தொடக்க நூல்

திருவிவிலிய நூல்
(தொடக்க நூல் (நூல்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தொடக்கநூல் அல்லது ஆதியாகமம் (Genesis) என்பது எபிரேய விவிலியம் மற்றும் பழைய ஏற்பாடு ஆகியவற்றில் முதல் நூலாக இடம்பெறுகிறது. இந்நூல் இசுரயேல் மக்களின் வரலாற்றை மனித இனத்தின் தோற்றத்துடன் இணைத்துக் காட்டுகின்றது.

கடவுள் மனிதரைப் படைத்தல் (தொநூ 1:27). மைக்கிலாஞ்சலோ போனறோட்டி (1465-1564) வரைந்த சுவர் ஓவியம். வத்திக்கான் நகரம்.

நூல் பெயர்

தொகு

"தொடக்கத்தில் கடவுள் விண்ணுலகையும், மண்ணுலகையும் படைத்தார்" என்று இந்நூல் தொடங்குவதால் "தொடக்க நூல்" என்னும் பெயர் வரலாயிற்று. இந்நூல் எழுதப்பட்ட மூல மொழியாகிய எபிரேயத்தில் "B'reshiyth" அதாவது (கடவுள்) "படைத்தார்" என்பது முதல் சொல்லாக உள்ளது. எனவே அப்பெயரும் இந்நூலுக்கு உண்டு. கிரேக்க விவிலியத்தில் இந்நூலின் பெயர் Γένεσις (Genesis = பிறப்பு, தொடக்கம், தோற்றம்) என்பதாகும்.

தொடக்க நூல்- தோரா (Torah) என்னும் ஐந்நூலின் பகுதி

தொகு

தொடக்க நூல் என்பது யூத மற்றும் கிறித்தவ விவிலியத்தின் முதல் நூலாக உள்ளது. அந்த முதல் நூலைத் தொடர்ந்து அமைந்துள்ள நான்கு நூல்களையும் சேர்த்து ஒரு தொகுதியாகக் கருதுவது யூத, மற்றும் கிறித்தவ வழக்கம். இந்த ஐந்து நூல்களும் பின்வருவன:

 • தொடக்க நூல் (ஆதியாகமம்)
 • விடுதலைப் பயணம் (யாத்திராகமம்)
 • லேவியர் (லேவியராகமம்)
 • எண்ணிக்கை (எண்ணாகமம்)
 • இணைத் திருமுறை (உபாகமம்)

இந்த ஐந்து நூல்களின் தொகுப்பு தோரா (Torah) என்னும் பெயரால் அழைக்கப்படுகிறது. இதற்கு போதனை, அறிவுரை, உபதேசம், அறநெறி, நல்வழி போன்ற பொருள்கள் உண்டு. சில வேளைகளில் சட்டம் என்றும் கூறப்படும். ஆனால், இது வெறுமனே ஒரு சட்டத் தொகுப்பு மட்டும் அல்ல.

தோரா என்னும் நூல் தொகுதி யூத மக்களின் சமய நம்பிக்கைக்கு அடிப்படை ஆகும். ஐந்து நூல்களை உள்ளடக்கியிருந்தாலும் அவை அனைத்தும் இணைந்து ஒரு பெரும் தொகுதியாக உள்ளன. ஐந்து நூல்கள் அடங்கிய தொகுதி என்னும் பொருள்பட அது ஐந்நூல் (கிரேக்கத்திலும் அதைத் தொடர்ந்து பிற மொழிகளிலும் Pentateuch) என்று அழைக்கப்படுகிறது. கிரேக்கத்தில் penta என்றால் ஐந்து; teuch என்றால் நூல்.

