டெஃப்லான்

(தெவலான் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

வினைவிப்படியம் அல்லது “டெஃப்லான்” (Teflon) என்பது டுபாண்ட் (DuPont) நிறுவனம் தயாரிக்கும் வேதியியற் பொருளொன்றின் வணிகப் பெயர் ஆகும். இது பாலிடெட்ராபுளோரோஎதிலீன் (polytetrafluoroethylene) என்னும் வேதியியற் பெயர் கொண்ட ஒரு கரிமச் சேர்வை ஆகும். இதன் மூலக்கூற்றில் சங்கிலித் தொடராக அமைந்த காபன் அணுக்களும் அவற்றோடு இணைந்துள்ள புளோரீன் அணுக்களும் உள்ளன. வேறு சில கரிமச் சேர்வைகளைப் போலன்றி இச் சேர்வையின் மூலக்கூற்றில் உள்ள காபன் சங்கிலி முற்றிலுமாகப் புளோரீன் (வினைவியம்) அணுக்களால் சூழப்பட்டுள்ளது. இம் மூலக்கூற்றில் உள்ள காபன் (கரிமம்) மற்றும் புளோரீன் அணுக்களுக்கு இடையிலான பிணைப்பு மிகவும் வலுவானது. டெஃப்லானின் இந்த மூலக்கூறு அமைப்பு அதன் தனித்துவமான இயல்புகளுக்குக் காரணமாகும். இதன் முக்கிய இயல்புகளில் ஒன்று அதன் அதிகூடிய வழுக்கும் தன்மை ஆகும். அறியப்பட்டுள்ள சேர்வைகளில் அதிக வழுக்குத் தன்மை கொண்ட சேர்வை இதுவே எனக் கூறப்படுகின்றது. பெரும்பாலான வேதியியற் பொருட்களால் தாக்கப்படாதிருக்கும் தன்மையும் இதன் அதிகம் வேண்டப்படுகின்ற தன்மைகளுள் ஒன்று.

பயன்பாடு

தொகு

1938 இல் முதன்முதலாக டுபொண்ட்டின் ஆய்வுகூடம் ஒன்றில் தற்செயலாக இது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் தொடக்ககாலத்தில் இது பெரும்பாலும் தொழில் துறைத் தேவைகளுக்கே பயன்பட்டு வந்தது. அமெரிக்காவின் விண்வெளித் திட்டங்களில் பரவலாகப் பயன்படுத்தப்பட்ட இப்பொருள் தொழில்நுட்ப வளர்ச்சியுடன் பலவகையான அன்றாடத் தேவைகளுக்கும் பயன்படக்கூடிய ஒன்றாக மாறியுள்ளது. சமையல் பாத்திரங்களில் ஒட்டாத பூச்சுக்களாகப் பயன்படுவதுடன், கறை படியாத துணிகள் தயாரிப்பு, மூக்குக் கண்ணாடி வில்லைகள் தயாரிப்பு, உராய்வு நீக்கிகளின் தயாரிப்பு, கட்டிடத் தொழில் போன்றவற்றிலும் இதன் பயன்பாடு உள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=டெஃப்லான்&oldid=3924135" இலிருந்து மீள்விக்கப்பட்டது