தி கிரேட் மைண்ட் சேலஞ்சு, ஐ.பி.எம்

தி கிரேட் மைண்ட் சேலஞ்சு (The Great Mind Challenge) ஒவ்வொரு ஆண்டும் தேசிய அளவில் நடைபெறும் மென்பொருள் தொழினுட்பப் போட்டி ஆகும். பொறியியல் மாணவர்களுக்கான இப்போட்டி தற்போது இந்தியாவில் மட்டுமே நடைபெறுகிறது. இப்போட்டி 2003 ஆம் ஆண்டு தொடங்கி 2012 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து நடைபெற்றுள்ளது. இந்தியாவிலேயே அதிக மாணவர்கள் கலந்து கொண்ட போட்டி என்பதால், 2010 ஆம் ஆண்டில் லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

வரலாறு தொகு

பன்னாட்டுத் கணித் தொழினுட்ப வளர்ச்சியிலும், தகவற் தொழினுட்பத்திலும் முன்னிலை வகிக்கும் ஐ.பி.எம் நிறுவனம் நடத்துகிறது. மாணவர்களைத் தொழினுட்ப வளர்ச்சியில் முன்னேற்றவும், கல்வி நிறுவனங்களுக்கு இற்றைப்படுத்தப்பட்ட மென்மங்களை வழங்கவும் இப்போட்டியை 2003 ஆம் ஆண்டு தொடங்கியது.

இவ்வமைப்பு இணைய வலைவாசலின் வழியாக மென்பொருள்களின் தரவிறக்கம், பயிற்சி தொடர்பான ஆக்கங்கள் ஆகியவற்றை இலவசமாக வழங்குகிறது. ஐ.பி.எம் நிறுவனம் கல்லூரிப் பாடத்திட்டங்களுக்கு ஏற்ப வளங்களை வழங்கி, மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துகிறது. பல்லாயிரக்கணக்கான ,மாணவர்களின் தகவற் தொழினுட்ப மாணவர்களுக்கு தகவற் தொழினுட்பத்தை சிறந்த முறையில் கற்பிக்கவே தி கிரேட் மைண்ட் சேலஞ்சு என்னும் இத்திட்டம் துவங்கப்பட்டது. ஒவ்வோர் ஆண்டும் இப்போட்டியில் பங்கேற்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விவரம் தொகு

ஒரே கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் குழுக்களாய் இணைந்து பங்கேற்க வேண்டும். மெய்ச் சூழல் சிக்கல்களுக்குத் தீர்வு காணும் மாணவர்களை நோக்கியே இத்திட்டம் உருவாக்கப்படுகிறது. இப்போட்டியில் பங்கேற்பவர்கள் கட்டாயம் ஐ.பி.எம் தயாரித்த மென்பொருள்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பது கட்டாய விதி. ஒவ்வொரு குழுவிலும் அதிக பட்சமாக நான்கு மாணவர்கள் கலந்து கொள்ளலாம். [1]

இப்போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் இப்போட்டிக்கான வலைதளத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும். இரு பிரிவுகளாக நடத்தப்படும் இப்போட்டியில் முதற்பிரிவு, அரையிறுதிப் போட்டிக்கானது. வெவ்வேறு ஆண்டுகளில் பயிலும் மாணவர்கள் கலந்து கொள்ளலாம். இதன் முதற்பக்கத்தில் தரமான மென்பொருளுக்கான மென்பொருள் தேவைப்பாடுகளின் குறிப்பை சமர்ப்பிக்க வேண்டும். மற்றோர் பகுதியில், தொழினுட்பம், எக்சு.எம்.எல் பயன்பாடு, உருவாக்கப் பயன்படுத்தும் கருவிகள் ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்படும். உள்ளூர் மொழிகளுக்கான ஆதரவு, வெவ்வேறு கணினிகளில் பயன்படுத்தும் வசதி ஆகியவையும் கணக்கிலெடுத்துக் கொள்ளப்படுகின்றன. சிறப்பான 300 திட்டங்களைச் சமர்ப்பித்தவர்கள் நேருக்கு நேர் சந்திப்பிற்கு அழைக்கப்படுவர். இந்நிகழ்விற்கு குழுவின் அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொள்ள வேண்டும். வல்லுனர்கள் நிரல்வரிகளின் தன்மையை சோதிப்பார்கள். சிறந்த மூன்று திட்டங்களாகத் தேர்ந்தெடுக்கப்படுபவை ஐ. பி. எம் நிறுவனத்தின் பிரபலத் திட்டங்களின் அறையில் சேமிக்கப்படுகின்றன. சிறந்த 20 திட்டக் குழுக்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். இப்போட்டி முடியும்வரையிலான அனைத்து விதமான உதவிகளும் இணைய வழியில் வழங்கப்படுகின்றன. இந்தியாவில் இணையவழிக் கல்வித் திட்டங்களில் இதுவே பெரியதும் ஆகும்.

மேற்கோள்கள் தொகு