தோராவின் ஆசிரியர்

தொகு

யூத மரபுப்படி, தோரா நூல் தொகுப்பு மோசே என்னும் இறைவாக்கினரால் உருவாக்கப்பட்டது. எனவே, தோராவை மோசே(யின்) சட்டம் என்று கூறுவதும் உண்டு. கி.பி. 17ஆம் நூற்றாண்டு வரை இக்கருத்து நிலவியது. அதன் பின்னர், வரலாற்று ஆய்வுகளின் அடிப்படையில் தோரா முழுவதும் மோசே என்பவரால் எழுதப்பட்டிருக்க முடியாது என்னும் கருத்து நிலைநாட்டப்பட்டுள்ளது. மோசே கடவுளிடமிருந்து திருச்சட்டத்தைப் பெற்று, மக்களுக்கு அளித்தார் என்பதை ஏற்றுக்கொண்டாலும், தோரா என்று அழைக்கப்படுகின்ற நூல் தொகுதியின் இறுதி ஆசிரியர் மோசே என்பது இப்போது ஏற்கப்படுவதில்லை.

ஒருசில ஆய்வாளர் கருத்துப்படி, மோசே தோராவின் சில பகுதிகளை எழுதியிருக்கலாம். அவர் பெயரில் கி.மு. 10ஆம் நூற்றாண்டிலிருந்தே சில மரபுகளும் இருந்திருக்கலாம். ஆயினும் தோராவுக்கு இறுதி வடிவம் கொடுத்தவர்கள் வேறு ஆசிரியர்களே. விவிலியத்தில் விளக்கப்படுகின்ற இசுரயேல் மக்களின் சமய நம்பிக்கைக்கும் வாழ்க்கைக்கும் அடித்தளம் இட்டவர் மோசே என்பது உறுதி. ஆனால், கி.மு. 450 அளவில்தான் இந்நூல்கள் இறுதிவடிவம் பெற்றன.

மோசே இசுரயேல் மக்களை எகிப்திலிருந்து பாலைநிலம் வழியாக வழிநடத்தி வந்த காலம் கி.மு. சுமார் 1250. அப்போது அம்மக்கள் நாடோடிகளாக இருந்தார்கள். அவர்களுக்கென்று அமைப்புப்பெற்ற ஒரு வழிபாட்டிடம் இருக்கவில்லை. ஆனால், தோராவில் அத்தகைய கோவில் வழிபாட்டு முறைகள் மிக விரிவாகவும் நுணுக்கமாகவும் தரப்படுகின்றன. இத்தகைய வழிபாட்டு முறை கி.மு. 5ஆம் நூற்றாண்டில்தான் தொடங்கியது. இதன் அடிப்படையிலும், பிற வரலாற்றுச் சான்றுகளின் துணையோடும் தோரா (தொடக்க நூல், விடுதலைப் பயணம், லேவியர், எண்ணிக்கை, இணைச் சட்டம்) என்னும் நூல் தொகுதி கி.மு. ஐந்தாம் நூற்றாண்டைச் சார்ந்ததே என்பது அறிஞர் முடிபு.

உள்ளடக்கம்

தொகு

தொடக்க நூலில் அடங்கிய கருப்பொருள் கீழ்வருமாறு:

இவ்வுலகும் மனிதனும் உருவானதற்கு முதல் காரணம் இறைவனே ஆவார். கடவுள் மனிதனுடன் கொண்டுள்ள உறவு, படைப்பிலிருந்தே தொடங்குகிறது. ஆனால் மனிதன் பாவத்தின் மூலம் இவ்வுறவை முறித்து, துன்பத்திற்கும் சாவுக்கும் தன்னையே உள்ளாக்கிக் கொள்கிறான். ஆயினும் கடவுள் மனிதன் மேல் தொடர்ந்து கனிவு காட்டுகிறார்.

அனைத்து மானிடரையும் மீட்குமாறு, கடவுள் ஆபிரகாமைத் தேர்ந்தெடுத்து, அவர்தம் வழிமரபினர் வரலாற்றில் தாமே செயல்பட்டு, மீட்புப் பணியைத் தொடர்ந்தாற்றுகிறார்.

ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபுக்குத் தாம் அளித்த வாக்குறுதியை இறைவன் நிறைவேற்றுவார் என்னும் நம்பிக்கை நிலைத்துள்ளது.

