நான்காம் பத்து (பதிற்றுப்பத்து)

சங்க நூலான பதிற்றுப்பத்தின் நான்காம் பத்து தொகுப்பில் பத்து பாடல்கள் உள்ளன. அவை காப்பியாற்றுக் காப்பியனார் என்னும் புலவர் களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் என்னும் சேர அரசனைப் பாடியவை.[1] அவை அனைத்தும் அந்தாதி முறையில் தொடுக்கப்பட்டுள்ளன. முந்தைய பாடலின் இறுதியை அடுத்த பாடலின் முதலாகத் தொடுப்பது அந்தாதி. அந்தாதி நூல்களில் நூல் முடியும் தொடரோடு நால் தொடங்கும் தொடருங்கூடத் தொடுக்கப்பட்டிருக்கும். இந்தப் பத்தில் அந்தத் தொடுப்பு காணப்படவிலை. எனவே புலவர் பாடிய பல பாடல்களைக் கொண்ட நூலிலிருந்து 10 பாடல்கள் மட்டும் எடுத்து இணைக்கப்பட்டிருக்கவேண்டும் என்று தோன்றுகிறது.

பாடல் 31 - கமழ் குரல் துழாஅய்

தொகு

மக்கள் துளசிமாலை அணிந்த திருமாலை வழிபட்டனர். கையைத் தலையிலே சுமந்தும், மணி அடித்தும் வழிபட்டுவிட்டு நெஞ்சம் நிறைந்த மகிழ்வோடு உறங்கச் சென்றனர். அப்போது கவ்வும் இருளைப் போக்க நிலா வந்தது. அதுபோலவே ஆட்டம் கண்டுகொண்டிருந்த சேரர் குடியை இந்த நார்முடிச் சேரல் ஒளிகொள்ளச் செய்தான்.
தூங்கெயில் கோட்டைக் கதவம் ஒன்றைக் 'கடவுள் அஞ்சி' எனபவன் வானத்தில் இழைத்திருந்தான். அதனைத் தாழிட்ட எழுமரம் போன்ற தோளினை உடையவன் இந்த நார்முடிச் சேரல்.
மண்ணுலகத்தில் மாபெருஞ் செல்வம் படைத்தவன் வண்டன். (வானுலகத்துக் குபேரனைப் போல) இந்த நார்முடிச் சேரலும் வண்டன் போலப் பெருஞ்செல்வம் படைத்தவன்.
நார்முடிச் சேரலின் அரண்மனைச் செல்வி வானத்துச் செம்மீன் (Polaris) போன்ற கற்புடையவள்.
முரசு முழக்கத்துடன் மார்பில் வேல்தழுவச் செய்யும் இவனது மறப்படை பகைவர்க்குச் சூர் (எமன்) போன்றது. நகைவர்க்கு (புன்னகை பூக்கும் தோழர்களுக்குப்) பாதுகாவல் தரும் கோட்டை போன்றது.
நார்முடிச்சேரல் இத்தகைய மாட்சிமைகளைப் பெற்றிருந்தான்.

பாடல் 32

தொகு

கழை அமல் கழனி (கரும்பு நட்ட வயல்) (அமல் = நடு, அமல் < அமுல், அமுலாக்கு = நிலைநாட்டு | தமிழ்ச்சொல்)

புலவர் கூற்று | கழங்கு பரப்பிச் சொன்ன குறியைப் பொய்யாக்கி வென்றவனே! சினம் கொள்ளாது பகைவரை வென்றது எனக்கு வியப்பாக உள்ளது. போரில் 'நெடுமிடல்' என்பவன் சாய்ந்தான். 'கொடுமிடல்' என்பவன் துண்டாடப்பட்டான். நெல் விளையும் கழனி நாட்டை நார்முடிச் சேரல் தன்னகப்படுத்திக்கொண்டான். (திருநெல்வேலி ? ) முன்பு ஆட்டம் கண்டிருந்த தம் குடிமக்களை இந்த வெற்றிகளால் தலைநிமிரச் செய்தான். வென்ற நாட்டுப் பகுதிகளைக் கேட்டவர்களுக் கெல்லாம் வழங்கினான். எனினும் அவை குறையவில்லை. (காரணம் அவன் மேலும் மேலும் வென்றுகொண்டே யிருந்தான்.) இவன் தன் ஆட்சியில் சால்பையும், செம்மையையும் கடைப்பிடித்தது எல்லாத் திசைகளிலும் பரவி வியக்க வைத்தது.

