தொழில்துறை தாங்கு வகைக்கூட்டு
தொழில்துறை தாங்கு வகைக்கூட்டு (Industry Foundation Classes - IFC) தகவல் வடிவமானது, கட்டட மற்றும் கட்டுமானத் தொழில்துறை சார்ந்த தரவுகளை விவரிப்பதற்காக உருவாக்கப்பட்டது. இது எந்த ஒரு தனிப்பட்ட வணிகராலோ, வணிகக் குழுவினராலோ கட்டுப்படுத்தப்படாததும் இயக்குதளங்களில் தங்கியிராததுமான, திறந்த கோப்பு வடிவ விவரக்கூற்று. "பில்டிங்சிமார்ட்" (buildingSMART) என்னும் அமைப்பினால் கட்டிடக்கலை, பொறியியல், கட்டுமானம் ஆகிய துறைகளில் interoperability க்கு வசதி ஏற்படுத்தும் முகமாக உருவாக்கப்பட்ட தரவு மாதிரியம் இது. அத்துடன், கட்டிடத் தகவல் மாதிரியாக்கத்தை அடிப்படையாகக் கொண்ட திட்டங்களில் இது பொதுவாகப் பயன்படுகிறது. இந்த விவரக்கூற்று திறந்ததும் கிடைக்கத்தக்கதும் ஆகும்.[1]
வரலாறு
தொகுதொழில்துறை தாங்கு வகைக்கூட்டுக்கான முன்முயற்சி 1994ல் தொடங்கியது. இவ்வாண்டில், ஒருங்கிணைந்த பயன்பாட்டு மென்பொருள் வளர்த்தெடுப்பை ஆதரிக்கும் பொருட்டான C++ வகுப்புக்களை உருவாக்குவதில் ஆலோசனை கூறுவதற்கான குழு ஒன்றை ஆட்டோடெசுக் (Autodesk) மென்பொருள் நிறுவனம் அமைத்தது. இக்குழுவில் பன்னிரண்டு அமெரிக்க நிறுவனங்கள் இணைந்தன. இதில் ஏ.டி& டி (AT&T), எச். ஓ. கே ஆர்க்கிடெக்சு, அனிவெல் (Honeywell), கரியர், திசுமன் அன்ட் பட்லர் மனுபக்சரிங் என்பனவும் அடங்கியிருந்தன.[2] செப்டெம்பர் 1995ல், விரும்பும் எந்தத் தரப்பினரும் இக்குழுவில் உறுப்பினராகலாம் என அறிவிக்கப்பட்டது. பின்னர் இது இலாப நோக்கற்ற, தொழிற்றுறையால் முன்னெடுக்கப்படும் அமைப்பாக மீளமைக்கப்பட்டது. இது கட்டிட வாழ்க்கை வட்டத்துக்கு ஏற்புடையதாக நடுநிலையான உற்பத்தி மாதிரியமாக அமையக் கூடிய வகையில், தொழில்துறை தாங்கு வகைக்கூட்டை வெளியிடுவதை நோக்கமாகக் கொண்டிருந்தது. 2005 ஆம் ஆண்டில் இக்குழுவின் பெயர் பில்டிங்சிமார்ட் எனப் பெயர்மாற்றம் செய்யப்பட்டது. இந்த அமைப்பு தொழில்துறை தாங்கு வகைக்கூட்டு விபரக்கூற்றைத் தற்போது உருவாக்கிப் பேணி வருகிறது.