தொலை உரைகாட்டி
தொலை உரைகாட்டி ( teleprompter ) என்பது பேச்சாளருக்கு வசதியாக பேசவேண்டிய உரையை அவர் முன் காட்டும் மின்னணுவியல் கருவியாகும். இக்கருவி தொலைக்காட்சி செய்திவாசிப்பாளர்களில் தொடங்கி படப்பிடிப்புகள், கருத்தரங்குகள், அரசியல் பரப்புரை என பல இடங்களில் பயன்படுகிறது. தொலைக்காட்சி செய்திவாசிப்பாளரை படம்பிடிக்கும் காணொளி கருவியின் ஒளிப்பட வில்லையின் அருகில், வாசிப்பாளரின் கண்களுக்கு நன்கு புலப்படுமாறும் பெரிய எழுத்துக்களில் திரையிடப்படக்கூடிய வகையில் உள்ள ஒரு அமைப்பாகும். மேடைப் பேச்சாளர்களுக்கு முன்பு இரு பக்கமும் 45 பாகை கோணத்தில் வைக்கப்பட்டிருக்கும் மேம்படுத்தப்பட்ட இந்தச் சாதனம் வெறும் கண்ணாடிப் பலகை போல காட்சி அளிக்கும். இந்த கண்ணாடி மீது எழுத்து வடிவம் ஓடவிடப்படும். இதைப் பேச்சாளர் மட்டுமே பார்க்க முடியும். பார்வையாளர்களுக்குக் கண்ணாடி மட்டும்தான் தெரியும். இதன் பயனால் பேச்சாளர் கீழே குணிந்து எழுதப்பட்ட உரையை கண்டு படிக்கவேண்டிய தேவை இருக்காது. திரையைப் பார்த்தபடி மனப்பாடமாக பேசுவதுபோல் பேசலாம்.
வரலாறு
தொகுமுதன் முதலில் தொலை உரைகாட்டி சாதனத்தை தயாரிக்கும் நிறுவனம் 1950இல் தொலை உரைக்காட்டி கார்ப்பரேஷன் என்ற பெயரில் பிரெட் பார்ட்டன், ஸ்கால்ஃபிளை, இர்விங்கான் ஆகியோர் இணைந்து நிறுவினர். பார்ட்டன் ஒரு நடிகர் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசவேண்டிய விசயத்தை மறந்துவிடும் சங்கடம் தனக்கு ஏற்பட்டுவிடக் கூடாது என நினைத்து இதற்கு மாற்று வழி தேடினார். நாடகங்களில் துண்டுச் சீட்டுகளை எழுதி வைத்துக்கொண்டு அவ்வப்போது யாருக்கும் தெரியாமல் எடுத்துப் பார்ப்பது போல, கேமராவுக்குப் பின் தானாக இந்தத் துண்டுச் சீட்டுகளை ஓடச் செய்தால் என்ன என்று அவர் யோசித்தார்.[1] இப்படி தான் முதல் தொலைஉரைக்காட்டி 1950இல்உருவானது.[2] இந்தக் கருவி பிரபலமாகி மேலும் பலரும் வேறு வடிவங்களில் தயாரிக்கத் தொடங்கினர். 1952இல் அமெரிக்க அதிபர் தேர்தல் பரப்புரையில் முன்னாள் அதிபர் ஹெர்பெர்ட் ஹூவர் முதல் முறையாக இந்தச் சாதனத்தைப் பயன்படுத்தினார். அதன் பிறகு 1954இல் அதிபர் ஐசன்ஹோவர் நாடாளுமன்ற உரைக்காக இதைப் பயன்படுத்தினார்.
ஐ லவ் லூசி தொலைக்காட்சித்தொடரின் தயாரிப்பாளரான ஜெஸ் ஓப்பன்ஹாமர் கேமரா ஒளிவில்லையில் எழுத்து வடிவம் எதிரோளிக்கும் சாதனத்தை உருவாக்கினார். அதனை அடுத்து, கணிணிகள் அறிமுகமான காலத்தில் கணினி சார்ந்த தொலை உரைகாட்டிகள் உருவாக்கப்பட்டன. இவற்றின் மேம்பட்ட வடிவமே தொலைக்காட்சி செய்தி வாசிப்பில் பயன்படுத்தப்படுகிறது.[3]
குறிப்புகள்
தொகு- ↑ Brown, Laurie (2005-12-28). The Teleprompter Manual. The Difference. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-9767761-0-3.
- ↑ Engineers' Device Eased Speechmakers' Minds, Wall Street Journal, April 26, 2011, p.
- ↑ சைபர்சிம்மன் (28 சூன் 2016). "கண்ணுக்குத் தெரியாமல் வழிகாட்டும் கருவி". தி இந்து (தமிழ்). பார்க்கப்பட்ட நாள் 29 சூன் 2016.