தொன்மவியல்

தொன்மவியல் (Mythology) என்பது, ஒரு குறிப்பிட்ட பண்பாட்டினர் உண்மை என்று நம்புகின்ற நாட்டுப்புறக் கதைகள், தொன்மங்கள், செவிவழிக் கதைகள் போன்றவற்றின் தொகுதியைக் குறிக்கும். இவை பொதுவாக, இயற்கை நிகழ்வுகளையும்; மனிதன், அண்டம் ஆகியவற்றின் இயல்புகளையும் விளக்குவதற்கு இயற்கைக்கு மீறிய விடயங்களைத் துணைக் கொள்கின்றன. தொன்மவியல் என்பது, தொன்மங்களைச் சேகரித்து, அவற்றை ஆய்வு செய்து, விளக்கம் கொடுப்பதில் ஈடுபடுகின்ற ஒரு அறிவுத்துறையை குறிக்கவும் பயன்படுகிறது. இது சில சமயங்களில் தொன்மவரைவியல் (mythography) எனவும் குறிப்பிடப்படுவது உண்டு. பல்வேறு பண்பாடுகளுக்குரிய தொன்மங்களை ஒப்பிட்டு ஆயும் துறை ஒப்பீட்டுத் தொன்மவியல் ஆகும்.

வரலாறு

தொகு

[[வில்பர் ஸ்காட்]] என்பவர்.தொன்மவியலை அறிமுகப்படுத்தினார்.[1]

தொன்மத்தை ஆங்கில மொழியில் மித்(Myth) என்று குறிப்பிடுவர்.இது Mithos என்னும் கிரேக்கச் சொல்லில் இருந்து எடுத்தாளப்பட்டதாகும்.இதற்கு, உண்மையான அல்லது கற்பனையான கதை அல்லது உட்கரு என்று பொருள்படும். அரிஸ்டாடிலின் கவிதையியல் என்னும் நூலில் இவ்வாறு கையாளப்பட்டுள்ளது.முனைவர் கா.மீனாட்சி சுந்தரனார் Myth என்னும் சொல்லிற்கு இணையான தமிழ் சொல்லாக தொன்மம் என்பதை உருவாக்கினார்.[2]

தொன்மமானது ஒவ்வொரு பண்பாட்டின் ஒரு அம்சமாகும். இயற்கையின் தன்மை அல்லது தன்னிச்சையான தன்மை, வரலாற்று மெய்மைகள் அல்லது மிகைப்படுத்தப்படும் சம்பவங்கள், அண்மைக்கால சடங்குகளின் விளக்கங்கள் எனத் தொன்மம் பல ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது. தொன்ம மற்றும் துப்பறியும் புதினங்களால் உருவாக்கப்பட்ட நகர்ப்புற புனைவுகள் மற்றும் விரிவான கற்பனையான தொல்கதைகள் போன்றவை சமகாலத்திலும் தொடர்கின்றன.ஒரு கலாச்சாரத்தின் கூட்டு தொன்மவியலானது , வளம் சார்ந்த பகிர்வு மற்றும் மத அனுபவங்கள், நடத்தை மாதிரிகள் மற்றும் ஒழுக்க மற்றும் நடைமுறை படிப்பினைகளை வெளிப்படுத்த உதவுகிறது.

தொன்மவியல் ஆய்வுகள் பண்டைய வரலாற்றிலேயே தொடங்கிவிட்டன. புதுமை தத்துவவாதிகளான ஹியூமெரஸ், பிளேட்டோ மற்றும் சல்லுஸ்டியஸ் ஆகியோர் கிரேக்க தொன்மங்களுக்கெதிராகக் கலகக்குரல் எழுப்பினர். பின்னர் மறுமலர்ச்சி தொன்மவியலாளர்களால் புத்துயிர் பெற்றது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஒப்பீட்டுத் தொன்மவியல் ஆய்வின் மாறுபட்ட சிந்தனைகளால் , பழைமையைத் தகர்த்தெறியும் அறிவியல் கருத்துகளுக்கு முரணானது (டைலர்), "மொழியின் நோய்" (முல்லர்) அல்லது மந்திர சடங்கின் தவறான விளக்கம்(ஃப்ரேஸர்)எனத் தொன்மம் விளக்கப்பட்டது.

