தொடர்ச்சியான தணிக்கை
தொடர்ச்சியான தணிக்கை அல்லது தொடர் தணிக்கை (Continuous auditing) தணிக்கை முறைகளுள் ஒன்று. ஒரு நிறுவனத்தின் நிதி நிலை மற்றும் கணக்குகள், அந்நிறுவனத்தின் ஊழியர்களால் தயாரிக்கப்பட்டு இயக்குநர் குழுவால் அங்கீகரிக்கப்படுகிறது. இதன் பிறகு, புறத் தணிக்கையாளர் ஒருவர் , இக் கணக்குகளைச் சரி பார்த்து சான்றளிக்கிறார். புறத் தணிக்கையாளர், ஆண்டின் இறுதியில்தான் தமது பணியைத் தொடங்குகிறார்.இயக்குநர் குழு, கணக்குகளைத் தம்மிடம் ஒப்படைத்த பிறகு, மிகக் குறுகிய காலத்திற்குள் அவர் தமது பணியை முடிக்க வேண்டி இருக்கிறது. மேலும், சில நிறுவனங்களில் (வங்கி போன்றவை) தணிக்கையாளரின் சான்றளிப்பு உடனடியாகத் தேவைப்படுகிறது. அவசரமாக பணியை முடிப்பதால் தவறுகள் நிகழ வாய்ப்பு உள்ளது. இதைத் தவிர்ப்பதற்காகவே தொடர்ச்சியான தணிக்கை அறிமுகப் படுத்தப் பட்டது.இதன் படி, தணிக்கையாளர், ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே நிறுவனத்திற்கு வருகை புரிந்து கணக்குகளைச் சரி பார்க்கிறார். குறிப்பிட்ட இடைவெளிகளில் மீண்டும் மீண்டும் வந்து கணக்குகளைப் பரிசோதித்து விடுவதால், ஆண்டு இறுதியில் வேலையை விரைவாக முடிக்க முடிகிறது.