இவ்வாறு தொடக்க நூல் மனித வரலாற்றோடும் இசுரயேலின் வரலாற்றோடும் தொடர்புடைய ஆழ்ந்த மறையுண்மைகளை எடுத்துரைக்கிறது.

தொடக்க நூலைப் புரிந்துகொள்வதற்கான வழிமுறைகள்

தொகு

தொடக்க நூல் இறுதிவடிவம் பெற்றது கி.மு. ஐந்தாம் நூற்றாண்டு என்றாலும் அதில் அடங்கியிருக்கின்ற பல பகுதிகளும் கருத்துகளும் மிகப் பழங்காலத்தைச் சேர்ந்தவை. எனவே, தொடக்க நூலை எவ்வாறு வாசித்து, புரிந்துகொள்வது என்பது குறித்து அறிஞர்கள் விளக்கங்கள் தருகின்றனர்.

 • நூலின் அமைப்பு: தொடக்க நூலில் இரு பெரும் பிரிவுகள் உள்ளன. முதல் பிரிவு (அதிகாரங்கள் 1 முதல் 11 முடிய) உலகம் தோன்றிய காலத்திலிருந்து வரலாற்றுக் காலம் தொடங்குவது வரையான நிகழ்வுகளை எடுத்துரைக்கிறது. இரண்டாம் பிரிவு (அதிகாரங்கள் 12 முதல் 50 முடிய இசுரயேல் மக்களின் மூதாதையரின் வரலாற்றை எடுத்துரைக்கிறது.
 • தொடக்க நூலின் முதல் பிரிவு (அதிகாரங்கள் 1 முதல் 11 முடிய):
 1. கடவுள் உலகையும் மனிதரையும் படைக்கிறார் (தொநூ 1:1 - 2:25)
 2. மனிதர் பாவம் செய்ததால் இன்ப வனத்திலிருந்து வெளியேற்றப்படுகிறார்கள் (தொநூ 3:1-24)
 3. ஆதாம் முதல் நோவா காலம் வரை நிகழ்ந்தவை (தொநூ 4:1 - 5:32)
 4. வெள்ளப் பெருக்கில் உலகம் அழிந்து போக, நோவாவும் குடும்பத்தினரும் பிழைக்கின்றனர் (தொநூ 6:1 -10:32)
 5. மனிதர் செருக்குற்று, பாபேல் கோபுரம் கட்டுதல் (தொநூ 11:1-9)
 6. சேம் முதல் ஆபிரகாம் வரையான தலைமுறை அட்டவணை (தொநூ 11:10-32).

தொடக்க நூலின் முதல் பிரிவு இவ்வுலகு எவ்வாறு தோன்றியது என்றும், உலகில் மனிதர் வகிக்கும் இடம் என்ன, அவர்கள் எதற்காகப் படைக்கப்பட்டார்கள், உலகில் நிலவும் துன்பத்திற்கும் சாவுக்கும் பொருள் என்ன முதலிய ஆழ்ந்த கேள்விகளுக்குப் பதிலையும் தொன்மப் புனைவாக எடுத்துரைக்கிறது.

உலகம் மற்றும் மனிதர் எவ்வாறு தோன்றினார்கள் என்பது குறித்து தொடக்க நூல் தருகின்ற தொன்மப் புனைவு வேறு மக்களினத்தாரிடமும் கலாச்சாரங்களிலும் உண்டு. குறிப்பாக, இசுரயேலை அடுத்துள்ள நடு ஆசிய கலாச்சாரங்கள் நடுவே வழக்கிலிருந்த தொன்மப் புனைவுகள் விவிலியப் புனைவை ஒத்திருக்கின்றன.

எடுத்துக்காட்டாக, கில்காமெஷ் (Gilgamesh) என்று அழைக்கப்படும் பாபிலோனிய தொன்மப் புனைவைக் கூறலாம். அதில் கில்காமெஷ் என்னும் வீரன் சாகா வரம் பெற முனைகின்றான். ஆனால் கடவுளர்கள் அவனைத் தண்டித்து அவனைச் சாவுக்கு உட்படுத்துகிறார்கள்.