மேலைநாட்டுத் தொன்மக்கதைகள் மற்றும் புராண வடிவங்கள் ஆகியவற்றைத் தொகுத்து [[The Golden Bough]] என்னும் பெயரில் நூலாக்கம் செய்யப்பட்டது.இந்நூல் பன்னிரண்டு தொகுதிகளை உள்ளடக்கியதாகும்.இப்பணியினை ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த மானுடவியலாளர் [[சர் ஜேம்ஸ் ஜார்ஜ் ஃப்ரேஸர்]](Sir James George Frazer),ஸ்வீடன் நாட்டு உளவியல் அறிஞர் [[கார்ல் குஷ்தவ் யங்]](Carl Gustav Jung) ஆகிய இருவரும் மேற்கொண்டனர்.தொடர்ந்து,விகோ(Vicco),

காசிரெர்(Cassirer),சூசன் லாங்கர்(Susanne K.Langer),ரிச்சர்ட் சேஸ்,குமாரி மாட்பாட்கின்(Miss Maud Bodkin),

நார்த்ரோப் ஃப்ரே(Northrop Frye)போன்றோர் இதுகுறித்து ஆய்வுகள் மேற்கொண்டனர்.

தொன்மவியல் திறனாய்வின் முன்னோடியான குமாரி பாட்கின் ஆவார். இவர் எழுதிய நூலின் பெயர் Archetypal Patterns in Poetry என்பதாகும். ஆங்கில கவிஞர்கள் பலரும் மறுபிறப்புத் தொன்மத்தைக் கையாள்வதாக இந்நூலில் குறிப்பிடப்பெற்றுள்ளது

கால எல்லை

தொகு

தொன்மத்தின் கால எல்லையானது கி.மு.100000 முதல் 40000 வரை என வரையறை செய்யப்படுகிறது.மனிதன்,இறந்தவனைப் புதைக்க முற்பட்டதிலிருந்து தொன்மவியல் காலம் தொடங்குகின்றது.[3]

தொன்மத்தின் நான்கு கட்டங்கள்

தொகு

நார்த்ரோப் ஃபிரே என்பவர் தொன்மங்களில் காணப்படும் நான்கு வகையான நிலைகளைக் குறிப்பிடுகின்றார்.

1)பிறப்புக் கட்டம்

2)திருமணம் அல்லது வெற்றிக்கட்டம்

3)இறப்புக் கட்டம்

4)சிதைவுக் கட்டம்

இவற்றுள் பிறப்புக் கட்டத்தில் அதிகாலைப் பொழுது,வசந்தம், தலைவன் பிறப்பு, புத்தெழுச்சி,புத்துயிர்ப்பு,படைப்புநிலை,நல்ல சக்திகளின் வெற்றி மற்றும் பனிக்காலம்,சாவு,இருள் ஆகிய சக்திகளின் மீதான வெற்றிக்களிப்புகள் முதலான தொன்மங்கள் சுட்டப்படுகின்றன.இவற்றின் துணைநிலை மாந்தர்களாகத் தாயும் தந்தையும் உள்ளனர்.இது புனைவியலின் தொல்படிமமாகும்.

அடுத்துவரும் திருமணம் அல்லது வெற்றிக் கட்டத்தில் நடுப்பகல்,கோடைக்காலம்,நாயகன் வானுறையும் தெய்வநிலையாதல்,புனிதமிக்க திருமணம், தேவலோகம் இவை பற்றிய தொன்மங்கள் காணப்படும். தலைவி,தோழி,பாங்கன் ஆகியோர் இதன் துணைநிலை மாந்தர்களாக இருக்கின்றனர்.இன்பியலின் முல்லைநிலக் கவிதைகள் இதன் தொல்படிவமாகும்.

