நல்ல உரைநடை எழுத வேண்டுமா? (நூல்)


நல்ல உரைநடை எழுத வேண்டுமா? என்பது பேராசிரியர் மா. நன்னன் எழுதிய நூல் ஆகும். இது இரண்டு தொகுதிகளாக வெளிவந்துள்ளது. 1900 பக்கங்கள் கொண்ட இந்நூல் நான்காம் வியல் பதிப்பைக் கண்டுள்ளது.

நல்ல உரைநடை எழுத வேண்டுமா?
நூலாசிரியர்மா. நன்னன்
நாடுஇந்தியா
மொழிதமிழ் மொழி
வெளியீட்டாளர்ஏகம் பதிப்பகம்

நோக்கம்

தொகு

தமிழைத் தமிழாக்க வேண்டும் என்பது இந்நூலாசிரியரின் ஆவல். இற்றைக் காலத்தில் தமிழ் உரைநடை தள்ளாடிச் செல்வதாலும், தமிழ் மரபிலிருந்து விலகிப் போவதாலும், அப் போக்குகளைத் தடுத்து நல்ல தடத்தில் கொண்டு செலுத்துவதே இந்நூலின் நோக்கம் என்று பேராசிரியர் நன்னன் தம் முகவுரையில் சொல்கிறார். தமிழ் மொழியின் ஒட்பமும் நுட்பமும் சிதைக்கப் படுகின்றன என்றும் ஆங்கில மொழியின் கலப்பும் செல்வாக்கும் தமிழ் உரைநடையில் ஊடுருவி தமிழ் மரபின் கட்டுக்கோப்பைக் குலைத்து வருகின்றன என்றும் இவ்விழி நிலையைச் சரிசெய்யும் நோக்கில் இந்நூல் ஆக்கப் பெற்றுள்ளது என்றும் கூறுகிறார். தக்க இடத்தில தக்க சொல்லைக் கையாளவேண்டும் என்று வலியுறுத்துகிறார்.

நூல் அடக்கம்

தொகு

நல்ல உரைநடை எழுத வேண்டுமா? என்னும் இந்த நூலில் 6652 துளக்கங்கள் துலக்கப்படுகின்றன. அவை கிளவியாக்கம் தொடராக்கம் என இரு வகைகளாக வகுக்கப்பட்டுள்ளன. கிளவியாக்கம் தனிமொழி, தொடர்மொழி, சரியன்று;சரி என மூன்று வகைப்படும். கிளவியாக்கம் என்னும் பகுதியில் மட்டும் 2408 துளக்கங்கள் துலக்கப்படுகின்றன. துளக்கம் என்பது ஐயம், தடுமாற்றம், திரிபுகள் எனப் பொருள்படும். துலக்கம் என்பது விளக்கம் ஆகும். தொடராக்கத்தில் 4244 துளக்கங்கள் விளக்கப் பட்டுள்ளன.

நூலிலிருந்து சில கருத்துகள்

தொகு
  • முகவுரை முன்னுரை ஆகிய இரண்டும் ஒரே பொருளன என்று பரவலாகக் கருதிக் கொண்டிருக்கும் இக்காலத்தில் இவ்விரண்டும் பொருளில் வேறுபடுகின்றன என்பது இந்நூலில் விளக்கப் படுகின்றன. முகவுரை என்பது நூலின் முகத்தே உரைக்கப் படுவது. முன்னுரை என்பது நூலின் முன்னே சொல்லப்படுவது.
  • முதலிய, ஆகிய, என்பன, போன்றன உள்ளிட்ட எனும் இணைப்புச் சொற்கள் சிறப்புத் தகுதி அறிந்து ஆளப்படவேண்டும்.
  • ஓய்வு நேரம் என்பது வேலை செய்து களைத்துப் போய் இளைப்பாறும் நேரம்: ஒழிவு நேரம் என்பது எந்த வேலையும் இல்லாமல் வாளாவிருக்கும் நேரம்.
  • ஐநூறு என்பது தவறு; ஐந்நூறு என்பதே சரி.
  • ஒடித்தல், முறித்தல், பிளத்தல் ஆகிய சொற்களை அவற்றின் பொருள் அறிந்து தக்கவாறு பயன்படுத்தல் வேண்டும.
  • யானைக் குட்டி என்பதற்கும் குட்டி யானை என்பதற்கும் பொருள் வேறுபாடு உள்ளது.
  • தரமில் சிறந்தது நிசாம் பாக்கு என்பது தவறு; தரத்தில் சிறந்தது என்பதே சரி. தரமில் என்பது தரமற்றது ஆகும்
  • வரன் முறை என்பது வருகின்ற முறை; வரைமுறை என்பது எல்லை வகுக்கப்பட்ட முறை.
  • தலைமை அமைச்சர் மோதி ஒரு நாள் பயணமாகச் சென்னைக்கு வந்தார் என்று எழுதுவதும், பேச்சு வார்த்தை நடத்தினர் என்பதும், சுத்திகரிப்புச் செய்யப்பட்டது என்று கூறுவதும், ஓய்வு எடுத்துக் கொள்ளுதல், மருந்து எடுத்துக் கொள்ளுதல், உணவு எடுத்துக் கொள்ளுதல் என்று எழுதுவதும் ஆங்கிலச் செல்வாக்கினால் ஏற்பட்ட திரிபுகள் ஆகும்.
  • தொகுத்தல், பகுத்தல், வகுத்தல் ஆகிய சொற்களின் நுண்ணிய பொருள் வேறுபாடுகளை அறிந்துகொள்ளல் நல்லது.
  • கழிவிடம் என்பது கழிவுப் பொருள்கள் கிடக்கும் இடம்; கழிப்பிடம் அல்லது கழிப்பறை என்பது மலம், சிறுநீர் கழிக்குமிடம்
  • மாவடு என்றும், பலா மூசு என்றும், குரும்பை என்றும் சரியாக வழங்க வேண்டும்.

சிறப்புக் குறிப்புகள்

தொகு

நல்ல உரைநடை எழுத வேண்டுமா? என்னும் இந்த நூலில் அட்டவணை ஒன்று காட்டப் பட்டுள்ளது. இவ்வட்டவணையில் ஒவ்வொரு பகுப்பின் பக்கங்களின் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

இப்பதிப்பின் கூடுதல் சிறப்பாக அமைந்திருப்பது 'இது இது இங்கே இங்கே உள்ளது' என்னும் பகுதியாகும். இந்த நூலைப் படிப்போருக்கு அகர முதலி போல பயன்படவேண்டும் என்னும் நோக்கில் இப்பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.

சான்றுகள்

தொகு