பாடல் 33

தொகு

வரம்பு இல் வெள்ளம் (தொல்காப்பியம் - ஐ, அம், பல் - அல்பெயர் எண் - பா 393) படைப்பொருக்கம்

கொடித்தேர் அண்ணலே! (ஆட்சிக்கொடி பறக்கும் தேர்வண்டி) பகைவரின் காவல் மரங்களில் உன் யானைகளைக் கட்டினாய். உன் படைவெள்ளம் நிலமின்றி நெரிக்கிறது. உன் படைக்கு வானமே மதில். வேல்களே மிளை (காவற்காடு). வில்லும் கவசங்களும் அகழிகள். இடியே முரசம். காற்றே கோட்டை. இதனைக் கண்டு வேந்தர் விலகி ஒதுங்குகின்றனர்.

பாடல் 34

தொகு

ஒண்பொறிக் கழற்கால் (புறமுதுகு காட்டேன் என்று கழறி (சூளுரைத்து) அணிவது கழல்)

(இப் பாடலின் 8ஆம் அடியில் சிதைவு உள்ளது) மைந்த! (வலிமை மிக்கவனே) உன் வீரர்கள் காலாள்படையாகச் செல்லும்போது அவர்களது ஆடை நிலத்தைத் தோயும். அவர்கள் தம் கால்களில் வீரக்கழல் அணிந்திருப்பர். புறமுதுகு காட்டி ஓடாத பூட்கையைக் காட்டும் அடையாளம் அது. நீயும் நின் படையினரும் குதிரை, யானை, தேர் ஆகியவற்றில் சென்றும் அரசர்களை வெல்வீர்கள்.

பாடல் 35

தொகு

மெய் ஆடு பறந்தலை

பெரும! அந்தி வானம் போல உன் போர்க்களம் குருதி பாய்ந்து சிவந்திருந்தது. உன்னால் வெட்டப்பட்ட தலை வீழ்ந்தபின் எஞ்சிய முண்ட உடல் போர்க்களத்தில் ஆடிற்று. அதனைக் கழுகுகள் இரையாக்கிக்கொண்டன. இது போர்க்கள யாணர் (விளைச்சல்)

பாடல் 36

தொகு

வாள் மயங்கு கடுந்தார்

போர்கள் பல செய்பவனே! பனங்காட்டுப் போரில் உன் காலாள் வீரரகள் வாளால் யானையின் கையைத் துமித்தனர். இதனை எருவை, எழால் இனக் கழுகுகள் கிழித்தன. மாவும் மாக்களும் (விலங்கின மக்கள்) உண்டனர். கூளியர் குருதி ஒழுக உண்டு ஆடினர். வாழ்க நின் போர்வளம்.

பாடல் 37

தொகு

வலம்படு வென்றி

வெந்திறல் வேந்தே! ஆன்று அவிந்து அடங்கிய செம்மலே! (அகன்ற அறிவை அவித்து வைத்து அடக்கமுடன் வாழும் பண்பாளன்) ஆட்டம் கண்ட குடியை நிலைநிறுத்தினாய். பகைவர்க்குப் பழங்கண்ணும் (துன்பம்) நகைவர்க்கு நன்பொருளும் நல்கினாய். நன்மை புரிவதில் நீயே பெரியவன்

பாடல் 38

தொகு

பரிசிலர் வெறுக்கை (வெறுக்கை = போதும் போதும் என்று வெறுக்கத்தக்க செல்வம்)

தோட்டிமலையை வென்று தனதாக்கிக்கொண்டான். 'வானவரம்பன்' என்று பாராட்டப்பட்டான். நாட்டைத் திருத்தினான். இனியவை பெற்றால் தனித்து உண்ணாமல் பகுத்துண்ணும் பண்பால் செல்வர்களிடையே மேம்பட்டு விளங்கினான். பரிசில் வேண்டி வருபவர்களுக்கு வாரி வாரி வழங்கினான். தனக்கென வாழாமல் பிறர்க்கென வாழ்ந்தான்.