இறப்புக் கட்டத்தில் மாலை நேரம், இலையுதிர் காலம்,வீழ்ச்சி, இறக்கும் தெய்வங்கள், கோர மரணம்,தியாகம், தலைவனின் தனிமை ஆகியவை உட்பண்புகளாக உள்ளன.மேலும், துன்பியல் இலக்கியம், கையறுநிலை ஆகியவற்றின் தொல்படிமங்களும் இதனுள் அடங்கும். துரோகி,துயரம் பாடும் பாடகர் ஆகியோர் இதன் துணைநிலைமாந்தர்களாக உள்ளனர்.

சிதைவுக் கட்டத்தில் இருள் ,பனிக்காலம்,பேரிடர்கள்,மீீள் வருகை,தலைவனின் தோல்வி போன்ற உட்பண்புகள் உள்ளன.இதன் தொல் படிமமாக எள்ளல் இலக்கியம் காணப்படுகிறது.பேய்,பிசாசு,சூனியக் காரர் ஆகியோர் இதன் துணைமாந்தர்களாக உள்ளனர்.

தொன்மம் உருவாவதற்கான காரணங்கள்

தொகு

தொன்மம் ஒரு தலைவனை முன்னிறுத்தி உருவாக்கப்படுகிறது.அத்தலைவன் ஏதேனும் ஒரு புதுமையை நிறுவியவனாக இருப்பது வழக்கம்.பலவகைப்பட்டதாக அது காணப்படும்.

காலப் புதுமை

தொகு

திருவள்ளுவர், புத்தர்,இயேசு கிறிஸ்து, முகமது நபி முதலானோர் இந்த உலகின்மீது தாக்கத்தைத் தோற்றுவித்தவராவர்.இவர்கள் மனித குல வரலாற்றில் புதுமைப் படைத்தவர்கள்.ஆதலால், இத்தகையோரை மையப்படுத்தி பல்வேறு தொன்மவியல் உருவாகியது.

சமயப் புதுமை

தொகு

சமணம், பௌத்தம்,சைவம், வைணவம், கிருத்துவம்,இஸ்லாம் ,சீக்கியம் முதலான சமயங்களின் எழுச்சி மனித வாழ்க்கையை மாற்றியமைத்தது.இச்சமயங்களைத் தோற்றுவித்தோரின் வாழ்வையும் அடியார்களின் வாழ்க்கையையும் ஒட்டிப் பல்வேறு தொன்மங்கள் உருவாக்கப்பட்டன.

புது நகரங்கள்

தொகு

விஸ்வகர்மா, மயன் ஆகியோர் முறையே நிறுவிய புதிய நகரங்களான திரிகூடாசலம்,இந்திரப் பிரஸ்தம் ஆகியவை தொன்மங்களாக ஆக்கப்பட்டுள்ளன.

புதிய வாழ்வியல் முறை

தொகு

புதிய வாழ்க்கை முறையும் அதனைத் தோற்றுவித்தோரும் பிற்காலத்தில் தொன்மங்களாக உருவாகின்றனர்.எடுத்துக்காட்டாக சீக்கிய மதத்தை நிறுவிய குருநானக், வழிபடு தெய்வமாகப் பின்பற்றப்படுகிறார்.

புத்துணர்வூட்டும் சூழ்நிலை

தொகு

புத்தாக்க வாழ்க்கை முறைக்கு அடிகோலிய இடம்,சூழல்,மனிதர் ஆகியோர் தொன்ம உருவாக்கத்திற்குக் காரணமாகின்றனர்.உதாரணத்திற்கு புத்தர் ஞானம் பெற்ற போதிமரம்,இயேசுவின் தீக்கை(Baptism),மோசஸ் மலை உச்சியும் சட்டத் தொகுப்பும்(Table of Laws),கிரேக்கப் பெருநகரங்கள் உருவாக்கம் போன்றவற்றை எடுத்துரைக்கவியலும்.

தொன்மங்களின் வகைப்பாடுகள்

தொகு

1.கடவுளர்கள் மற்றும் சமயங்கள் அடிப்படையிலான தொன்மங்கள்.

