தெய்வம் (பழந்தமிழ்)

கடவுளுக்கு கற்பிக்கப்பட்ட உருவங்களை தெய்வம் என்கிறோம்.

கடவுளுக்குக் கற்பிக்கப்பட்ட உருவங்களைத் தெய்வம் என்கிறோம்.
தெய்வம் என்னும் சொல் 'தெய்' என்னும் உரையசைக் கிளவியிலிருந்து தோன்றியது.
அண்டவெளியில் உள்ள அனைத்துப் பொருள்களும் ஒன்றோடொன்று உரசித் தேய்வதில் உயிரோட்ட ஆற்றல் பிறக்கிறது. இந்தத் தேய்தலில் பிறக்கும் ஆற்றலைத் தேய்வு < தேய்வம் < தெய்வம் என்றனர்.

இருபெருந் தெய்வம்தொகு

பலராமன், திருமால்
 • பால்நிறத் தெய்வம் பலராமன், நீலநிறத் தெய்வம் திருமால் ஆகிய இருவரையும் இருபெருந் தெய்வங்கள் எனக் குறிப்பிட்டு சோழமன்னன் ஒருவனையும் பாண்டிய மன்னன் ஒருனையும் அந்த இருபெருந் தெய்வங்கள் போல விளங்கியதாக ஒரு பாடல் குறிப்பிடுகிறது.[1]
சிவன், திருமால்
 • அந்தி வானமும் கடலும் சிவப்பும், நீல நிறமும் கொண்டு விளங்கியது இது சிவபெருமானும் திருமாலும் ஒருங்கு இருப்பது போல் தோற்றமளிப்பதாக ஒரு பாடல் குறிப்பிடுகிறது.[2]
 • அம்மையப்பர் தோற்றத்தை நற்றிணைப் பாடல் ஒன்று இருபெருந் தெய்வம் எனக் குறிப்பிடுகிறது.

நாற்பெருந் தெய்வம்தொகு

 • தொல்காப்பியம் மாயோன், சேயோன், வேந்தன், வருணன் என்னும் தெய்வங்களை நானிலத் தெய்வங்களாகக் காட்டுகிறது.[3]
 • ஞாலம் காக்கும் நால்வர் பற்றியும், அவர்களது தோல்வி காணாத ஆற்றல் பற்றியும் புறநானூற்றுப் பாடல் ஒன்று குறிப்பிடுகிறது.[4]
 1. காளைமாட்டின்மேல், விரிந்த தீ நிறச் சடை, கையில் சூலம்,நஞ்சுண்ட நீலநிறத் தொண்டை ஆகியவற்றுடன் தோன்றும் சிவனாகிய கூற்றுவன் சீற்றம் கொள்வதில் ஈடு இணை அற்றவன்.
 2. கடல் சங்கு போன்ற வெண்ணிறமு, யாஞ்சில் என்னும் உழுபடை, பணைமரச் சின்னம் பொறித்த கொடி ஆகியவற்றுடன் விளங்கும் பலராமன் வலிமையில் சிறந்து விளங்குபவன்.
 3. கழுவிய நீலமணி போன்ற மேனிநிறமு, கருடப் பறவைச் சின்னம் பொறித்த கொடி, ஆகியவற்றைக் கொண்ட திருமால் ஆகியவற்றுடன் பகைவரை வெல்லும் புகழில் மேலோங்கி நிற்பவன்.
 4. மயிலைக் கொடியாகவும், ஊர்தியாகவும் கொண்டு விளங்கும் முருகன் நினைத்ததைச் செய்து முடிக்கும் ஆற்றலில் சிறந்து விளங்குபவன்.
 • திருமுருகாற்றுப்படை முருகனின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான ஆவினன்குடி (பழனி, பொதினி) என்னும் ஊரினை புள்ளணி நீள்கொடிச் செல்வன் (திருமால்), மூவெயில் முருக்கிய செல்வன் (சிவன்), நான்கு கொம்பு யானை ஏறிய செல்வன் (இந்திரன்), தாகரை பயந்த நான்முக ஒருவன் (பிரமன்) என்னும் நாற்பெருந் தெய்வம் பேணிவந்ததாகக் குறிப்பிடுகிறது.[5]

