தேர்தல் நடத்தை நெறிகள்

இந்தியத் தேர்தல் ஆணையம் இந்தியத் தேர்தல்களின் போது அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் மற்றும் வாக்காளர்கள் கடைபிடிக்க வேண்டிய மாதிரி வழிகாட்டு நெறிகள் குறித்து தனது இணையதளத்தில் வழங்கியுள்ளது.[1]இந்த வழிகாட்டு நெறிகளை அனைத்து அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் பின்பற்ற வேண்டும்.[2] மீறினால் தேர்தல் ஆணைய பார்வையாளர்களால் அரசியல் கட்சி மற்றும் வேட்பாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். முடிந்தால் நடைபெற வேண்டிய குறிப்பிட்ட தொகுதியின் தேர்தல் ரத்து செய்ய வேண்டியதிருக்கும்.

தேர்தல் நடத்தை நெறிகளின் கால வரம்பு

தொகு

தேர்தல் நாள் அறிவிக்கப்பட்டது முதல், வாக்கு எண்ணிக்கை முடிந்து, வெற்றி பெற்ற அனைத்து வேட்பாளர்களின் பெயர்களை அறிவிக்கப்படும் வரை தேர்தல் நடத்தை நெறிகள் தொடரும்.

மாதிரி தேர்தல் நடத்தை விதிகள்

தொகு
  1. இந்திய தேர்தல் ஆணையத்தின் மாதிரி நடத்தை விதிமுறை நடைமுறைக்கு வந்தவுடன் அரசாங்கம் புதிய திட்டங்களை அறிவித்து நடைமுறைபடுத்தக் கூடாது.
  2. அரசு மற்றும் அரச நிறுவனங்களில் ஆட்சேர்ப்பு கூடாது.
  3. போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் சாலைப் பேரணி அல்லது ஆர்ப்பாட்டங்களை நடத்தி பொதுமக்களுக்கு தொந்தரவு செய்யக்கூடாது.
  4. தேர்தல் பிரச்சார பேரணிகள் மற்றும் சாலைப் பேரணிகள் சாலைப் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கக்கூடாது.
  5. அரசியல் கட்சிகள் அல்லது வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு மதுபானம் விநியோகிப்பதை வேட்பாளர்கள் தவிர்க்க வேண்டும்.
  6. அரசியல் கட்சிகள் அல்லது வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவடா செய்யக்கூடாது.
  7. தேர்தல் நேரத்தில் நலத்திட்டங்களை நடைமுறைபடுத்த, அரசாங்கம் அல்லது ஆளும் கட்சியினர் செய்வதை தடுக்கிறது.
  8. சந்திப்பு மைதானம்,ஹெலிபேட், அரசாங்க விருந்தினர் இல்லங்கள் மற்றும் பங்களாக்கள் போன்ற பொது இடங்கள் போட்டியிடும் வேட்பாளர்களிடையே சமமாக பகிரப்பட வேண்டும் என்று அறிவுறுத்துகிறது. இந்த பொது இடங்கள் ஒரு சில வேட்பாளர்களால் ஏகபோகமாக இருக்கக்கூடாது.
  9. வாக்குப்பதிவு நாளில், அனைத்து கட்சி வேட்பாளர்களும் வாக்களிக்கும் சாவடிகளின் அதிகாரிகளுடன் வாக்களிக்கும் செயல்முறைக்கு ஒத்துழைக்க வேண்டும். வாக்குப்பதிவு நாளில் வேட்பாளர்கள் தங்கள் தேர்தல் சின்னங்களை வாக்குச் சாவடிகளுக்கு அருகிலும் சுற்றிலும் காட்டக்கூடாது. இந்திய தேர்தல் ஆணையத்தின் செல்லுபடியாகும் அனுமதி சீட்டு இல்லாமல் யாரும் சாவடிகளுக்குள் நுழையக்கூடாது.
  10. எந்தவொரு புகார்களையும் தேர்தல் ஆணையத்தின் பார்வையாளர்களிடம் வழங்கவேண்டும்.
  11. ஆளும் கட்சி தனது அதிகாரத்தை பிரச்சார நோக்கங்களுக்காக பயன்படுத்தக்கூடாது.
  12. தேர்தல் பிரச்சாரத்தின் போது ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவதற்கு முன்பு, வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் உள்ளூர் அதிகாரிகளிடமிருந்து அனுமதி அல்லது உரிமத்தைப் பெற வேண்டும். வேட்பாளர்கள் ஆர்ப்பாட்டக் கூட்டம் அல்லது பேரரணிகள் நடத்த காவல்துறையிடம் அனுமதி பெற வேண்டும்.

