தொல்காப்பியமும், பாணினீயமும்
தமிழிலக்கணத்தை வடமொழி வழித்தாகக் காட்டல் வேண்டி, நடுநிலை திறம்பிய வரலாற்றாசிரியரும், பிராமணத் தமிழ்ப் புலவரும் தொல்காப்பியத்தைப் பாணினீயத் திற்குப் பிற்பட்டதாகக் காட்டுவதுண்டு.
காலம்:பாணினியின் காலம் கி.மு. 5 ஆம் நூற்றாண்டென்று வரலாற்று நூலாசிரியராலும், மொழியாராய்ச்சியாளராலும் வரையறுக்கப் பெற்றுள்ளது.தொல்காப்பியம், பாணினீயத்திற்கு முந்தியதும் பாரதக் காலத்திற்கும் (கி.மு.1000) கடைக்கழகத் தொடக்கத்திற்கும், (கி.மு. 5 ஆம் நூற்.) இடைப்பட்டதுமாதலின், கி.மு. 7ஆம் நூற்றாண்டின தாகும்.
முக்கியக் காரணிகள்
தொகு- தொல்காப்பியம் பாரதக்கால நான்மறை வகுப்பிற்குப் பிற்பட்டமை ஆகும்.
- தொல்காப்பியச் சிறப்புப் பாயிரத்தில், பாணினீயத்திற்கு முந்திய ஐந்திரமே குறிக்கப்பெற்றுள்ளமை கவனிக்கத் தக்கதாகும்.
- தொல்காப்பியம் கடைக்கழகத்திற்கு, முந்திய நிலந்தரு திருவிற்பாண்டியன் அவையத்து அரங்கேறியமையும், கடைக்கழகத் தோற்றம் கி.மு. 5ஆம் நூற்றாண்டென்று இராமச்சந்திர தீட்சிதரால் நிறுவப்பெற்றுள்ளது.
- தொல்காப்பியர் தம் காலத் தமிழகத்தில் வேற்றரசர் படையெடுப்பும், சிற்றரசர் தலையெடுப்பு மின்மையை, "வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு" (1336) என்னுந் தொடராற் குறித்திருத்தல் கவனிக்கத் தக்கது.
- அற்றைத் தமிழக எல்லை வடவேங்கடமும், தென்குமரியும் குணகடலும் குடமலையும் என அறியுமாறு, "நாற்பெய ரெல்லை" (1336) எனத் தொல்காப்பியத்திற் குறிக்கப் பெற்றிருத்தல்.
- இரண்டொரு தொல்காப்பிய இலக்கண வரம்பு கடைக் கழகச் செய்யுளிற் கைக்கொள்ளப் பெறாமை.
- தொல்காப்பியம் எழுத்தும், சொல்லும், பொருளும், ஆகிய மூவதிகாரங் கொண்டிருத்தலும், பாணினீயம் எழுத்தும் சொல்லுமாகிய ஈரதிகாரத்ததே யாதலும், ஆகவே முன்னதினின்று பின்னதன்றிப் பின்னதினின்று முன்னது தோன்றற்கிடமின்மையும் குறிப்பிடத் தக்கன ஆகும்.
- தொல்காப்பியப் பொருளதிகாரம், யாப்பணிகளையும் தன்னுட் கொண்டதாகும்.