தி.நா. அறிவுஒளி
இந்த கட்டுரை எந்த பகுப்பிலும் சேர்க்கப்படவில்லை. சரியான பகுப்புகள் தெரிந்தால், சேர்த்து உதவுங்கள் |
புலவர் தி.நா. அறிவுஒளி என்பவர் மறைமலையடிகளால் தொடங்கப்பட்டுப் பின்னர் தேவநேயப் பாவாணர், பெருஞ்சித்திரனார் போன்றோரால் வளர்க்கப்பட்ட தனித்தமிழ் இயக்கத்தில் ஈடுபாடு கொண்டு பணியாற்றியவர். அந்நாளைய இலக்கிய இதழ்களான காஞ்சி, பிரசண்ட விகடன், ஆனந்தபோதினி, தமிழ்ப் பொழில், செந்தமிழ், ஊரும் உலகும், கைகாட்டி, தென்மொழி, தமிழ்ச்சிட்டு, தமிழம், செந்தமிழ்ச் செல்வி, தெளிதழ், வெல்லும் தூயதமிழ் ஆகியவை இவருடைய படைப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுள்ளன. கவிதை, கதை, சிறுகதை, புதினம், நாடகம், இலக்கிய ஆய்வுக் கட்டுரைகள் என ஐம்பதிற்கும் மேற்பட்ட படைப்புகளைத் தனித்தமிழில் பிறமொழிக் கலப்பின்றி நூலாக வெளியிட்டுள்ளார். முன்பு தென்னார்க்காடு மாவட்டம் என்று வழங்கப்பட்ட இன்றைய விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் என்ற ஊரில் பிறந்தவர். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருக்கழுக்குன்றத்தில் பல்லாண்டுகள் மேனிலைத் தமிழாசிரியராகப் பணியாற்றியவர். சென்னை சைதாப்பேட்டையிலுள்ள அரசு மாதிரி மேனிலைப்பள்ளியில் பணியாற்றி ஓய்வுபெற்றார். தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் ‘பாலாற்று வளம்’ என்ற இவருடைய ஆராய்ச்சி நூலை 1982ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளது. இந்நூலை மேனாள் தமிழக முதல்வர் பேரறிஞர் அண்ணா அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க எழுதியதாக நூலின் முன்னுரையில் ஆசிரியர் தெரிவித்துள்ளார். 1991ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு பாவேந்தர் பாரதிதாசன் நூற்றாண்டு விழாவைத் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் கொண்டாடியபொழுது இவருக்குப் ‘பாவேந்தர் விருது’ வழங்கப்பட்டது. 1993ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை இவர் எழுதிய ‘தி.நா. அறிவுஒளி கதைகள்’ என்ற நூலுக்குச் சிறந்த நூலுக்கான இரண்டாம் பரிசை வழங்கியுள்ளது. 1995ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை இவர் எழுதிய ‘இனிமை’ என்ற குழந்தை இலக்கியத்திற்கு மூன்றாம் பரிசை வழங்கியுள்ளது. சென்னைக்கு அருகிலுள்ள மறைமலைநகரில் தமிழ்ஆய்வரங்கம் என்ற அமைப்பை 1981ஆம் ஆண்டு முதல் நிறுவித் தம் இறுதிக்காலம் வரை திங்கள் தோறும் இலக்கியக் கூட்டங்கள் நடத்தினார். மறைமலைநகர் நகராட்சியிலுள்ள 600க்கும் மேற்பட்ட தெருக்களுக்கு நற்றமிழ்ப் புலவர்கள், சங்க கால மன்னர்கள், தமிழறிஞர்கள் பெயரைச் சூட்டினார். 15-01-1934ஆம் ஆண்டு திண்டிவனத்தில் பிறந்த புலவர் தி.நா. அறிவுஒளி அவர்கள் 08-02-2011 ஆம் நாள் மறைமலைநகரில் மறைவுற்றார். அவருடைய மறைவுக்குப் பின் மறைமலைநகர் நகராட்சி நிர்வாகம் அங்கு அவருடைய பெயரை ஒரு சாலைக்குச் சூட்டியுள்ளது. 1500 வெண்பாக்களால் ஆன ‘தென்றல்’ என்ற காவியம், வாழ்வு என்ற தனித்தமிழ்ப் புதினம், தமிழ்த் திறன், சுப்பிரதீபர் வரலாறு, தமிழறிஞர், தி.நா.அறிவுஒளி கட்டுரைகள், பாட்டருவி, எரிமலை வெடிக்கிறது உள்ளிட்ட நூல்களை வெளியிட்டுள்ளார். தமிழறிஞர் மு.வரதராசனார் தாம் எழுதிய ‘தமிழ் இலக்கிய வரலாறு’ என்ற நூலில் இவரைத் தற்காலக் கவிஞர்கள் தலைப்பில் குறிப்பிட்டு இவருடைய கவிதை ஆற்றலைப் பாராட்டியுள்ளார்.