இருப்பினும் விவிலியத்தில் வருகின்ற படைப்புத் தொன்மப் புனைவு சில சிறப்புப் பண்புகளைக் கொண்டுள்ளது: இக்கதையில் பல கடவுளர்களுக்குப் பதில் ஒரே கடவுள் வருகிறார். அவரே உலகம் அனைத்தையும் படைத்து அதை மனிதரின் கையில் ஒப்படைக்கிறார். கடவுள் தாம் படைத்த அனைத்தும் நன்றாக இருந்தது எனக் காண்கின்றார். ஆனால் மனிதர் கடவுளின் அன்பையும் நல்லெண்ணத்தையும் புறக்கணிக்கிறார்கள். தம் சொந்த விருப்புப் போல நடக்க விழைகிறார்கள். இதனால் உலகில் துன்பமும் சாவும் நுழைகிறது. மனிதர் ஒரு நாள் இறந்தே ஆகவேண்டும் என்னும் நிலை இருந்தாலும் கடவுள் அவர்களுக்கு ஒரு புது வாழ்வு தருவதாக வாக்களிக்கிறார். உலகம் அழியும் வேளையிலும் கடவுள் மனிதரைக் கைவிட மாட்டார் என்னும் நம்பிக்கை மிகுந்த செய்தி தொடக்க நூலில் உள்ளது.

 • தொடக்க நூலின் இரண்டாம் பிரிவு (அதிகாரங்கள் 12 முதல் 50 முடிய):
 1. இசுரயேல் மக்களின் மூதாதையரான ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோரின் வரலாறு (தொநூ 12:1 - 35:29)
 2. யாக்கோபின் சகோதரர் ஏசாவின் வழிமரபினர் (தொநூ 36:1-43))
 3. யாக்கோபின் மகன் யோசேப்பின் வரலாறு (தொநூ 37:1 - 45:28)
 4. இசுரயேல் மக்கள் எகிப்தில் குடியேறுதல் (தொநூ 46:1 - 50:26)

தொடக்க நூலின் இந்த இரண்டாம் பகுதி இசுரயேல் மக்கள் எவ்வாறு ஒரு பெரும் குலமாக உருவானார்கள் என்பதை வரலாறும் புனைவும் கலந்து எடுத்துரைக்கிறது. ஆபிராம் என்றொரு மனிதர் நடு ஆசியாவில் வாழ்ந்துவந்தார் (அன்றைய மெசபொத்தாமியா, இன்றைய ஈராக் பகுதி). கடவுள் ஆபிரகாமைத் தம் சொந்த ஊராகிய "ஊர்" என்னும் இடத்திலிருந்து வெளியேறுமாறு கூறுகிறார். ஆபிராமின் பெயரை ஆபிரகாம் என்று மாற்றி, அவரோடு ஓர் உடன்படிக்கை செய்துகொள்கிறார். ஆபிரகாம் ஒரு பெரிய இனத்திற்குத் தந்தை ஆவார் என்றும், பெரும் செல்வங்கள் பெறுவார் என்றும் கடவுள் வாக்களிக்கின்றார். ஆனால் ஆபிரகாமுக்குக் குழந்தைகள் இல்லை. பின், அவர் தமது துணை மனைவியின் மூலம் இசுமாயேல் என்னும் சிறுவனுக்குத் தந்தையாகின்றார்.

கடவுள் கருணையால் ஆபிரகாமுக்கு ஈசாக்கு என்றொரு மகன் பிறக்கிறார். அந்த மகனைத் தமக்குப் பலியாக்கக் கேட்கின்றார் கடவுள். ஆபிரகாமும் தயக்கமின்றி கடவுளுக்குக் கீழ்ப்படிகிறார். ஈசாக்கு பலியிடப்படுவதற்கு முன் கடவுள் அவரைக் காப்பாற்றி அவர் வழியாக இன்னொரு தலைமுறை தோன்றச் செய்கிறார். ஈசாக்கின் இரு பிள்ளைகளாகிய ஏசாவும் யாக்கோபும் ஒருவர் ஒருவருக்குப் போட்டியாக மாறுகிறார்கள். அவர்கள் இரட்டைப் பிள்ளைகள். மூத்தவனாகிய ஏசாவை விட இளையவனாகிய யாக்கோபே கடவுளுக்கு உகந்தவனாகிறான்.

