துக்கப்பாட்டு

துக்கப்பாட்டு என்பது உலகத்தையும் அதில் வாழ்கின்ற மனிதர்களையும் பாவத்திலிருந்தும் சாவிலிருந்தும் விடுதலை செய்வதற்காக இயேசு கிறிஸ்து துன்பங்கள் அனுபவித்து, சிலுவையில் உயிர்துறந்த நிகழ்ச்சியைக் கிறித்தவ மக்கள் பாடலாக இசைத்து நினைவுகூர்வதாகும். தவக்காலம் (மார்ச்-ஏப்ரல்) எனப்படுகின்ற நாற்பது நாள் காலத்தில் இப்பாடல்களை வீடுகளிலும் கோவில்களிலும் கிறித்தவர் பாடுவது ஒரு பழங்கால மரபு ஆகும். தமிழகத்திலும் இலங்கையிலும் இப்பழக்கம் உண்டு.

இயேசு அனுபவித்த துன்பங்கள்

தொகு

இயேசு அனுபவித்த துன்பங்கள் அவரது வாழ்வின் இறுதிக் கட்டத்தை மையமாகக் கொண்டவை. தாம் விரைவில் இறக்கப் போவதை முன்னுணர்ந்த இயேசு கெத்சமனி என்றழைக்கப்பட்ட ஒலிவ மலைக்குச் சென்று இறைவேண்டலில் ஈடுபட்டார். உருக்கமாய் வேண்டிக்கொண்டிருந்த இயேசு மிகுந்த வேதனைக்குள்ளானார். அப்போது அவர் வியர்வை பெரும் இரத்தத் துளிகளைப் போலத் தரையில் விழுந்தது. இயேசுவின் எதிரிகள் அவரைக் கைதுசெய்து, யூத சமயத் தலைவர்கள் முன்னும் உரோமை ஆளுநர் பிலாத்து என்பவர் முன்னும் இழுத்துச் சென்றார்கள். அவரை ஏளனம் செய்து நையப் புடைத்தார்கள். அவரைக் கன்னத்தில் அறைந்தார்கள்.

படைவீரர்கள் இயேசுவின் தலைமீது முள்முடி சூட்டினார்கள். அவர்மேல் செந்நிற மேலுடையைப் போர்த்தினார்கள். அவர் தம்மை "யூதர்களின் அரசர்" என்று அறிவித்ததாகக் கூறி, அவரை ஏளனம் செய்தார்கள். "அவனைச் சிலுவையில் அறையும்" என்று மக்கள் கும்பல் உரக்கக் கத்தியதைக் கேட்டு, கோழை பிலாத்து அவரைச் சிலுவையில் அறையும்படி கையளித்தான்.

இயேசு தம் தோள்மேல் சிலுவையைச் சுமந்துகொண்டு கல்வாரி மலைநோக்கி நடந்துசென்றார். வ்ழியில் மீண்டும் அவரை ஏளனப்படுத்தினார்கள். சாட்டைகளால் அடித்தார்கள். கல்வாரியை அடைந்ததும் இயேசுவைச் சிலுவையில் அறைந்தார்கள். அத்துன்ப வேளையிலும் இயேசு தம்மைத் துன்புறுத்தியவர்களை மனதார மன்னித்தார்: "தந்தையே, இவர்களை மன்னியும்" என்று இறைவனை நோக்கி வேண்டினார்.

இறுதியாக, "தந்தையே, உம் கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன்" என்று கூறி உயிர் துறந்தார். இவ்வரலாற்றைப் புதிய ஏற்பாட்டுப் பகுதியாகிய நான்கு நற்செய்தி நூல்கள் (மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான்) விரிவாகப் பதிவுசெய்துள்ளன.

பாடல்களின் வரலாறு

தொகு

இயேசுவின் துன்பங்களையும் சாவையும் நினைவுகூர்கின்ற பாடல்கள் பல உண்டு. அவற்றுள் பல மத்திய காலத்தில் தொகுக்கப்பட்டன. தமிழில் இப்பாடல்கள் கடந்த மூன்று நூற்றாண்டுகளாக வழக்கத்தில் உள்ளன. இயேசுவின் துன்பங்கள் பற்றிய பாடல்கள் பலவற்றை வீரமா முனிவர் இயற்றினார். இன்று பொதுமக்கள் பயன்படுத்தும் ஒரு பாடல் இதோ:

இந்தப் பாரச் சிலுவையை - சுவாமி
எங்கே சுமந்து போகிறீர்?
ஏலாமல் நடுநடுங்கியே - சுவாமி
நீசப் பாவிபோல் ஒடுங்கியே

கண்ணதாசன் பாட்டு

தொகு

இயேசுவின் வரலாற்றைக் கவிதையாய் வடித்த கவியரசு கண்ணதாசன் இயேசு அனுபவித்த துன்பங்களை உருக்கமாகப் பாடுகின்றார்.

கால்கள் தள்ளாட, கண்கள் ஒளியிழந்து பார்வை மங்க, பசியும் தாகமும் உடலை வாட்டி வதைத்த போதிலும் இயேசு முன்வைத்த காலைப் பின்னெடுக்காமல் சிலுவையைச் சுமந்து செல்கின்றார். தம் திருமகனின் நிலைகண்டு கதறி அழுகிறது தாய் உள்ளம். கவினிழந்த தம் கண்மணியின் திருமுகம் கண்ட தாயின் உணர்வுகளைச் சித்தரிக்கிறார் கவிஞர்:

"பதினாலாம் நாள்நிலவைப் பால்நிலவைத் தன்வயிற்றுப்
பனியைத் தேனைப்
புதனோடும் வியாழனொடும் பொருந்துகின்ற மதியழகைப்
பூப்போற் கண்ணை
மதலையிலே பார்த்திருந்த மாதாஇவ்
வடிவம் பார்த்தாள்
முதலைகளின் வாய்பட்டுச் சிதைவுற்ற தன்மகனின்
முகத்தைக் கண்டாள்"

(இயேசு காவியம், பிரிவு 136)

உசாத்துணை

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=துக்கப்பாட்டு&oldid=4041139" இலிருந்து மீள்விக்கப்பட்டது