தேசிய பத்திரிக்கை நினைவுச்சின்னம், சுரகார்த்தா

தேசிய பத்திரிகை நினைவுச்சின்னம் (National Press Monument) (இந்தோனேசிய: மோனுமென் பெர்ஸ் நேஷனல் ) என்பது தேசிய இந்தோனேசிய பத்திரிகைகளின் நினைவுச்சின்னம் மற்றும் அருங்காட்சியகம் ஆகும். திட்டமிடப்பட்ட 20 ஆண்டுகளுக்குப் பின்னர் 1978 ஆம் ஆண்டில் இந்த அருங்காட்சியகம் முறையாக நிறுவப்பட்டது, இந்த நினைவுச்சின்னம் மத்திய ஜாவாவின் சுரகார்த்தாவில் அமைந்துள்ளது மற்றும் தகவல் தொடர்பு மற்றும் தகவல் அமைச்சகத்தால் இது இயக்கப்படுகிறது. இந்த வளாகம் ஒரு பழைய சமுதாயக் கட்டடத்தைக் கொண்டுள்ளது,அந்தக் கட்டடம் 1918 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. இந்தோனேசியாவின் நிருபர்கள் சங்கத்தின் முதல் கூட்டம் இங்கு நடைபெற்றது. தொடர்ந்து இது விரிவாக்கம் பெற்றது. இது இந்தோனேசியாவின் கலாச்சார சொத்தாக பட்டியலிடப்பட்டுள்ளது.

தேசிய பத்திரிக்கை நினைவுச்சின்னம்
Monumen Pers Nasional
Map
நிறுவப்பட்டது9 பெப்ரவரி 1978 (1978-02-09)
அமைவிடம்சுரகார்த்தா, இந்தோனேஷியா
வகைபத்திரிக்கை அருங்காட்சியகம்
வலைத்தளம்mpn.kominfo.go.id

தேசிய பத்திரிகை நினைவுச்சின்னத்தில் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட செய்தித்தாள்கள் மற்றும் பத்திரிகைகள் உள்ளன. அத்துடன் இந்தோனேசியாவின் பத்திரிகை வரலாறு தொடர்பான பல்வேறு கண்காட்சிகள் நடத்தப்படுகின்றன. கலைப்பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இங்கு மல்டிமீடியா அறை, படிக்க இலவச செய்தித்தாள்கள் மற்றும் ஒரு நூலகம் ஆகியவை உள்ளிட்ட வசதிகள் உள்ளன. இது பல்வேறு கண்காட்சிகள் மற்றும் முகநூல் மூலமாக கல்வி சுற்றுலாவுக்கான தளமாக அமைந்துள்ளது. 2013 ஆம் ஆண்டில் இதை 26,000 க்கும் மேற்பட்ட மக்கள் பார்வையிட்டனர்.

வரலாறு

தொகு

தேசிய பத்திரிகை நினைவுச்சின்னம் அமைந்துள்ள கட்டிடம் 1918 ஆம் ஆண்டில் மங்க்குனேகரன் அரண்மனையின் இளவரசர் ஏழாம் மங்க்குனேகராவின் கட்டளைப்படி ஒரு சமுதாயக் கட்டடமாகவும் கூட்ட அரங்காகவும் கட்டப்பட்டதாகும். இதனை சொசைட்டி "சசனா சோகா " [1] என்றழைப்பர். இதை மாஸ் அபு கசன் அட்மோடிரோனோ வடிவமைத்தார். [2] 1933 ஆம் ஆண்டில் 1933 ஆர்.எம். சர்சிடோ மங்க்குன்குசுமோ மற்றும் பிற பொறியாளர்கள் அந்தக் கட்டிடத்தில் சந்தித்து இந்தோனேஷியாவிற்கு உரியவர்களால் இயக்கப்படுகின்ற.முதல் பொது வானொலி அமைப்பை உருவாக்கினர். [3] பதின்மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, பிப்ரவரி 9, 1946 ஆம் நாளன்று அந்தக் கட்டிடத்தில் , இந்தோனேசியாவின் நிருபர்கள் சங்கம் உருவாக்கப்பட்டது; [4] அந்த நாள் இந்தோனேசியாவில் தேதி தேசிய பத்திரிகை தினமாக நினைவுகூரப்படுகிறது. டச்சு கிழக்கு இண்டீசின் ஜப்பானிய ஆக்கிரமிப்பின் போது இந்த கட்டிடம் துருப்புக்களுக்கு சிகிச்சையளிக்க ஒரு கிளினிக்கை வைத்திருந்தது, இந்தோனேசிய தேசிய புரட்சியின் போது இது இந்தோனேசிய செஞ்சிலுவை சங்கத்தின் அலுவலகமாக பயன்படுத்தப்பட்டது. [2]

