-1-9)

இறைவன் உள்ளான் என்றால் உள்ளான். உளனலன் (இல்லை) என்றால் இல்லை. உள்ளவனாகவும், இல்லாதவனாகவும் ஒழிவில்லாமல் எங்கும் பரந்துகிடக்கிறான்.

இல்லதும் உள்ளதும்
அல்லது அவன் உரு
எல்லை இல் அந் நலம் [2]
புல்கு பற்று அற்றே [3] (1-2-4)

ஒளியே அவன் எல்லை. பற்றற்று அவனைப் பற்றிக்கொள்க.
  • நாரை, குயில், அன்னம் முதலானவற்றைத் தூது விடும் பாடல்கள் நான்றாம் திருவாய்மொழியில் உள்ளன.

என் நீர்மை கண்டு இரங்கி இது தகாது என்னாத
என் நீல முகில் வண்ணற்கு என் சொல்லி யான் சொல்லுகேனோ?
நன் நீர்மை இனி அவர்கண் தங்காது என்று ஒரு வாய்ச்சொல்
நன் நீல மகன்றில்காள் நல்குதிரோ? நல்கீரோ? (1-4-6)

சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவில் பெரும் பாழே ஓ
சூழ்ந்து அதனில் பெரிய பர நல் மலர்ச் சோதீ ஓ
சூழ்ந்து அதனில் பெரிய சுடர் ஞான இன்பமே ஓ
சூழ்ந்து அதனில் பெரிய என் அவா அறச் சூழ்ந்தாயே (10-10-10)

அவன் பாழோ, சோதியோ, இனபமோ தெரியவில்லை. என் ஆசையெல்லாம் அவனாகவே சூழ்ந்து கிடக்கிறான் – என்று கூறும் பாடலோடு.

அவாவறச் சூழ் அரியை அயனை அரனை அலற்றி

அவாவற்று வீடுபெற்ற குருகூர்ச் சடகோபன் சொன்ன

அவாவிலந் தந்தாதிகளால் இவையாயிரமும் முடிந்த

அவாவிலந் தாதி பத்தறிந்தார் பிறந்தார் உயர்ந்தே. (10-10-11)

அவா நீங்கும் படி சூந்து வரும் திருமாலை, நான்முகனை, சிவபெருமானைப் போற்றிப் பாடி, அவா நீங்கி வீடு பெற்ற குருகூரின் சடகோபனாகிய நான் சொன்ன அவா நீக்கும் அந்தாதித் தொடையால் அமைந்த இந்த ஆயிரம் பாடல்களை நிறைவு செய்த அவா நீக்கும் அந்தாதியான இந்தப் பத்துப் பாடல்களையும் பாடியவர்கள் வீடு பேறு பெற்று உயர்ந்தார்கள் என்று கூறும் பாடலோடு நூல் நிறைவு பெறுகிறது.

அடிக்குறிப்பு

தொகு
  1. Carman, John; Carman, Research Fellow and Senior Lecturer John; Narayanan, Vasudha; Narayanan, Professor Vasudha (1989-05-17). The Tamil Veda: Pillan's Interpretation of the Tiruvaymoli (in ஆங்கிலம்). University of Chicago Press. p. 20. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-226-09305-5.
  2. ‘எல்லே இலக்கம்’ – தொல்காப்பியம் உரியியல்
  3. ‘பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு – திருக்குறள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருவாய்மொழி&oldid=3959478" இலிருந்து மீள்விக்கப்பட்டது