தோமாவின் பணிகள்

தோமாவின் பணிகள் (Acts of Thomas) என்பது கிபி மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சிரியாக் மொழியில் எழுதப்பட்ட ஒரு கிறிஸ்தவ நூல் ஆகும். இயேசு கிறிஸ்துவின் பன்னிரு திருத்தூதர்களில் ஒருவரான புனித தோமாவின் வரலாற்றை கதை வடிவில் கூறுகின்ற நூலாக இது அமைந்துள்ளது. இந்தோ-பார்த்திய அரசரான கொண்டபோரசை தோமா மனந்திருப்பி கிறிஸ்தவராக மாற்றியது குறித்தும், மஸ்டாய் (மயிலை) அரசரின் தூண்டுதலால் கொலை செய்யப்பட்டது குறித்தும் இதில் தகவல்கள் உள்ளன. சலாமிஸ் ஆயரான எபிபானியுஸ், இந்நூல் கிபி நான்காம் நூற்றாண்டில் பரவலாக புழக்கத்தில் இருந்ததாக குறிப்பிடுகிறார். இதன் விரிவாக்கப்பட்ட கிரேக்க மொழிபெயர்ப்பு ஆறாம் நூற்றாண்டுக்கு பிறகு உருவானதாக அறிகிறோம்.

அறிமுகம்

தொகு

‘தோமாவின் பணிகள்’ நூல் கி.பி. 230ல் சிரியாவின் எதெசா நகரில் எழுதப்பட்டது. திருத்தூதர் தோமாவைப் பற்றிய அடிப்படை விவரங்களுடன், அவரது நற்செய்தி பயணம் குறித்து விளக்கமாக எடுத்துரைக்கும் நூலாக இது அமைந்துள்ளது. இயேசு கிறிஸ்துவின் திருத்தூதர்களில் ஒருவரான இவரை யூதா தோமா என்று அறிமுகம் செய்கிறது. வடக்கில் கொண்டபோரஸ், தெற்கில் மஸ்டாய் நாடுகளில் தோமா நற்செய்தி போதித்து பலரை மனந்திருப்பியது மற்றும் பல்வேறு அற்புதங்கள் செய்ததை இந்நூல் விவரிக்கிறது. தோமாவின் செயல்பாடுகள் பதிமூன்று பணிகளாகப் பிரித்து இதில் கூறப்பட்டுள்ளது. இந்த பணிகளின் செய்திகள் வாசிக்க வசதியாக மொத்தம் 171 அதிகாரங்களாக பகுத்து தரப்பட்டுள்ளன.[1]

உள்ளடக்கம்

தொகு

முதல் பணியில் (அதி 1-16) திருத்தூதர் தோமா வணிகர் அபானுடன் இந்தியா புறப்படுகிறார், அந்த்ரபொலிஸ் திருமண விருந்தில் தோமாவை அறைந்தவர் சிங்கத்தால் கொல்லப்படுகிறார், அரசக் குடும்ப மணமக்கள் துறவறம் பேண தோமா அறிவுரை வழங்குகிறார்.[2] இரண்டாம் பணியில் (அதி 17-29) இந்தியாவை அடைந்த தோமா அரசர் கொண்டபோரஸிடம் அரண்மனை கட்ட பணம் பெறுகிறார், அந்த பணத்தை ஏழைகளுக்கு செலவிட்ட தோமா அபானுடன் சிறையில் அடைக்கப்படுகிறார், இறந்து உயிர்த்த கொண்டபோரஸின் சகோதரர் காத் விண்ணக மாளிகை பற்றி எடுத்துரைக்கிறார், தோமாவுக்கு விடுதலை அளித்து அரசரும் சகோதரரும் திருமுழுக்கு பெறுகின்றனர்.[2] மூன்றாம் பணியில் (அதி 30-38) ஓர் இளைஞனைக் கடித்துக் கொன்ற பாம்பே அந்த நஞ்சை உறிஞ்சி எடுக்கச் செய்து அவனுக்கு தோமா உயிரளிக்கிறார், அதனால் பலரும் கிறிஸ்தவத்தை ஏற்றுக் கொள்கின்றனர்.[2] நான்காம் பணியில் (அதி 39-41) தோமாவின் புகழை எடுத்துரைத்த கழுதை மீது அவர் பயணிக்கிறார், நகரின் வாயிலில் கழுதை இறந்ததும் அதன் உடலைப் புதைக்கின்றனர்.[2]

