தென்னிந்திய சிறு நீல மீன்கொத்தி

பறவை கிளை இனம்

தென்னிந்திய சிறு நீல மீன்கொத்தி (அறிவியல் பெயர் : Alcedo atthis taprobana) என்பது சிரல் எனப்படும் சிறு நீல மீன்கொத்தியின் கிளை இனங்களில் ஒன்று ஆகும்.[1] தென்னிந்திய சிறு நீல மீன்கொத்திகள் தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் இனப்பெருக்கம் செய்து வாழ்கின்றன.

விளக்கம்

தொகு

தென்னிந்திய சிறு நீல மீன்கொத்திகள் சிட்டுக்குருவியை விடச் சற்றுப் பெரியவை. இவை சுமார் 18 செ.மீ. நீளம் இருக்கும். இவற்றின் அலகு ஐந்து செ.மீ நீளமாகவும், கறுப்பு நிறத்திலும் இருக்கும். இவற்றின் விழிப்படலம் பழுப்பாகவும், கால்கள் பவளச் சிவப்பாகவும் இருக்கும். உடலின் மேற்பகுதி நல்ல நீல நிறமாகப் பசுமை தோய்ந்த நிறத்தில் காணப்படும். அலகின் அடிபுபகுதியிலிருந்து ஒரு பசுங்கோடு கழுத்தின் பக்கங்களில் செல்லக் காணலாம். காதுகளின் மேல் வெள்ளைப் பகுதி காணப்படும். தலையும் கழுத்தும் சற்றுக் கறுத்துக் காணப்படும். உடலின் அடிப்பகுதி துருச் செந்நிறமாகவும், கீழே பழுப்பாகவும் இருக்கும்.[2]

பெண் பறவை ஆண் பறவை போன்றே காணப்படும் என்றாலும் அதன் அலகின் அடிப்பகுதி சற்று ஆரஞ்சு நிறம் தோய்ந்திருக்கும்.

நடத்தை

தொகு

தென்னிந்திய சிறு நீல மீன்கொத்திகள் நீர்வளம் மிக்கப் பகுதிகளில் தனித்துக் காணப்படும். தாழ்வான மரக்கிளையிலோ, வரப்பிலோ, கற்களின்மீதோ, அமர்ந்து நீரின்மேல் பாய்ந்து தன் அலகால் மீனைக் கொத்திச் சென்று மீண்டும் சென்று அமர்ந்து பிடித்துவந்த மீனை விழுங்கும். இதன் நீளத்தில் பாதி உள்ள மீனைக் கூட பிடித்துவந்து தலையை அப்படியும் இப்படியும் ஆட்டி மீனைச் செயலிழக்கச் செய்து விழுங்கும். சில சமயங்களில் உலங்கு வானூர்தியைப் போல நீர்ப்பரப்பின் மீது முன் பின் செல்லாது ஓரே இடத்தில் ஆடாது அடையாது பறந்து பின் நீரில் பாய்ந்து மீனைப் பிடிப்பதும் உண்டு. இவ்வாறு நீரில் இருந்து இரண்டு முதல் மூன்று மீட்டர் உயரத்திலேயே பறக்கும். இதன் முக்கிய உணவாக மீன், தவளை, நீர் வாழ் புழு பூச்சிகள் போன்றவை ஆகும்.[2]

இடம் விட்டு இடம் செல்லும்போது ச்சிச்சீ, ச்சிச்சீ என கத்தியபடியே பறந்து செல்லும்.

இவை மார்ச் முதல் மே முடிய இனப்பெருக்கம் செய்கின்றன. ஆறங்கரைகளில் நீளவாக்கில் வாங்கு செய்து இறுதியில் அறை அமைத்து அதில் முட்டை இடுகின்றன. வாங்கு ஒரு மீட்டர் நீளம் வரை செல்லும். இவை நான்கு முதல் ஆறு வரையிலான வெண்மையான முட்டைகளை இடும். ஆண் பெண் என இரு பறவைகளும் அடைகாத்து குஞ்சுகளைப் பராமரிக்கின்றன.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. Gill, Frank; Donsker, David, eds. (2017). "Rollers, ground rollers & kingfishers". World Bird List Version 7.2. International Ornithologists' Union. பார்க்கப்பட்ட நாள் 17 May 2017.
  2. 2.0 2.1 2.2 க. ரத்தினம், தென்னிந்தியப் பறவைகள். சென்னை: தமிழ்நாடு பாடநூல் நிறுவனம். 1973. pp. 294–296.