அரசியல் கட்சிகளுக்கான நடத்தை விதிகள்

தொகு
  • சாதி, மத, சமூக அல்லது மொழி ரீதியான பிரச்சனைகளை உருவாக்கவோ, ஏற்கனவே இருக்கும் பிரச்னைகளை அதிகப்படுத்தவோ காரணமாகும் செயல்களில் கட்சிகள் அல்லது வேட்பாளர்கள் ஈடுபடக்கூடாது.
  • பிற அரசியல் கட்சிகளை விமர்சிக்கும்போது அவர்களது கொள்கைகள், திட்டங்கள், கடந்த கால நடவடிக்கைகள் ஆகியவற்றையே விமர்சிக்க வேண்டும். வேட்பாளர்களின் தனிப்பட்ட வாழ்வை விமர்சிக்கக் கூடாது.
  • தங்களுக்கு எதிரான நிலைப்பாடு உடைய கட்சிகள் அல்லது அந்த கட்சியை சார்ந்தவர்கள் மீதான சரிபார்க்கப்படாத, உறுதிசெய்யப்படாத குற்றச்சாட்டுகளை முன்வைக்கக் கூடாது; புகார்களைத் திரித்து கூறுவதையும் தவிர்க்க வேண்டும்.
  • சாதி அல்லது மத அடிப்படையில் வாக்குகளை கோரக்கூடாது. கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் மற்றும் வழிபாட்டு இடங்களை தேர்தல் பரப்புரைக்காகப் பயன்படுத்தக்கூடாது.
  • வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுப்பது, வாக்காளர்களை உணர்வுப்பூர்வமாக தூண்டிவிடுவது, ஆள்மாறாட்டம் செய்வது, வாக்குச்சாவடியில் இருந்து 100 மீட்டர் தூரத்திற்குள் வாக்கு சேகரிப்பது, வாக்குப்பதிவுக்கு முந்தைய 48 மணி நேரங்களுக்குள் பொதுக்கூட்டம் நடத்துவது, வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்து வருவதற்கான போக்குவரத்து ஏற்பாடுகளை செய்வது போன்ற 'ஊழல் நடவடிக்கைகளை' கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் தவிர்க்க வேண்டும்.
  • தேர்தல் காலங்களில் ஒவ்வொரு தனி மனிதரின், அமைதியான மற்றும் தொந்தரவுக்கு உட்படுத்தப்படாத வீட்டு வாழ்க்கை மதிக்கப்பட வேண்டும். அரசியலில் ஈடுபட்டுள்ள ஒரு தனிநபரின் வீடு முன்பாக போராட்டம் நடத்துவது, முற்றுகை இடுவது ஆகியவற்றில் ஈடுபடக்கூடாது.
  • ஓர் இடத்திலோ கட்டடத்திலோ சுற்றுச்சுவரிலோ அறிக்கை ஓட்டுவது, பதாகைகளைத் தொங்க விடுவது, அரசியல் கட்சி வாசகங்களை எழுதுவது, கட்சிக் கொடியைப் பறக்க விடுவது ஆகியவற்றில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டால், அந்த சொத்தின் உரிமையாளரிடம் அதற்கான முறையான அனுமதியைப் பெற்று இருக்க வேண்டும்.
  • ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியை சார்ந்தவர்கள் வேறு கட்சி நடத்தும் பொதுக்கூட்டங்களில் பேச்சு, எழுத்து மூலமாக கேள்வி எழுப்பியோ, தங்கள் கட்சியின் துண்டறிக்கை விநியோகம் செய்தோ, தொந்தரவு செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது.
  • ஒரு கட்சி பொதுக்கூட்டம் நடத்தும் இடத்தை ஒட்டியுள்ள இடங்களில் இன்னொரு கட்சி பேரணி செல்வதை தவிர்க்க வேண்டும்.
  • ஒரு கட்சியினர் ஒட்டிய பரப்புரை அறிக்கைகளை மற்றும் விளம்பரங்களை இன்னொரு கட்சியினர் அகற்ற அல்லது கிழிக்கக் கூடாது.