ஐந்தாம் பணியில் (அதி 42-50) தீய ஆவியால் துன்புற்ற ஒரு பெண்ணை தோமா சந்திக்கிறார், அவள் தனது வாழ்வின் கசப்பான அனுபவத்தை அவரிடம் கூறுகிறாள், அவளை வதைத்த தீய ஆவியை விரட்டிய தோமா அவளுக்கு நற்கருணையும் பாவ மன்னிப்பும் வழங்குகிறார்.[2] ஆறாம் பணியில் (அதி 51-61) தோமாவின் போதனையைக் கேட்கச் சென்ற ஓர் இளைஞன் வாதநோயால் பாதிக்கப்படுகிறான், அவன் தனது மனைவியைக் கொன்றதை தோமா அறிகிறார், அவளை உயிரோடு எழுப்பி புதுவாழ்வு அளிக்கிறார்.[2] ஏழாம் பணியில் (அதி 62-67) அரசர் மஸ்டாயின் தளபதி சிப்போர் தோமாவை சந்திக்கிறார், அவரது மனைவி மற்றும் மகளைப் பீடித்த தீய ஆவிகளை விரட்ட உதவி கேட்கிறார், அவர்கள் நலம்பெற மக்கள் செபிக்கின்றனர்.[2] எட்டாம் பணியில் (அதி 68-81) சிப்போரும் தோமாவும் மஸ்டாய் நாட்டுக்கு மாட்டு வண்டியில் செல்கின்றனர், சிப்போரின் வீட்டை அச்சுறுத்திய தீய ஆவிகளை தோமா நரகத்திற்கு விரட்டுகிறார்.[2]

ஒன்பதாம் பணியில் (அதி 82-118) அரசர் மஸ்டாயின் உறவினர் காரிஷின் மனைவி மிக்தோனியா இல்லற வாழ்வை விலக்குகிறார், அதற்கு காரணமான தோமா துன்புறுத்தி சிறையில் இடப்படுகிறார், அவரைக் காப்பாற்ற மிக்தோனியா முயற்சி செய்கிறார்.[2] பத்தாம் பணியில் (அதி 119-133) மிக்தோனியா மற்றும் அவளது தாதியர் மார்சியாவுக்கு தோமா திருமுழுக்கு வழங்குகிறார், சிப்போரின் குடும்பத்தோடு அவர் திருவிருந்து கொண்டாடுகிறார்.[2] பதினோராம் பணியில் (அதி 134-138) மிக்தோனியாவை மனந்திருப்பும் முயற்சியில் அரசி தெரீசியா ஈடுபடுகிறார், தோமாவின் போதனையால் கவரப்பட்டு அரசரை மனந்திருப்ப முயற்சிக்கிறார்.[2] பன்னிரண்டாம் பணியில் (அதி 139-149) இளவரசர் வீசனுக்கு தோமா நற்செய்தி போதிக்கிறார், நெருப்பால் சூடேறிய இரும்புத் தகட்டின் மேல் தோமா நிறுத்தப்பட்ட வேளையில் வெள்ளம் பொங்கி வந்து அவ்விடத்தைக் குளிர்விக்கிறது.[2] பதிமூன்றாம் பணியில் (அதி 150-171) சிறையில் இருந்த தோமாவை நாட்டை விட்டு வெளியே அனுப்ப அரசி தெரீசியா முயற்சிக்கிறார், வீசனின் மனைவி மென்சரா உடல்நலம் பெறுகிறாள், அரசரின் கட்டளையால் தோமா ஈட்டியால் குத்தி கொல்லப்படுகிறார், தோமாவின் எலும்புகள் வேறிடத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது, அவரது கல்லறை மண்ணால் வீசன் நலமடைகிறார், மனமாறிய அரசர் மஸ்டாய்க்கு சிப்போர் திருமுழுக்கு வழங்குகிறார்.[2]

