தெருமூடிமடம்
தெருமூடிமடம் நீண்ட தூரப் பயணம் செய்வோர் தங்கி இளைப்பாறிச் செல்வதற்காகவும், வண்டியில் மாடுகளை அவிழ்ந்து தண்ணீர் குடிக்க விடுவதற்காகவும் முன்னைய காலத்தில் தெருவை மூடிக் கட்டப்பட்ட ஒரு திறந்த இளைப்பாறு மடம் ஆகும். இதற்கு இணைவாக கிணறும் தனிக்கல்லில் பொழியப்பட்ட கற்றொட்டியும் இம்மண்டபத்தின் அருகில் அமைக்கப்பட்டிருக்கும். இத்தகைய அமைப்புகள் பெரும்பாலும் கோவில்களின் அருகாமையில் அமைக்கப்படுவது வழமை. இது தமிழர் பாரம்பரியங்களில் ஒன்று எனவும் கருதப்படுகிறது. மடத்தை ஒரே கூரை மூடியிருப்பதாலேயே இது தெருமூடிமடம் என அழைக்கப்படுகிறது.
நிரந்தர தெருமூடிமடம்
தொகுநிரந்தரத் தெருமூடிமடங்கள் தூண்களுடன், ஓடுகளால் வேயப்பட்டு, பொழிகற்களாலான திண்ணைகள் அமைக்கப்பட்டு நிரந்தரமாகவே இருப்பவை.
தற்காலிக தெருமூடிமடம்
தொகுதற்காலிக தெருமூடிமடங்கள் திருவிழாக்காலங்களில் உற்சவம் முடியும் வரை தற்காலிகமாக அமைக்கப்படுகின்றன. இவை ஓலைகளால் வேயப்பட்ட தெருமூடிமடங்களாக இருக்கும்.
இலங்கையின் பருத்தித்துறையில் தெருமூடிமடம்
தொகுபருத்தித்துறை நகரப் பகுதியில், தும்பளைக்குப் போகும் வீதியில், சிவன்கோவிலுக்கு முன்பாக ஒரு நிரந்தரத் தெருமூடிமடம் உள்ளது. தெருவின் இரு பக்கங்களிலும் மட்டத்தில் உயர்ந்த திண்ணைகள் கட்டப்பட்டுள்ளன. இத் தெரு மூடி மடம் 150 வருடங்கள் பழைமை வாய்ந்தது. இதன் கட்டடக்கலை திராவிடக்கலைப்பாணியில் அமைந்துள்ளது. வெண்வைரச் சுண்ணக்கல்லினால் உருவாக்கப்பட்ட தூண்கள், அதன் கபோதங்கள் மற்றும் தளம் ஆகியவை சிறந்த கலை வேலைப்பாடுகளைக் கொண்டிருக்கின்றன. இங்கு 16 தூண்கள் காணப்படுகின்றன. இவற்றுள் ஆறு தூண்களில் தமிழ் வரிவடிவில் சாசனங்கள் பொறிக்கப்பட்டிருக்கின்றன.