வேட்பாளர்களுக்கான நடத்தை விதிகள்

தொகு
  • வேட்பாளர்கள் புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதிக்கு 22 லட்சம் வரையும், மற்ற மாநில சட்டமன்றங்களில் தொகுதிக்கு ரூபாய் 38 லட்சம் வரை செலவு செய்யலாம்.
  • வேட்பாளருக்காக வீடு, வீடாக சென்று வாக்கு சேகரிப்பவர்கள் ஐந்து பேருக்கு அதிகமாக இல்லாமல் இருக்க வேண்டும்.
  • எந்தெந்த மைதானங்களில் தேர்தல் பரப்புரைகளை நடத்தலாம் என்ற விவரத்தை சம்பந்தப்பட்ட மாநிலங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகள் உள்ளூர் நாளிதழ் மற்றும் ஆங்கில நாளிதழில் வெளியிடுவார்கள்.
  • தேர்தல் விதிமுறைகள் தொடர்பாக புகார்களை பொதுமக்கள் சி-விஜில் எனப்படும் செயலி மூலம் தெரிவிக்கலாம்.

பொதுக்கூட்டங்களுக்கான தேர்தல் நடத்தை விதிகள்

தொகு
  • கட்சி அல்லது வேட்பாளர் சார்பில் பொதுக்கூட்டம் நடக்க உள்ள இடம், நேரம் ஆகியவற்றை காவல்துறையிடம் முன்னரே தெரிவிக்க வேண்டும்.
  • பொதுக்கூட்டம் நடத்த தாங்கள் தேர்வு செய்துள்ள இடத்தில் அதற்கான தடை ஏதும் உள்ளதா என்பதை கட்சி அல்லது வேட்பாளர்கள் முன்கூட்டியே உறுதி செய்துகொள்ள வேண்டும்.
  • அந்தத் தடையில் இருந்து விதிவிலக்கு வேண்டும் என்றால், போதுமான நேரம் இருக்கும் போதே அதிகாரிகளிடம் அதற்கான விண்ணப்பத்தை வழங்கி, அவர்கள் அனுமதித்தால் பொதுக் கூட்டத்தை நடத்திக் கொள்ளலாம்.
  • பொதுக் கூட்டம் நடத்தும் இடத்தில் ஒலிபெருக்கி பயன்படுத்துவதற்கும், பிறவற்றுக்கும் ஏதேனும் அனுமதி அல்லது உரிமம் தேவைப்படுமானால் தொடர்புடைய அதிகாரிகளிடம் முன்கூட்டியே அதற்கான அனுமதி அல்லது உரிமத்தை பெற்றுக் கொள்ள வேண்டும்.
  • பொதுக்கூட்டம் ஒழுங்காக நடை பெறுவதற்கு தடையாக அந்த கூட்டத்தில் இருக்கும் யாரேனும் செயல்பட்டால் அந்த கூட்டத்தை நடத்துபவர்கள் அந்த தனிநபர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது; அவர்கள் காவல்துறையைத்தான் நாட வேண்டும்.

பேரணிகளுக்கான தேர்தல் நடத்தை விதிகள்

தொகு
  • பேரணி தொடங்கும் மற்றும் முடியும் இடங்கள், கடந்து செல்லும் பாதை, நேரம் ஆகியவை முன்கூட்டியே முடிவு செய்யப்பட வேண்டும். பேரணி நடக்கும் நேரத்தில் மேற்கண்டவற்றில் எந்த மாற்றமும் இருக்கக்கூடாது.
  • போதிய ஏற்பாடுகள் செய்யப்படுவதற்காக பேரணியை நடத்துபவர்கள் முன்கூட்டியே உள்ளூர் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
  • பேரணி கடந்து செல்லும் பாதையில் தடை ஏதும் அமலில் உள்ளதா என்பதை முன்கூட்டியே உறுதி செய்துகொள்ள வேண்டும். போக்குவரத்து விதிமுறைகளை சரிவர பின்பற்ற வேண்டும்.
  • பேரணி செல்லும் பாதையில் போக்குவரத்து இடையூறு அல்லது தடை ஏதும் ஏற்படாமல் இருப்பதை பேரணியை நடத்துபவர்கள் முன்கூட்டியே உறுதி செய்ய வேண்டும்.
  • பேரணியின்போது பிற அரசியல் கட்சிகள் அல்லது அவற்றின் தலைவர்களின் உருவ பொம்மைகளைக் கொண்டுசெல்வது அவற்றை எரிப்பது ஆகியவை தவிர்க்கப்பட வேண்டும்

