திருவாவடுதுறை ஆதீனம் மேனிலைப் பள்ளி
திருவாவடுதுறை ஆதீனம் மேனிலைப் பள்ளி என்பது திருவிடைமருதூர் நகரில் பன்னெடுங் காலமாக இயங்கிவரும் பள்ளி ஆகும். 1911 இல் தொடங்கிய இப்பள்ளி நூற்றாண்டு விழா கண்ட பெருமை மிகு பள்ளி ஆகும்.
தோற்றம்
தொகுஇது திருவிடைமருதூர் வடக்குவீதி அரண்மனைக்கு எதிரே 1911 ஆம் ஆண்டு ஆரியன் தொடக்கப் பள்ளியாக தொடங்கப்பெற்றது. அப்போது மராட்டிய மகாராணியாகிய பவானிபாய் சாகேப் அவர்கள் இப்பள்ளியை நடத்திவந்தார். 1922 ஆம் ஆண்டு அவர் இப்பள்ளியைத் திருவாவடுதுறை ஆதீனத்திடம் வழங்கினார்ர். அப்போது இருந்த 19 ஆவது குருமகாசந்நிதானம் அவர்கள் இப்பள்ளியை உயர்நிலைப்பள்ளியாகத் தரம் உயர்த்தினார். அதன்பின் 20 ஆவது குருமகாசந்நிதானம் அவர்கள் திருவிடைமருதூர் புகைவண்டி நிலையம் அருகில் நான்கு ஏக்கர் நிலப்பரப்பில் புதுக்கட்டடங்கள் அமைத்து 1945 இல் திறந்து வைத்தார்கள். 1978 ஆம் ஆண்டு, இப்பள்ளி மேனிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. (1)
பள்ளியில் பயின்றோரில் சிறந்தோர்
தொகு1. ஆர்.ஸ்ரீதர்- மேனாள் ஆளுநருக்கான முதன்மை தனியார் செயலர். 2. ஏர்மார்சல் ஆர்.எசு.நாயுடு. 3. பொதுவுடைமைக் கட்சி முன்னாள் தலைவர் ராமமூர்த்தி. 4.அமெரிக்க மருத்துவ ஆராய்ச்சியாளர் வெங்கட்மணி. 5.புல்லாங்குழல் புகழ் மகாலிங்கம் 6.திரைப்பட பாடலாசிரியர் பிறைசூடன் 7.துப்பறியும் நாவலாசிரியர் தேவன்.
பழைய மாணவர் சங்கம்
தொகுஇப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் TOSA(Thiruvidaimarudur old student Association) என்ற அமைப்பை ஏற்படுத்தியுள்ளனர். இவர்கள் பள்ளிநலனில் அக்கரை கொண்டு பல நற்செயல்களைச் செய்து வருகின்றனர். ஆண்டுதோறும் கல்வியில் சிறப்புறும் மாணவர்கள்,ஏழை மாணவர்கள் எனப் பலருக்கும் ரூபாய் ஒரு இலட்சம் வரை கல்வி உதவித்தொகைகள் வழங்கி வருகின்றார்கள் .மேலும் பள்ளியின் வளர்ச்சிக்கும் பாடுபட்டு வருகின்றார்கள்.
மாணவர்கள் சாதனைகளில் சில
தொகுபேச்சு,விளையாட்டு,ஓவியம் எனப்பல துறைகளில் இப்பள்ளி மாணவர்கள் சாதனை படைத்து வருகின்றனர். விளையாட்டுத் துறை பூப்பந்தாட்டப் போட்டியில் தொடர்ந்து ஆறு முறையாக மாநில அளவில் வெற்றி பெற்று தங்கப்பதக்கம் பெற்றுள்ளனர்.(2) ஓவியர் ரவிவர்மாவின் 162 ஆவது பிறந்தநாள் விழா ஓவியப்போட்டியில் இப்பள்ளி மாணவர்கள் மாநில அளவில் முதல்,இரண்டாமிடம் பெற்று அன்றைய தமிழக ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலா அவர்களிடம் பாராட்டும் விருதும் பெற்றுள்ளார்கள்.(3) 2017 இல் நடைபெற்ற மாவட்ட அளவிலான நூலக விழா,பேச்சு,கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்று இரண்டாமிடமும்,மூன்றாமிடமும் பெற்றுள்ளனர்.(4)
நிர்வாகம்
தொகுதற்போது இப்பள்ளி,திருவாவடுதுறை ஆதீனம் 24 ஆவது ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானம் அவர்களின் அருளாட்சியின்கீழ் சிறப்பாக இயங்கி வருகின்றது.
மேற்கோள்கள்
தொகு1) திருவாவடுதுறை ஆதீனம் மேனிலைப்பள்ளி நூற்றாண்டு விழா சிறப்புமலர் பக்கம்-18. 2) மேலது,பக்கம்-32. 3) மேலது,பக்கம்-35. 4) தினமலர்,தஞ்சைப் பதிப்பு-24-4-17. 5) https://hrce.tn.gov.in/hrcehome/hrce_institutions.php