தேரி காதை என்பது பாலி மொழியிலமைந்த, பௌத்தப் பிக்குணிகளின் பாடல்களடங்கிய பனுவலாகும். திரிபிடகங்களாகத் தொகுக்கப்பட்ட பௌத்த நூல்களுள் தேரி காதை சூத்தபிடகத்தில் இடம்பெறுகிறது. இதற்குள்ளும், பலவகை நூல்களின் தொகுப்பு எனப் பொருள்படும் குத்தக நிகாயம் என்ற வகைப்பாட்டிற்குள் அடங்கிய பதினான்கு நூல்களில் ஒன்றாக தேரி காதை உள்ளது.[1]

முக்கியத்துவம்

தொகு

பெண் வெளிப்பாட்டு வரலாற்றை அறிவதில் தேரி காதை முன்வைக்கும் அரசியல் பெண்ணியவாதத்தின் அடிப்படை அம்சங்களைக் காட்டுவதாக உள்ளதாகவும், இந்தியச் சூழலில் பெண்ணியவாதம் என்பது ஒரு இறக்குமதிச் சரக்கு என்ற கருத்தைத் தகர்ப்பதாகவும் உள்ளதாக அ. மங்கை மதிப்பிடுகிறார். தேரி காதை காட்டும் குடும்பப் பெண்கள், கணிகையர், பிக்குணிகள் என்ற மூன்று வகைப்பட்ட பெண்களின் உலகமானது வீட்டு உழைப்பின் செக்குமாட்டுத் தன்மை, பெண்களின் மாற்றுவகைப் பட்ட அறியும் திறன், வழக்கமான உடல் மறுப்பிலிருந்து வேறுபட்ட உடல் உணர் புரிதல் ஆகிய தளங்களில் இன்றளவும் பொருத்தப்பாடு உடையதாகக் குறிப்பிடுகிறார். [2]கிறித்துவின் காலத்திற்கு முன்பே இயற்றப்பட்ட தேரி காதையில் பெண்கள் தமக்கே உரிய மொழியில் தம்மை வெளிப்படுத்தியிருக்கின்றனர் என்றும், இப்பாடல்கள் காட்டும் அனுபவங்களின் பரப்பு விரிவானது என்றும் இப்பனுவலை ஆய்வு செய்த உமா சக்கரவர்த்தி குறிப்பிட்டுள்ளார்.[1]

தேரி காதையில் உள்ள பாடல்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக முத்தா என்ற பிக்குணியின் பாடலின் மொழிபெயர்ப்பு கீழே தரப்படுகிறது:

கூன் பிராமணனுக்கு மணம் செய்விக்கப்பட்ட முத்தா என்ற பிக்குணி துறவேற்று தூய பதவி அடைந்ததும் பாடிய பாடலின் மொழிபெயர்ப்பு:

அப்பா...விடுதலை! களிப்பூட்டும் தளைநீக்கம்!
கோணலான மூன்றிலிருந்து தளைநீக்கம் -
உரல் உலக்கை கூன்கணவனிடமிருந்து விடுதலை.
பிறவித்துயர் சாக்காட்டிலிருந்து தளைநீக்கம்.
என்னைப் பின்னிழுத்தவற்றை வீசி எறிந்தாயிற்று.


ஆங்கில மொழிபெயர்ப்புகள்

தொகு
  • Psalms of the Sisters, (மொ-பு) சி. ஏ. எஃப். ரைஸ் டேவிட்ஸ் (C. A. F. Rhys Davids), 1909; Psalms of the Early Buddhists இல் மறுஅச்சு செய்யப்பட்டது, பாலி பனுவல் மன்றம்[1], பிரிஸ்டல்; செய்யுள் வடிவிலான மொழிபெயர்ப்பு
  • Elders' Verses, (மொ-பு) கே. ஆர். நார்மன் (K. R. Norman), 1971, பாலி பனுவல் மன்றம், பிரிஸ்டல்

இவ்விரு மொழிபெயர்ப்புகளும் ஒரே காகித அட்டைத் தொகுதியாக Poems of Early Buddhist Nuns என்ற தலைப்பின்கீழ் மறு அச்சு செய்யப்பட்டு வெளிவந்துள்ளது. அதில் நார்மனின் குறிப்புகள் இடம்பெறவில்லை என்றாலும் ரைஸ் டேவிட்ஸ் மொழிபெயர்த்த விளக்கவுரையின் தெரிந்தெடுத்த பகுதிகள் தரப்பட்டுள்ளன.