2.எளிய மாந்தர்களின் வாழ்க்கையில் தெய்வநிலை அடைந்தோர் அடிப்படையிலான நாட்டார் வழக்காற்றுத் தொன்மங்கள்.

3.இலக்கியச் சிந்தனையில் பெருமை பெற்ற தொன்ம மாந்தர்கள்.[4]

தொன்மவியலின் அடிப்படைகள்

தொகு

தொன்மைவியலானது மனிதனின் பகற்கனவில் உருவான கற்பனையன்று.உண்மையின் அடிப்படையிலேயே தொன்மங்கள் உருவாகின்றன.இதற்கு மனிதனின் உளப்பாங்கு அவசியமாக உள்ளது.மேலும்,தொன்மமாவது மனிதனின் இயல்புகளை வெளிக்காட்டுகிறது.மனிதனின் நிறைவேற்றிக் கொள்ள இயலாத ஆசைகளும் தொன்மங்களாக எழுகின்றன.எனவே,கனவுகளோடு தொன்மங்கள் ஒப்பிடப்படுகின்றன.கனவு தனிமனிதனுடையது;தொன்மம் குறிப்பிட்ட சமுதாயக் கனவாகும்.[5]ஆதலால்,சமுதாயக் கனவுக் கூறுகளைத் தொன்மங்கள் தன்னளவில் கொண்டுள்ளன.வனதேவதைகளின் தொல் கதைகள் தொன்மைங்களைவிடவும் பழமைமிக்கவை.இவை நனவிலி மனத்தின் வெளிப்பாடுகளாக இருக்கின்றன.

மனித ஆசையின் படிமங்களும் தொன்மங்களாகின்றன.இதற்கு ஓடிபஸ் தொன்மத்தை(Oedipus Myth) உதாரணமாகக் கொள்ளவியலும்.உளவியல் பகுப்பாய்வு முறையில்(Psycho-Analytical Theory) ஓடிபஸ் மனப்பிறழ்வு(Oedipus Complex) கொள்கையானது முக்கிய பங்கு வகிக்கிறது.இத்தொன்மத்தின் வழிநின்று சிக்மண்ட் ஃபிராய்டு,மன அழுத்தம் காரணமாக மனிதனின் இயல்பூக்க உணர்ச்சிகள் கனவுகளில் வெளிப்படுகின்றன என்று எடுத்துரைத்துள்ளார்.மேலும்,நரம்பு மண்டலத்தின் வரம்பு மீறிய அடையாள இயக்கமானது கனவுகளின்போது எதிரொலிக்கப் பெறுகின்றன என்றும் கூறியுள்ளார்.இக்கொள்கையானது இருவேறு கருத்துக்களை உள்ளடக்கியுள்ளது.அதாவது ஆதரிப்போரும் உண்டு.மறுப்போரும் உண்டு.ஆயினும்,உளவியல் பகுப்பாய்வில் இதன் கருதுகோள்கள் இன்றியமையாதவையாகும்.இவ் ஒடிபஸ் மனப்பிறழ்வுக் கொள்கையையொட்டி,எலக்ட்ரா(Electra),மேடா(Meta),ஃபெயட்ரா(Phaedra)முதலான தொன்மங்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன.

இவற்றுள் மேடா என்னும் கிரேக்கத் தொன்மம்,பெண்களின் உள்ளார்ந்த விடாப்பிடிப் போக்கை(Exclusive Possession in Women)வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.ஃபெயட்ரா எனும் தொன்மத்தில் தாய் தன் மகனிடம் கொள்ளும் தகாத உறவுமுறையின் விளைவை எடுத்துரைக்கின்றது.ஆதாம்,ஏவாள் தொன்மங்கள் இத்தகைய உணர்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டுள்ளன.ஈட்ன் தோட்டத்தில் ஆப்பிளை சுவைக்கக்கூடாது என்கிற கட்டுப்பாடு மீறப்படும் நிகழ்வானது,மனிதனின் இயல்பூக்கத்தை வெளிப்படுத்துகிறது.