யாக்கோபுக்குக் கடவுள் இசுரயேல் என்றொரு பெயரை அளிக்கிறார். இதுவே பிற்காலத்தில் ஒரு பெரும் இனத்தைச் சார்ந்த மக்களின் பெயராக மாறிற்று. யாக்கோபு என்னும் பெயர் "யூதா" என்றும் வரும். அச்சொல்லிலிருந்து "யூதர்" என்னும் சொல் பிறந்தது. அதுவும் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களுக்குப் பெயராயிற்று. பிற்காலத்தில் இம்மக்கள் குடியிருந்த பாலத்தீனத்தின் வடக்குப் பகுதி "இசுரயேல்" என்றும், தெற்குப் பகுதி "யூதா" என்றும் பெயர் பெற்றன.

யாக்கோபுக்குப் பிறந்த பன்னிருவரும் இசுரயேல் மக்களின் பன்னிரு குலங்களுக்குத் தந்தையர் ஆயினர். இவர்களுள் இளையவரான யோசேப்பு என்பவரின் கதை தொடக்க நூலின் இறுதி அதிகாரங்களில் உள்ளது (அதிகாரங்கள் 37 முதல் 50 முடிய).

கிறித்தவர்கள் தொடக்க நூலைப் புரிந்துகொள்ளும் முறை

தொகு

யூத மக்களுக்கு "தோரா" என்பது அடிப்படையான சமய நூல் தொகுப்பு ஆகும். அதோடு வரலாற்று நூல்கள், அறிவுரை நூல்கள் என்று வேறு பல நூல்களை உள்ளடக்கிய எபிரேய விவிலியம் அவர்களுடைய சமய நூல். யூதர்களின் சமய நூலாகிய விவிலியத்தைக் கிறித்தவர்கள் பழைய ஏற்பாடு என்னும் பெயரால் அழைக்கின்றனர். பழைய ஏற்பாட்டில் வாக்களிக்கப்பட்ட மெசியா பிற்காலத்தில் இயேசு என்னும் பெயரில் கன்னி மரியா வழியாகப் பிறந்தார் என்பது கிறித்தவ நம்பிக்கை. இயேசுவின் போதனைத் தொகுப்பை உள்ளடக்கிய புதிய ஏற்பாடும் கிறித்தவ விவிலியத்தின் பகுதியாகும். யூதர் புதிய ஏற்பாட்டைத் தம் விவிலியத்தின் பகுதியாக ஏற்பதில்லை.

தொடக்க நூலைப் பொறுத்தமட்டில், கிறித்தவர்கள் ஒரு சில முக்கியமான மறை உண்மைகள் அதில் அடங்கியிருப்பதாக நம்புகிறார்கள். அவையாவன:

 1. கடவுள் ஒருவரே இவ்வுலகையும் உலகிலுள்ள அனைத்தையும் படைத்தவர்.
 2. கடவுள் தாம் படைத்த உலகை ஆண்டு நடத்தும் பொறுப்பை மனிதரின் கைகளில் ஒப்படைத்துள்ளார்.
 3. உலகை உருவாக்கிய "கடவுள் மனிதரைத் தம் உருவில் படைத்தார்; கடவுளின் உருவிலேயே அவர்களைப் படைத்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார்" (தொநூ 1:27).
 4. மனிதர் கடவுளின் உருவும் சாயலுமாக இருப்பதால் அவர்கள் மதிப்பு வாய்ந்தவர்கள். மனித மாண்பு எல்லா மனிதருக்கும் உரியது. அவர்களிடையே ஏற்றத் தாழ்வுகளுக்கு இடமில்லை.
 5. மனிதர் கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் தம் மனம்போன போக்கில் சென்றதால் இவ்வுலகில் பாவம் நுழைந்தது. அதன் விளைவாகத் துன்பமும் சாவும் உலகில் புகுந்தன.
 6. கடவுள் மனிதரைக் கைவிட்டுவிடவில்லை. மாறாக, அவர்களுக்குப் புது வாழ்வு நல்கிட அவர் ஒரு மீட்பரை வாக்களிக்கிறார்.

