நடுக்கடல் முகடு
நடுக்கடல் முகடு (mid-ocean ridge) அல்லது நடுக்கடல் மலைமுகடு அல்லது கடல் மைய முகடு எனப்படுவது கடலுக்கு அடியில் உள்ள மலைத் தொடர் ஆகும். இது தட்டுப் புவிப்பொறைக் கட்டமைப்பினால் உருவாகிய பிளவு எனப்படும் அமைப்பு அதன் அச்சுக்கு இணையாகக் காணப்படுகிறது. கடல் புறவோட்டில் உள்ள வலுக்குறைந்த இப்பகுதியில் மேற்காவுகை நீரோட்டம் காரணமாக கடல் தளம் பாறைக் குழம்பாக மேலெழும்புகிறது. இக் குழம்பு குளிரும்போது புதிய ஓட்டை ஒருவாக்குகின்றது. ஒரு நடுக்கடல் முகடு, இரண்டு புவிப்பொறைத் தட்டுக்களுக்கு இடையிலான எல்லையைக் குறிக்கின்றது. இது விலகல் எல்லை (divergent boundary) என்று அழைக்கப்படுகின்றது.
உலகின் நடுக்கடல் முகடுகள் ஒன்றுடன் ஒன்று தொடுக்கப்பட்டு, ஒவ்வொரு கடலினதும் பகுதியாக அமையும் ஒரு பெரிய நடுக்கடல் முகட்டுத் தொகுதியை உருவாக்குகின்றன. இது உலகின் மிக நீளமான மலைத்தொடர் ஆகும். இத்தொகுதியில் இடையீடு இன்றி அமைந்திருக்கும் மிக நீளமான மலைத்தொடரின் அளவு 65,000 கிலோமீட்டர் ஆகும். இத் தொகுதியின் மொத்த நீளம் 80,000 கிலோமீட்டர் ஆகும்.