பிப்ரவரி 9, 1956 ஆம் நாளன்று பி.டபிள்யூ.ஐ. இன் பத்து ஆண்டுகளைக் கொண்டாடும் நிகழ்வின் போது, ரோசிஹான் அன்வர், பி.எம். தியா மற்றும் எஸ். தஹ்சின் போன்ற உயர்நிலை நிருபர்கள் ஒரு தேசிய பத்திரிகை அருங்காட்சியகத்திற்கான ஒரு அறக்கட்டளையை நிறுவுமாறு பரிந்துரைத்தனர். இதற்கான அடித்தளம் 22 மே 1956 ஆம் நாளன்று அன்று முறைப்படுத்தப்பட்டது, அதன் சேகரிப்புகள் பெரும்பாலும் சோடார்ஜோ ஜோக்ரோசிஸ்வோரோவால் வழங்கப்பட்டவையாகும். பதினைந்து ஆண்டுகளுக்குப் பின்பு, அறக்கட்டளை அருங்காட்சியகத்தை நிறுவுவதற்கான திட்டங்களை வடிவமைத்தது. அதற்கான திட்டங்களை தகவல் அமைச்சர் புடியார்ஜோ 1979 பிப்ரவரி 9 ஆம் நாளன்று முறையாக அறிவித்தார். "தேசிய பத்திரிகை நினைவுச்சின்னம்" என்ற பெயர் 1973 ஆம் ஆண்டில் முறைப்படுத்தப்பட்டது, 1977 ஆம் ஆண்டில் அரசாங்கத்திற்கு நன்கொடையாக நிலம் வழங்கப்பட்டது. பல புதிய கட்டிடங்கள் சேர்க்கப்பட்ட பின்னர், 1978 பிப்ரவரி 9 அன்று இந்த அருங்காட்சியகம் முறையாக திறக்கப்பட்டது. [3] திறப்பு விழா நிகழ்வில் ஜனாதிபதி சுஹார்டோ சுதந்திரத்திற்கான ஆபத்துகளைப் பற்றி பத்திரிகைகளுக்கு எச்சரித்தார். மேலும், தன் உரையில், "சுதந்திரத்திற்காக சுதந்திரத்தை பயன்படுத்துவது ஆடம்பரமான செயல் என்றும், அவ்வாறு வாங்குவழ சாத்தியமல்ல என்றும் குறிப்பிட்டார். [5]

2012 ஆம் ஆண்டில் இந்த அருங்காட்சியகம் சுஜாத்மிகோ தலைமையில் இருந்தது. [6] அந்த ஆண்டு பெட்ரா கிறிஸ்டியன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டேவிட் கிறிஸ்டியன் புதியாண்டோ இந்த அருங்காட்சியகம் மிகவும் அரிதாகவே பார்வையிடப்படுவதாகவும் சில இடங்கள் மோசமாக பராமரிக்கப்பட்டு வருதாகவும் கூறினார். புதிய பார்வையாளர்களை ஈர்க்கும் பொருட்டு, அருங்காட்சியகம் 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் அருங்காட்சியகத்தின் முகநூல் பக்கத்தில் புகைப்படம் எடுத்தல் போட்டி உள்ளிட்ட பல போட்டி நடத்த முயற்சிகளை மேற்கொண்டது. [7] அதன் சேகரிப்புகளைக் கொண்டு யோகியாகர்த்த மற்றும் மலோங்க் போன்ற நகரங்களில் மொபைல் கண்காட்சிகளை நடத்தியது. [8] ஜனவரி மற்றும் செப்டம்பர் 2013 க்கு இடையில், அருங்காட்சியகத்தினை‘ 26,249 பார்வையாளர்கள் பார்வையிட்டுச் சென்றனர். அதற்கு முந்தைய ஆண்டின் இலக்கை விட அது 250 சதவீதம் அதிகரித்த நிலையில் அமைந்தது. [9] [10] இந்த அருங்காட்சியகம் இப்போது கல்வி சுற்றுலாவுக்கான தளமாக விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது [4] மேலும் இந்தோனேசியாவில் பத்திரிகை தொடர்பான பலவற்றை நன்கொடைகளாக ஏற்றுக்கொள்கிறது. [6]

விளக்கம்

தொகு

தேசிய பத்திரிகை நினைவுச்சின்னம் மத்திய ஜாவாவின் சுராகர்த்தாவில் உள்ள 59 கஜா மடா தெருவில் கஜா மடா மற்றும் யோசோடிபுரோ வீதிகளின் சந்திப்பில் அமைந்துள்ளது. இது மங்குநேகரன் அரண்மனைக்கு மேற்கே உள்ளது. இந்த வளாகத்தில் அசல் சசனா சோகா கட்டிடம், இரண்டு இரண்டு- மாடி கட்டிடங்கள் மற்றும் ஒரு நான்கு மாடி கட்டிடம் உள்ளன; இவை பின்னர் கட்டப்பட்டவையாகும்.அருங்காட்சியகத்தின் முன்புறத்தில் ஒரு பார்க்கிங் பகுதி உள்ளது. அருகில் இரண்டு அறிவிப்புப் பலகைகள் உள்ளன. அங்கு உள்ளூர் செய்தித்தாள்களின் சமீபத்திய பதிப்புகள் (2013 ஆம் ஆண்டில், சோலோ போஸ், சுவாரா மெர்டேகா மற்றும் ரெபுப்லிகா ) இலவசமாக படிக்க முடியும். [3] முன் முகப்பு கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த 1980 ஆம் ஆண்டைக் குறிக்கும் வகையில் நாகா வடிவமைப்பால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. [2]