கிறித்தவ நம்பிக்கைப்படி, மனிதரைப் பாவத்திலிருந்து விடுவித்து, அவர்களுக்கு மீட்பளித்து, புது வாழ்வில் என்றென்றும் பங்கேற்கும் பேற்றினை இயேசு கிறிஸ்து தம் சாவு, உயிர்த்தெழுதல் வழியாகப் பெற்றுத் தந்தார்.

சில கிறித்தவர்கள் தொடக்க நூல் கூறும் படைப்புப் புனைவை அப்படியே எழுத்துக்கு எழுத்து உண்மை என்று பொருள்கொள்கிறார்கள். ஆனால் இக்கருத்துடையோர் மிகச் சிறுபான்மையரே. பெரும்பான்மையான கிறித்தவ நோக்கின்படி, தொடக்க நூலில் உலகத் தோற்றம் பற்றிக் கூறப்படுபவற்றை அறிவியல் சார்ந்த உண்மைகள் என்று கொள்ளக் கூடாது. விவிலியம் அறிவியல் போதிக்க எழுந்த நூல் அல்ல. மாறாக, அது மறை சார்ந்த உண்மைகளை எடுத்துரைக்கிறது. மனிதர் யார், அவர்களுடைய வாழ்க்கையின் பொருள் என்ன, துன்பமும் சாவும்தான் மனிதரின் கதியா அல்லது அன்போடு நம்மைப் படைத்து ஆளுகின்ற கடவுள் நமக்கு ஒளிமயமான வாழ்வை அளிப்பாரா - இது போன்ற ஆழ்ந்த வினாக்களுக்குப் புனைவுகள், உருவகங்கள் முதலியவற்றின் வழியாக விவிலியம் நமக்குப் பதில் தருகின்றது. இதுவே பெரும்பான்மை கிறித்தவ இறையியல் பார்வை ஆகும்.

இஸ்லாமும் தொடக்க நூலும்

தொகு

திருக்குரான் நூலில் விவிலியப் படைப்புப் பற்றி கூறப்பட்டுள்ளது. ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, யோசேப்பு போன்ற இசுரயேலின் குலமுதுவர் கதைகளும் உள்ளன. ஆயினும் சில வேறுபாடுகளும் தெளிவான வரலாறுகளும் காணப்படுகின்றன.

தொடக்க நூலின் பிரிவுகள்

தொகு
பொருளடக்கம் அதிகாரம் - வசனம் பிரிவு 1995 திருவிவிலியப் பதிப்பில் பக்க வரிசை
1. உலகையும் மனித இனத்தையும் கடவுள் படைத்தல் 1:1 - 2:25 1 - 3
2. மனிதனின் வீழ்ச்சி - துன்பத்தின் தொடக்கம் 3:1 - 24 3 - 5
3. ஆதாம் முதல் நோவா வரை 4:1 - 5:32 5 - 7
4. நோவாவும் வெள்ளப் பெருக்கும் 6:1 - 10:32 7 - 13
5. பாபேல் கோபுரம் 11:1 - 9 13 - 14
6. சேம் முதல் ஆபிரகாம் வரை 11:10 - 32 14
7. மூதாதையர்:ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு 12:1 - 35:29 15 - 55
8. ஏசாவின் வழிமரபினர் 36:1 - 43 55 - 57
9. யோசேப்பும் அவருடைய சகோதரரும் 37:1 - 45:28 57 - 74
10. இஸ்ரயேலர் எகிப்து நாட்டில் குடியேறுதல் 46:1 - 50:26 74 - 82

ஆதாரங்கள்

தொகு

மேலும் காண்க

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தொடக்க_நூல்&oldid=4040948" இலிருந்து மீள்விக்கப்பட்டது