தி. பொ. வேதாசலம்
தி.பொ. வேதாசலம் (1898-1971) சுயமரியாதை இயக்கத் தொண்டராகவும் கொள்கைப் பரப்புநராகவும் திராவிடர் கழகப் பொறுப்பாளர்களில் ஒருவராகவும் இருந்தவர். இவருடைய தந்தையின் பெயர் பொன்னுசாமி; இவருடைய சொந்த ஊர் திருச்சிராப்பள்ளி ஆகும். 1918 இல் சென்னையில் சட்டக் கல்லூரியில் பயிலுங்கால் நீதிக்கட்சித் தலைவர்களாக விளங்கிய டாக்டர் டி.மாதவன் நாயர், சர். பிட்டி தியாகராயச் செட்டியார் ஆகியோருடன் தொடர்பு கொண்டு நீதிக் கட்சிக் கொள்கைகளையும் நோக்கங்களையும் புரிந்து செயல்படத் தொடங்கினார். திருச்சிக்கு டாக்டர் மாதவன் நாயரை அழைத்துக் கூட்டம் நடத்தினார். 1938 ஆம் ஆண்டில் திருச்சியில் இந்தி எதிர்ப்பு மாநாடு நடந்தது.அம் மாநாடு சிறப்புற நடைபெற முன் நின்று உழைத்தார்.பெரியார் ஈ வெ.ரா. பெரியார் திருச்சிக்கு வரும் போது வேதாசலம் இல்லத்தில் தங்குவது வழக்கமாகக் கொண்டிருந்தார். 1949 ஆம் ஆண்டில் திராவிடர் கழகத்தில் ஏற்பட்ட விரிசலில் பெரியாரின் நிலைப்பாட்டை ஆதரித்து அவர் பக்கம் நின்று பெரியாருக்கு உறுதுணையாக இருந்து பணியாற்றினார். தமிழகத்தின் எல்லாப் பகுதிகளுக்கும் தம் சொந்தச் செலவில் பயணம் செய்து சுயமரியாதைப் பரப்புரை ஆற்றினார். திருச்சிப் புத்தூரில் உள்ள பெரியார் மாளிகை என்னும் இடம் இயக்கத்திற்காக வாங்க வேதாசலத்தின் முயற்சி குறிப்பிடத்தக்கது. 1955 இல் திருச்சியில் பெரியாரால் தொடங்கப்பட்ட கல்வி நிறுவனங் களுக்குத் தாளாளராக அமர்த்தப் பட்டார். 1957 ஆம் ஆண்டில் நடந்த சட்ட எதிர்ப்புப் போரட்டத்தில் இயக்கத்தின் நலன் கருதி இவருக்கு விதி விலக்கு அளிக்கப் பட்டது. சில வேறுபாடுகள் ஏற்பட்ட காரணத்தால் வேதாசலம் திராவிடர் கழகத்திலிருந்து நீக்கப் பட்டார். குத்தூசி குருசாமியுடன் இணைந்து 'தமிழ்நாடு சுயமரியாதை இயக்கம்' என்னும் அமைப்பை நிறுவி கொள்கை உறுதியுடன் இறுதி வரை பாடுபட்டார். 1971 அக்டோபர் 10 ஆம் நாளில் இவருடைய மறைவு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பெரியார் இரங்கல் உரை ஆற்றினார்.
உசாத்துணை
தொகுபெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள், பதிப்பாசிரியர் வே.ஆனைமுத்து