நல்லெழுநியார்
நல்லெழுநியார் சங்ககாலப் புலவர் களில் ஒருவர். பரிபானல் 13 எண்ணுள்ள ஒரே ஒரு பாடல் இவர் பாடியதாகச் சங்கநூல் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.
இதில் இவர் திருமாலை வாழ்த்திப் பாடியுள்ளார்.
எழு என்னும் சொல் நெஞ்செலும்பைக் குறிக்கும். எழுநியார் என்னும் சொல் கட்டழகான மார்புடையவர் என்னும் பொருளைத் தரும்.
இப்பாடல் நோதிறம் என்னும் பண்ணால் இந்தப் புலவரால் பண்ணமைத்துப் பாடப்பட்டது.
பரிபாடல் 13 தரும் செய்தி
தொகுகருமேகம் சந்திரனையும் சூரியனையும் அணிந்திருப்பது போலத் திருமால் சங்கு சக்கரம் அணிந்துள்ளார்.
ஆகாயம் ஓசையால் அறியப்படும். காற்று ஓசையாலும் தொடுதலாலும் அறியப்படும். தீயானது ஓசை, தொடுதல், ஒளி ஆகிய மூன்றாலும் அறியப்படும். நீர் இவை மூன்றுடன் சுவையையும் சேர்த்து நான்கினாலும் உணரப்படும். நிலம் இவற்றுடன் மணத்தாலும் உணரப்படும். இப்படி ஐம்பூதமாகவும், ஐம்புலனாகவும் திருமால் விளங்குகிறார்.
மூவேழ் உலகத்து உயிரினங்களும் அவனுக்குள் அடக்கம். பாற்கடலில் ஆயிரம் தலை நாகத்தில் பள்ளிகொண்டிருப்பவன். ஒழுங்கு தவறியவரின் மார்பை உழும் கலப்பையை உடையவன். பன்றியாகி உலகைத் தாங்கும் கொம்பையுடையவன். இப்படி மூன்று திருவுருவங்களாகப் பிரிந்திருப்பவன்.
அவன் நிறம் மேகம், காயாம்பூ, கடல், இருள், நீலமணி ஆகிய ஐந்தையும் போன்றது.
காலமும், காலத்தின் நிழலும் அவன்.
முன் பிறவியில் திருமாலை வாழத்தினோம். இப்பிறவியில் வாழ்த்துகிறோம். வரும் பிறவியிலும் வாழ்த்த அருள்புரிய வேண்டும் என்று வேண்டுகிறார்.