ஆளும் கட்சிக்கு உள்ள கட்டுப்பாடுகள்

தொகு
  • அரசுமுறைப் பயணத்தின் போது அமைச்சர்கள் தேர்தல் பரப்புரை உள்ளிட்ட அரசியல் நடவடிக்கைகள் எதிலும் ஈடுபடக்கூடாது; தேர்தல் செயல்பாடுகளுக்காக அரசு நிர்வாகம் மற்றும் அரசு அலுவலர்களை அமைச்சர்கள் பயன்படுத்தக்கூடாது.[3]
  • அரசு செலவில் விமானம், சாலைப் போக்குவரத்து மேற்கொள்வது கூடாது. அரசு நிர்வாகம் மற்றும் அரசு அலுவலர்கள் என எதையும் ஆளும் கட்சியின் நலன்களை முன்னெடுப்பதற்காக யாரும் பயன்படுத்தக்கூடாது.
  • மைதானங்கள் உள்ளிட்ட பொது இடங்களை ஆட்சியிலுள்ள கட்சியினர் மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது. பொது இடங்களில் இருக்கும் வசதிகளை ஆளும் கட்சியினர் எந்த அளவுக்கு பயன்படுத்துகிறார்களோ அதே அளவுக்கு, அதே கட்டுப்பாடுகளுடன் பிற கட்சியினரும் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்.
  • அரசு ஓய்வு இல்லங்கள், பயணியர் மாளிகைகள் உள்ளிட்டவற்றை ஆளும் கட்சியினர் மட்டுமல்லாது பிற கட்சியினரும், வேட்பாளர்களும் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். ஆனால் அரசுக்குச் சொந்தமான கட்டடங்களை பரப்புரை அலுவலகமாகவோ அரசியல் கூட்டங்கள் நடத்துவதற்காகவோ எந்தவொரு கட்சி அல்லது வேட்பாளரும் பயன்படுத்தக்கூடாது.
  • செய்தித்தாள்கள் மற்றும் பிற அரசு ஊடகங்களில் அரசு பணத்தில் ஆளும் கட்சி விளம்பரம் வெளியிடுவது, ஆளும் கட்சியின் நலன்களை முன்னெடுக்கும் நோக்கில் அரசு ஊடகங்கள் ஒரு சார்பாக செய்தி வெளியிடுவது ஆகியவை முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.
  • தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்பு அமைச்சர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் தங்கள் கட்டுப்பாட்டிலுள்ள நிதி எதையும் செலவிடுவதற்கும், புதிதாக நிதி ஒதுக்கீடு செய்வதற்கும் ஒப்புதல் எதையும் வழங்கக்கூடாது.
  • தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்பு அமைச்சர்கள் மற்றும் பிற அரசு அலுவலர்கள் நிதி உதவி எதையும் அறிவிக்கக் கூடாது; திட்டங்களுக்காக அடிக்கல் நாட்டக் கூடாது; சாலை வசதி குடிநீர் வசதி உள்ளிட்டவை வழங்குவது தொடர்பாக எந்த வாக்குறுதியும் அளிக்கக்கூடாது.
  • குடிமைப் பணிகளில் உள்ள அதிகாரிகள் திட்டங்களை தொடங்குவது, அடிக்கல் நாட்டுவது உள்ளிட்டவற்றில் ஈடுபடலாம்.
  • தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்பு அரசு துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் ஆளும் கட்சிக்கு பலன் அளிக்கக்கூடிய வகையில் நியமனங்கள் எதையும் மேற்கொள்ளக் கூடாது.
  • வேட்பாளர் அல்லது வேட்பாளரின் முகவர்கள் என்ற முறையில் மட்டுமே வாக்குச் சாவடிக்குள் அனுமதிக்கப்படுவார்கள். அமைச்சர் என்ற அடிப்படையில் அனுமதி கிடையாது.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேர்தல்_நடத்தை_நெறிகள்&oldid=3113094" இலிருந்து மீள்விக்கப்பட்டது