துணை காந்தப் பொருட்கள்
சில பொருட்கள் வெட்ட வெளியை விட சற்றே குறைந்த அளவு காந்த ஊடுமை பெற்றிருக்கும். அவற்றை எதிர்காந்தப் பொருட்கள் என வழங்குவர். பிசுமுத்து, வெள்ளி, செம்பு, நீர், காற்று ஆகியவை எதிர் காந்த பொருட்களுக்கு சான்று. வெட்ட வெளியை விட சற்றே மிகுந்த அளவு காந்த ஊடுமை பெற்ற பொருட்களே துணைக் காந்தப் பொருட்கள். உதாரணம் பிளாட்டினம், அலுமினியம் ஆகியவை. மேலும் சில பொருட்கள், வெட்ட வெளியை விட பல மடங்கு அதிக காந்த ஊடுமை பெற்றிருக்கும். அவையே இருப்புக் காந்தப் பொருட்கள் எனப்படும். இதன்படியே காந்தப் பொருட்கள் வகைபடுத்தப் படுகின்றன.[1]
துணை காந்தப் பொருட்களின் காந்தப்புலம்
தொகுஓரணுவின் எதிர்மங்களில் தற்சுழற்சி, நீள் வட்டப்பாதை சுழற்சி ஆகியவற்றின் நிகரக் காந்த விளைவே அவ்வணுவின் காந்தத் தன்மையைத் தீர்மானிகிறது. ஓரணுவின் எதிர்மங்களின் சுழற்சிகளின் நிகரக் காந்த விளைவு சுழியாக இருப்பின் அவ்வணுவாலாய தனிமம் காந்தமல்லாப் பொருளாக விளங்கும். துணை காந்தப் பொருட்களின் அணுக்கள் அல்லது மூலக்கூறுகள் ஒவ்வொன்றிலும் எதிர்மங்களின் சுழற்சிகளின் நிகர காந்த அளவு மிக மிகச் சிறிய அளவில் இருக்கும். இப்பொருட்களை ஒரு காந்தப் புலத்தில் வைத்தால் காந்தப் புலத்தின் திசையில் இன்னொரு காந்தப் புலத்தைத் தோற்றுவிக்கும் வகையில் இவற்றின் அணுக்கள் அல்லது மூலக்கூறுகள் திருப்பப் படும். ஒரு காந்தப் புலத்தில் ஒரு புள்ளியில் காந்தவரி அடர்த்தியை அளந்து, அந்த காந்தப்புலத்தில் பிளாட்டினம், அலுமினியம் ஆகியவற்றுள் ஏதாவது ஒன்றாலான ஒரு பொருளை வைத்த பின்னர் முன் அளந்த அதே புள்ளியில் மீண்டும் காந்தவரி அடர்த்தியை அளந்து பார்த்தால், அதன் மதிப்பு முன்பு கிடைத்த மதிப்பை விட சற்று அதிகமாக இருப்பதைக் காணலாம். எனவே இவை துணை காந்தப் பொருட்கள் ஆகின்றன.[1]