தே. வெ. மகாலிங்கம்

இந்திய வரலாற்றாசிரியர்
(தே. வே. மகாலிங்கம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

டி. வி. மகாலிங்கம் என அழைக்கப்படும் தே. வெ. மகாலிங்கம் (1907–1983) வரலாற்றாய்வாளர், நூலாசிரியர், பதிப்பாசிரியர் ஆவார். தொல்லியல், கல்வெட்டியல், நாணயவியல், சுவடியியல், சிற்பம், சமயம் தத்துவம் ஆகியவற்றில் வரலாற்றுப் புலமை கொண்டவர். காவிரிப் பள்ளத்தாக்கிலும் பாலாற்றுப் பகுதியிலும் தொல்பொருள் ஆய்வுகளைச் செய்தார். ஆங்கிலப் புலமைமிக்க இவர் தமது 16 நூல்களையும் நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் ஆங்கிலத்தில் எழுதினார். விசய நகரப் பேரரசின் நிருவாகமும் சமூக வாழ்க்கையும் என்னும் இவரது நூல் தென்னிந்திய வரலாற்றின் மாற்றத்தை ஆய்வு செய்தது. இந் நூலில் மக்களின் பொருளாதாரம் சமூக வாழ்க்கை ஆகியவற்றை புதிய கோணத்தில் ஆய்வு செய்துள்ளார்.

பிறப்பும் படிப்பும் தொகு

தஞ்சை மாவட்டம் மயிலாடுதுறைக்கு (தற்பொழுது திருவாரூர் மாவட்டம்)அருகில் உள்ள தெரெழுந்தூர் என்னும் ஊரில் டி. வி. மகாலிங்கம் பிறந்தார் தந்தை வெங்கட ராம சடாவல்லபர், தாயார் சாவித்திரி அம்மாள். பள்ளிப் படிப்பை முடித்து சென்னைப் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து வரலாறு பாடத்தில் 1929இல் இளங்கலைப் பட்டம் பெற்றார். 1931இல் முதுகலைப் பட்டமும் பெற்றார்.

பணிகள் தொகு

சென்னைப் பல்கலைக் கழகத்தில் 1939 முதல் 1942 வரை வரலாற்றில் ஆராய்ச்சி மாணவராகவும் ஆய்வு உதவியாளராகவும் பணி செய்தார். கே.ஏ நீலகண்ட சாத்திரியார் வழிகாட்டலில் ஆய்வேட்டை எழுதி முனைவர் பட்டம் பெற்றார். மதுரைக் கல்லூரியிலும் புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரியிலும் விரிவுரையாளராகப் பணி புரிந்தார்.1947 முதல் சென்னைப்பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளர், இணைப் பேராசிரியர், பேராசிரியர், துறைத் தலைவர் எனப் பதவிகளைப் பெற்று 1972இல் ஒய்வு அடைந்தார்.[1]

ஆய்வு நூல்கள் தொகு

  • விசய நகரப் பேரரசின் நிருவாகமும் சமூக வாழ்க்கையும்
  • விசய நகர பேரரசின் பொருளாதார வாழ்க்கை
  • தென்னிந்திய அரசியல்
  • பண்டைய தென்னிந்திய எழுத்தியல்
  • பண்டைய தென்னிந்திய வரலாற்றில் காஞ்சிபுரம் [2]

இவைதவிர பல்லவர்கள் பாணர்கள் நாகர்கள் பற்றிய வரலாற்று நூல்களையும் கோவில்கள், கலை, கட்டடக் கலை, கல்வெட்டியல் போன்றவற்றின் வரலாறுகளையும் எழுதினார் தி.வி.மகாலிங்கம் 16 நூல்களையும் பல கட்டுரைகளையும் ஆங்கிலத்தில் எழுதினார். பல்கலைக் கழகங்களில் அறக்கட்டளைச் சொற்பொழிவுகள் நிகழ்த்தினார். மெகன்சி சுவடிகளையும் பல்லவர்காலக் கல்வெட்டுகளையும் தமிழக கேரள மாநிலக் கல்வெட்டு களைச் சேகரித்துப் பதிப்பிக்கும் பணியில் ஈடுபட்டார்.

விருதுகள் தொகு

விசய நகரப் பேரரசின் பொருளாதார வாழ்க்கை என்னும் ஆய்வு நூலுக்காக சங்கரபார்வதி பரிசு இவருக்கு வழங்கப்பட்டது.

இந்திய நடுவணரசு 1969 ஆம் ஆண்டில் பத்ம சிறி விருது இவருக்கு வழங்கிச் சிறப்பித்தது.

சான்றாவணம் தொகு

தமிழக வரலாற்றறிஞர்கள் (நூல்) தொகுப்பாசிரியர் ம.சா.அறிவுடைநம்பி, இளங்கணி பதிப்பகம் சென்னை-15

மேற்கோள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தே._வெ._மகாலிங்கம்&oldid=3489326" இலிருந்து மீள்விக்கப்பட்டது