இந்தியத் தொன்மத்தில் விழுமியக் கொள்கைக்கும் புலனுணர்ச்சி தன்முனைப்பிற்கும் இடையே எழும் முரணை அடிப்படையாகக் கொண்டது இராமாயணமும் மகாபாரதமும் ஆகும்.இராம,இராவண கொல்களமும்,அர்ச்சுன,துரியோதன செருகளமும் இங்கு உதாரணங்களாகும்.காமன் எரிப்பு,அகலிகை சாபம்,இந்திரனின் கொடுந்தோற்றம் முதலானவை இந்திய தொன்ம வளத்திற்கு சான்றுகளாவன.

மனிதனின் வாழ்க்கையில் தோன்றும் பாலுணர்ச்சியின்(Libido)விளைவும் மனநிலைப் பிறழ்வும் தொன்மங்களாக உருவெடுக்கின்றன என்பது அறிஞர் யுங் கொள்கையாகும்.[6]

தொன்மவியலில் நடுகல் வழிபாடு

தொகு

தொன்மவியலில் நடுகல் வழிபாடு சிறப்பிடம் பெறுகிறது.நடுகல் வழிபாட்டு முறையில் தமிழ் மக்களின் வாழ்வியல் பதிவுகள் தொன்றுதொட்டு கீழ்க்காணும் செய்திகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

1. அரசர்களுக்காகவும்,நாட்டுக்காகவும்,மக்களுக்காகவும் உயிர்நீத்தல்.

2. சிற்றரசர்கள் பற்றிய செய்திக் குறிப்புகள்.

3. சமூக நிலைப் போக்குகள்(சதி, உடன் கட்டை, களப்பலி)

4. மொழி வளர்ச்சி நிலைகள்(வட்டெழுத்து மாற்றம் மற்றும் வட்டார வழக்கு சொற்கள்)

5. உலகில் காணப்படும் ஓயாத பூசல்கள்.

6. கால்நடைகள் மீதான பற்று.

7. காடுகளை அழித்து நாடு செய்தலில் ஏற்படும் இடையூறுகள்.(காட்டு விலங்குகளுடன் போரிடும் நடுகல்)

8. நன்றி மறவாமை நிகழ்வுகள்.(நாய், கோழி, குதிரை போன்ற வளர்ப்பு மிருகங்களுக்கு நடுகல் அமைத்து வழிபாடு)

9. பண்டைய தமிழ் மக்களின் இரும்பின் பயன்பாடுகள்(ஆயுதங்களுடைய நடுகற்கள்)

10.மக்களின் நம்பிக்கைகள் (படையல் வழிபாட்டு முறை)[7]

மேற்கோள்கள்

தொகு
  1. தி.சு.நடராசன் (2008). திறனாய்வுக்கலை. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பி.லிட்,சென்னை-98. pp. ப.191. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-234-0485-9.
  2. முனைவர் பாக்யமேரி (2008). வகைமை நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பி லிட், சென்னை-98. pp. ப.251. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-234-1346-7.
  3. கதிர்.மகாதேவன் (2008). தொன்மம். செல்லப்பா பதிப்பகம், மதுரை-1. pp. ப.22.
  4. பேராசிரியர் க.ராமச்சந்திரன் (2007). இருபதாம் நூற்றாண்டு தமிழ்க் கவிதைகளில் புராண மரபுக் கூறுகள். சரவணா வெளியீடு,சென்னை-94. pp. ப.57.
  5. கதிர்.மகாதேவன் (2008). தொன்மம். செல்லப்பா பதிப்பகம்,மதுரை-1. pp. ப.30.
  6. கதி.மகாதேவன் (2008). தொன்மம். செல்லப்பா பதிப்பகம்,மதுரை-1. pp. ப.33.
  7. "நடுகல் கூறும் தமிழரின் வாழ்வு நெறிகள்". பார்க்கப்பட்ட நாள் 11 சூன் 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தொன்மவியல்&oldid=3087586" இலிருந்து மீள்விக்கப்பட்டது