இதன் நிர்வாகம் தகவல் தொடர்பு மற்றும் தகவல் அமைச்சகத்தால் இயக்கப்படுகிறது. நிர்வாகத்தில் தலைவர், நிர்வாக மேலாளர், வாடிக்கையாளர், பாதுகாப்பு, அன்றாட நிர்வாகம் போன்றவற்றிற்கு அலுவலர்களைக் கொண்டுள்ளது. 2013 ஆம் ஆண்டில் இங்கு 23 அலுவலர்கள் பணியாற்றினர்.[3] இந்தக் கட்டடம் இந்தோனேசியாவின் பண்பாட்டுச் சொத்தாகக் கருதப்படுகிறது.[1]

இந்த அருங்காட்சியகத்தில் ஒரு ஊடக மையம் உள்ளது, அங்கு பொது மக்கள் ஒன்பது கணினிகளில் ஒன்றில் கட்டணம் இன்றி இணையத்தை பயன்படுத்தும் வசதி உள்ளது. சுமார் 12,000 புத்தகங்களின் தொகுப்புடன் ஒரு நூலகம்; பழைய செய்தித்தாள்கள் மற்றும் பத்திரிகைகளின் டிஜிட்டல் நகல்களைப் படிக்கக்கூடிய ஒரு அறையும் உள்ளது. [3] பயன்படுத்த இயலா நிலையில் ஒரு மைக்ரோஃபில்ம் அறை உள்ளது. [11]

தேசிய பத்திரிகை நினைவுச்சின்னம் பத்திரிகைகள், ஊடகங்கள் மற்றும் தகவல்தொடர்புகள் தொடர்பான கருத்தரங்குகளை தொடர்ந்து நடத்துகிறது. இது சுதந்திர தினம், இளைஞர் உறுதிமொழியின் ஆண்டுவிழா மற்றும் தேசிய பத்திரிகை தினம் உள்ளிட்ட தேசிய விடுமுறை நாட்களின் அடிப்படையில் ஊடகங்களின் கருப்பொருள்களைக் கொண்டு கண்காட்சிகளை நடத்துகிறது. ஆராய்ச்சியாளர்கள் செய்தித்தாள்கள் மற்றும் பத்திரிகைகளின் நகல்களைப் பெற்றுக்கொள்ளும் வசதி உள்ளது. [3]

காட்சிப்படுத்தப்பட்டவை

தொகு

இந்தோனேசிய தீவுக்கூட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த காலனித்துவ காலம் தொடங்கி இன்று வரை வெளியிடப்பட்ட ஒரு மில்லியனுக்கும் அதிகமான செய்தித்தாள்கள் மற்றும் பத்திரிகைகள் இந்த அருங்காட்சியகத்தில் உள்ளன. [1] பத்திரிக்கைத் துறையில் பயன்படுத்தப்படுகின்ற தட்டச்சுப்பொறிகள், டிரான்ஸ்மிட்டர்கள், தொலைபேசிகள் உள்ளிட்ட பொருள்கள் இங்கு காட்சியில் உள்ளன. [11] முக்கிய முதன்மை நுழைவாயில் முகப்பில் இந்தோனேஷியாவின் இதழியல் வரலாற்றில் தொடர்புடையோரின் மார்பளவுச்சிலைகள் உள்ளன. அவற்றுள் டிர்டோ ஆதி சோர்ஜோ, ஜமாலுதீன் அடினெகோரோ, சாம் ரத்துலங்கி, மற்றும் எர்னஸ்ட் டூவ்ஸ் டெக்கர் ஆகியோர் சிலைகளும் அடங்கும். [11]

முதன்மை நுழைவு வாயில் மண்டபத்தின் பின்புறத்தில் இந்தோனேசிய வரலாறு முழுவதும் தகவல்தொடர்புகளையும் பத்திரிகைகளையும் விளக்கும் ஆறு டியோராமாக்களின் தொடர் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. [11]

இந்த அருங்காட்சியகத்தில் சுதந்திரத்திற்கு முந்தைய மற்றும் இந்தோனேசியாவைச் சேர்ந்த பத்திரிகையாளர்களுக்கு சொந்தமான பல்வேறு கலைப்பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. [11] மோச்டார் லூபுஸ் உள்ளிட்ட பல இதழாளர்களின், படைப்புகள் இங்கு காட்சியில் உள்ளன. அவை அக்டோபர் 2013 வாக்கில் பெறப்பட்டவையாகும்.

மேற்கோள்கள்

தொகு

மேலும் படிக்க

தொகு
  • Monumen Pers Nasional [National Press Monument]. Jakarta: Yayasan Idayu. 1980. OCLC 222940006.
  • Wiryawan, Hari (2011). Mangkunegoro VII & Awal Penyiaran Indonesia [Mangkunegoro VII & the Beginnings of Broadcasting in Indonesia] (in Indonesian). Surakarta: Lembaga Pers dan Penyiaran Surakarta. ISBN 978-602-98955-0-6.