தொண்டகப் பறை
தொண்டகப் பறை என்பது பண்டைய இசைக்கருவிகளில் ஒன்று. இது குறிஞ்சி நிலமாகிய மலையில் வாழ்ந்த மக்களின் இசை என்று இலக்கண நூல்கள் தெரிவிக்கின்றன. [1] இந்தப் பறை முழக்கத்துடன் குன்றக் குறவர் குரவை ஆடுவர். முருகு எனப்பட்ட வேலன் இதனை ஒலியோடு சேர்ந்து ஆடுதலும் உண்டு. இதில் இரண்டு வகை உண்டு. தொண்டகப்பறை என்பது உடுக்கு. தொண்டகச் சிறுபறை என்பது குடுகுடுப்பை. [2]
தொண்டகப் பறை ஒலிக்கும்போது இரவில் தினை அறுப்பவர் ஒலி கேட்பது போல இருக்கும்.[3]
அருவி ஒழுகும் மலைப்பிளவுக் கவாண் நிலத்தில் சிறுகுடிப் பாக்கத்தில் வேங்கைப்பூ சூடிக்கொண்டு தொண்டகப்பறை சீர் முழக்கத்திற்கு ஏற்ப முருகன் பெண்டிரைத் தழுவிக்கொண்டு ஆடுவது போல் அகப்பாடல் தலைவன் ஒருவன் ஆடினானாம். [4]
குரவைக் கூத்து தொண்டகச் சிறுபறை முழக்கத்துடன் ஆடப்படும். வேலன் கானவர் மூங்கில் குழாயில் மூடி விளைவித்துத் தந்த கள்ளை உண்டுவிட்டு குன்றகச் சிறுகுடி உறவினர்களுடன் இந்தப் பறை முழக்கத்துடன் குரவை ஆடினான். [5]
மேற்கோள் குறிப்பு
தொகு- ↑ நம்பியகப்பொருள் நூற்பா 20
- ↑ குடுகுடுப்பை - படம்
- ↑
சாரல்
சிறு தினை விளைந்த வியன்கண் இரும் புனத்து
இரவு அரிவாரின், தொண்டகச் சிறு பறை
பானாள் யாமத்தும் கறங்கும்.(குறுந்தொகை 375) - ↑
கறங்கு வெள் அருவி பிறங்கு மலைக் கவாஅன்,
தேம் கமழ் இணர வேங்கை சூடி,
தொண்டகப் பறைச் சீர் பெண்டிரொடு விரைஇ,
மறுகில் தூங்கும் சிறுகுடிப் பாக்கத்து,
இயல் முருகு ஒப்பினை (அகநானூறு 118) - ↑
பைங்கொடி, நறைக் காய் இடை இடுபு, வேலன், 190
அம் பொதிப் புட்டில் விரைஇ, குளவியொடு
வெண் கூதாளம் தொடுத்த கண்ணியன்;
நறுஞ் சாந்து அணிந்த கேழ் கிளர் மார்பின்:
கொடுந் தொழில் வல் வில் கொலைஇய கானவர்
நீடு அமை விளைந்த தேக் கள் தேறல் 195
குன்றகச் சிறுகுடிக் கிளையுடன் மகிழ்ந்து,
தொண்டகச் சிறு பறைக் குரவை அயர (திருமுருகாற்றுப்படை)