திருக்குறளில் தெய்வம்தொகு

 • தெய்வம் என்பது உடலில் உயரோடு பூத்துக் கிடக்கும் ஊழ் [6]
 • தெய்வம் வானம் என்னும் மழையாக உறைகிறது[7]
 • குறிப்பறிந்து நடந்துகொள்பவனைத் தெய்வத்துக்கு ஒப்பாகக் கொள்ளவேண்டும்.[8]
 • இல்வாழ்வான் ஓம்பிப் பாதுகாக்க வேண்டிய ஐவருள் ஒருவர் தெய்வம்.[9]
 • வாழ்க்கைத் துணைவிக்கு வாழ்க்கைத் துணைவனே தெய்வம்[10]
 • குடும்பத்தைக் காப்பாற்றுபவனுக்குத் தெய்வம் தானே முன்னின்று உதவும்[11]

சங்கப்பாடல்களில் தெய்வம்தொகு

அடிக்குறிப்புதொகு

 1. பால் நிற உருவின் பனைக் கொடியோனும்,
  நீல் நிற உருவின் நேமியோனும், என்று
  இரு பெருந் தெய்வமும் உடன் நின்றாஅங்கு, (காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக் கண்ணனார் பாடல் புறநானூறு 58)
 2. வெருவரு கடுந் திறல் இரு பெருந் தெய்வத்து
  உரு உடன் இயைந்த தோற்றம் போல,
  அந்தி வானமொடு கடல் அணி கொளாஅ - அகநானூறு 360
 3. மாயோன் மேய காடுறை உலகமும்
  சேயோன் மேய மைவரை உலகமும்,
  வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
  வருணன் மேய பெருமணல் உலகமும்
  முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் - தொல்காப்பியம் அகத்திணையியல்

 4. ஏற்று வலன் உயரிய எரி மருள் அவிர் சடை,
  மாற்று அருங் கணிச்சி, மணி மிடற்றோனும்;
  கடல் வளர் புரி வளை புரையும் மேனி,
  அடல் வெந் நாஞ்சில், பனைக் கொடியோனும்;
  மண்ணுறு திரு மணி புரையும் மேனி, 5
  விண் உயர் புள் கொடி, விறல் வெய்யோனும்,
  மணி மயில் உயரிய மாறா வென்றி,
  பிணிமுக ஊர்தி, ஒண் செய்யோனும் என
  ஞாலம் காக்கும் கால முன்பின்,
  தோலா நல் இசை, நால்வருள்ளும், 10
  கூற்று ஒத்தீயே, மாற்று அருஞ் சீற்றம்;
  வலி ஒத்தீயே, வாலியோனை;
  புகழ் ஒத்தீயே, இகழுநர் அடுநனை;
  முருகு ஒத்தீயே, முன்னியது முடித்தலின் (புறநானூறு 56)

 5. நாற்பெருந் தெய்வத்து நல்நகர் நிலைஇய
  உலகம் காக்கும் ஒன்றுபுரி கொள்கைப்
  பலர்புகழ் மூவரும் தலைவனாக
  ஏமுறு ஞாலம் தன்னில் தோன்றி
  தாமரை பயந்த தா இல் ஊழி
  நான்முக ஒருவன் - திருமுருகாற்றுப்படை 169-165.

 6. தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சி தன்
  மெய்வருத்தக் கூலி தரும் - 619

 7. வையத்தில் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
  தெய்வத்துள் வைக்கப்படும் - 20

 8. ஐயப்படாது அகத்தது உணர்வானைத்
  தெய்வத்தோடு ஒப்பக் கொளல் - 702

 9. தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்று ஆங்கு
  ஐம்புலத்து ஆறு ஓம்பல் தலை

 10. தெய்வம் தொழாஅள் கொழுநற் தொழுது எழுவாள்
  பெய் எனப் பெய்யும் மழை.

 11. குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
  மடித்தற்றுத் தான் முந்துறும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தெய்வம்_(பழந்தமிழ்)&oldid=3027780" இருந்து மீள்விக்கப்பட்டது