புரிதல்கள்

தொகு

இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்து விண்ணகம் சென்ற பிறகு, அவரது திருத்தூதர்கள் எந்தெந்த நாட்டில் சென்று பணியாற்ற வேண்டும் என்பது குறித்து சீட்டுப் போட்டு பார்த்தனர். அப்போது, தோமாவுக்கு விழுந்த சீட்டில் இந்தியாவின் பெயர் வந்ததை அடுத்து, அவர் இந்தோ-பார்த்திய அரசரான கொண்டபோரஸ் அனுப்பிய ஹப்பான் என்ற வனிகருடன் அவர் தட்சசீலம் வந்ததாக தோமாவின் பணிகள் நூல் கூறுகிறது.[3] கொண்டபோரஸ் அரசவைக்கு வந்த தோமா, மாளிகை கட்டுவதாகக் கூறி வாங்கிய பணத்தை வாங்கிக் கொண்டு, அதை ஏழைகளுக்கு உதவ செலவிட்டார். மாளிகையைக் கட்டாமல் தோமா தம்மை ஏமாற்றி விட்டதாகக் கூறி, அவரை அரசர் சிறையில் அடைத்தார். அப்போது திடீரென இறந்த அரசரின் தம்பி காத் மீண்டும் உயிர் பெற்று, தோமா விண்ணகத்தில் கட்டிய மாளிகையைத் தமக்கு தருமாறு கேட்டார். இதையடுத்து, தோமாவின் மேன்மையை உணர்ந்த அரசர் கொண்டபோரஸ், அவரது குடும்பத்துடன் திருமுழுக்கு பெற்று கிறிஸ்தவரானார். அதன் பிறகு, சிறிது காலம் அந்த நாட்டில் உள்ள மக்களுக்கு இயேசுவைப் பற்றிய நற்செய்தி அறிவித்து, பலரை மனந்திருப்பினார். இது தோமாவின் பணிகள் தருகின்ற முதல் செய்தி.[4]

பின்னர் மஸ்டாய் (மயிலை) நாட்டுக்கு சென்ற தோமா, காரிஷ் (தமிழ்: காரி) என்ற அரசவை பணியாளரின் மனைவி மிக்தோனியா (தமிழ்: மகுதானி) நோயை குணப்படுத்தினார். இதையடுத்து, தோமா அப்பகுதியில் இயேசுவைப் பற்றிய நற்செய்தியை மக்களுக்கு அறிவித்து பல்வேறு அற்புதங்கள் செய்து வந்தார். இதை அறிந்த அரசர் மஸ்டாயின் (தமிழ்: மகாதேவன்) மனைவி தெரிசியா (தமிழ்: தர்சிகா) தோமாவின் போதனைகளை ஏற்றுக்கொண்டு கிறிஸ்தவராக மனந்திரும்பினார். மிக்தோனியா கிறிஸ்தவ நம்பிக்கையை கைவிட அரசர் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அரசர், தோமாவைக் கொலை செய்ய ஆணையிட்டார். அதன்படி, அரசரின் காவலர்கள் தோமாவை ஈட்டியால் குத்தி கொலை செய்தனர். அவரது உடல் புதைக்கப்பட்ட இடத்திலும் அற்புதங்கள் நிகழ்ந்ததைக் கண்ட அரசர் மஸ்டாயும் இறுதியில் கிறிஸ்தவரானார். இது தோமாவின் பணிகள் தருகின்ற இரண்டாம் செய்தி. இதன் அடிப்படையில் புனித தோமா மயிலாப்பூரில் பணியாற்றி, மறைசாட்சியாக இறந்து சாந்தோமில் அடக்கம் செய்யப்பட்டார்.[1]

குறிப்புகள்

தொகு
  1. 1.0 1.1 A Saga of Faith, S.J. Anthonysamy
  2. 2.00 2.01 2.02 2.03 2.04 2.05 2.06 2.07 2.08 2.09 2.10 2.11 2.12 Acts of Thomas, translated by M.R. James
  3. The Legacy of St Thomas, Vijayan P. Bhaskaran
  4. புனித தோமா, வே. ஜான் பிரான்சிஸ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=தோமாவின்_பணிகள்&oldid=4040993" இலிருந்து மீள்விக்கப்பட்டது