  • Songs of the Elder Sisters, பிரான்சிஸ் பூத் (Francis Booth) தேர்ந்தெடுத்து செய்யுள் வடிவில் மொழிபெயர்த்த 14 பாடல்கள், 2009, மின் நூல் (கிண்டில்).
  • Therigatha: Poems of the First Buddhist Women, (மொ-பு) சார்லஸ் ஹால்லிசி (Charles Hallisey), மூர்த்தி இந்திய செவ்வியல் நூலகம் & ஹார்வர்டு பல்கலைக்கழக அச்சகம் (ஜனவரி 2015), கெட்டி அட்டை, 336 பக்கங்கள், பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780674427730

தமிழ் மொழிபெயர்ப்பு

தொகு

அ. மங்கையின் மொழிபெயர்ப்பில் சந்தியா பதிப்பக வெளியீடாக தேரி காதை - பௌத்தப் பிக்குணிகளின் பாடல் 2007இல் வெளிவந்துள்ளது. செய்யுள்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் 'ஒற்றைச் செய்யுள் பாடல்கள்' முதலாக 'பெருங்காண்டம்' ஈறாக பதினாறு சருக்கங்கள் இம்மொழிபெயர்ப்பில் இடம்பெற்று உள்ளன. பாடல்களின் தொடக்கத்தில் அப்பாடலைப் பாடிய பிக்குணியைப் பற்றிய உரை இடம்பெற்றுள்ளது. முன் இணைப்பாக தில்லிப் பல்கலைக்கழக மேனாள் வரலாற்றுப் பேராசிரியர் உமா சக்கரவர்த்தியின் தேரி காதை பற்றிய ஆங்கிலப் பேச்சின் தமிழ் வடிவமும், பின்னிணைப்பாக பௌத்தக் கலைச்சொற்கள் விளக்கமும் தரப்பட்டுள்ளன.

ரைஸ் டேவிட்சின் ஆங்கில மொழிபெயர்ப்பை முதல் நூலாகவும், நார்மன் மொழிபெயர்ப்பைத் துணை நூலாகவும் கொண்டு பௌத்தம் சார்ந்த தமிழ் நூல்களான மணிமேகலை, நீலகேசி ஆகியவற்றை வாசித்துப்பார்த்துவிட்டு கவிதை வடிவில் மொழிபெயர்த்திருப்பதாக மொழிபெயர்ப்பாளர் குறிப்பிடுகிறார்.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 அ.மங்கை (தமிழில்) (2007). "தேரி காதை - இன்று என்ற தலைப்பில் உமா சக்கரவர்த்தியின் பேச்சின் உரைவடிவம்". தேரி காதை - பௌத்தப் பிக்குணிகளின் பாடல்கள். சென்னை: சந்தியா பதிப்பகம். pp. 19–41.
  2. 2.0 2.1 அ.மங்கை (தமிழில்) (2007). "'தேரிக்களின் உலகம்' என்னும் தலைப்பிலான முன்னுரைப் பகுதி". தேரி காதை - பௌத்தப் பிக்குணிகளின் பாடல்கள். சென்னை: சந்தியா பதிப்பகம். pp. 9–18.

'தேரி காதை' இணையத்தில் (ஆங்கிலத்தில்)

தொகு

வெளி இணைப்பு

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேரி_காதை&oldid=2697393" இலிருந்து மீள்விக்கப்பட்டது