பாடல் 39

தொகு

ஏவல் வியன்பணை

இவன் அணிந்திருந்த நார்முடி எப்படிப்பட்டது என்று இப்பாடல் விளக்குகிறது. பட்டுத்துணித் தலைப்பாகை. (crown) (இது நார் போல வெண்மையாகத் தோன்றிஅயது) அதில் மணி பதித்த பொன்னணி. (மணி களங்காய் போல் தோன்றியது) பொன்னணியில் முத்துக்களும் பதிக்கப்பட்டிருந்தன. (முத்து நார் முடிச்சு போலத் தோன்றியது) (களாப்பழம் கருநிறம் கொண்டது. களாக்காய் பசுமை பாதி, செம்மை பாதியாக இருக்கும்)
கடுஞ்சின முன்ப! (சினவலிமை மிக்கவனே!) உனக்கு அடங்காத அரசர் தம் கோட்டையைத் தம் இல்லம் என்று எண்ணாதிருக்கும்படி தும்பை சூடி நின் போர்மறவர் முரசு முழக்குவர். இதனால் நீ காலன் போன்றவன்.

பாடல் 40

தொகு

நாடுகாண் அவிர் சுடர்

நார்முடிச் சேரலிடம் பரிசில் பெறும்படி இப்பாடலில் விறலி ஆற்றுப்படுத்தப்படுகிறாள். பெரும! 1 நின் படை ஊர்களை நீர் போல முகந்து எடுத்துக்கொள்ளட்டும். 2 அப் படையினர் விழுப்புண் பட்ட தோளை உடையவர். கரந்தைக்கொடி பூத்திருக்கும் பகைவர் வயலில் இருப்புக் கொண்டுள்ளனர். 3 அவர்களது வெற்றியால் நீ நின் மார்பில் 'எழுமுடி'மாலை அணிந்துள்ளாய்.
4 நன்னன் என்னும் அரசனின் காவல்மரமான வாகைமரத்தை நீ அடியோடு வெட்டிச் சாய்த்தாய்.
5 இந்த வெற்றிக்குப் பின்னர் நார்முடிச்சேரல் நேரிக் காட்டில் தங்கியிருந்ததைச் சுட்டிக் காட்டி, பரிசில் பெற அவனிடம் செல்லும்படி புலவர் விறலியை ஆற்றுப்படுதுகிறார். 6 அங்கே அவன் விறலிக்குப் பொன்னால் செய்த வேங்கைமாலை சூட்டுவான். 7 பாணர்க்குப் பசும்பொன் மாலை சூட்டுவான். 8 அங்கே இளமைநலக் குமரர் மகிழ்ச்சியோடு அவனை வாழ்த்திக் கொண்டிருப்பர். 9 நேரிக்காடு தோட்டிமலைப் பகுதியில் உள்ளது (தொட்டபெட்டா) 10 அங்கே காடுகள். காடுகளில் நீர்ப்பிசிர்களின் பொறி பரந்திருக்கும். அவற்றிற்கு இடையே தீ மூட்டி நார்முடிச் சேரல் இருப்புக் கொண்டிருப்பான். (இந்தக் காட்சிதான் நாடுகாண் அவிர்சுடர்.

பதிகம்

தொகு

1 களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரலின் தந்தை - இமையவரம்பன் நெடுஞ்சேரலாதன். 2 தாய் - வேள் ஆவிக் கோமான் பதுமன் என்பவனின் மகள். (பதுமன் ஆவியர் குடியைச் சேர்ந்தவன். ஆவியர் குடி பழனி எனப்படும் பொதினிமலைப் பகுதியை மையம் கொண்டது. இதனால் முருக தெய்வத்தைக்கூட வேள் என்கிறோம்) 3 நார்முடிச்சேரல் பூழி நாட்டின்மீது படைநடத்தித் தனதாக்கிக்கொண்டான். 4 கடம்பின் பெருவாயில் நகரில் இருந்துகொண்டு ஆண்ட நன்னன் அரசனின் ஆற்றலை அழித்து அவனது காவல்மரமான வாகையை வெட்டி வீழ்த்தினான். 5 ஆட்டம் கண்டிருந்த சேரர்குடியின் ஆட்சியை இந்த வெற்றிகளால் நிலைகொள்ளச் செய்தான். 6 இந்தப் பாடல்களைப் பாடி புலவர்க்கு 40,00,000 (நாற்பது நூறாயிரம்) பொற்காசு கொடுத்தான். 7 அத்துடன் தன் ஆட்சியில் பங்கு கொள்ளும் பேற்றினையும் கொடுத்தான். 8 இவன் 25 ஆண்டு ஆட்சிபுரிந்தான்.


குறிப்புகள்

தொகு
  1. காப்பியாறு - காவிரி ஆற்றில் வந்துசேரும் கபினி ஆறு இந்தக் காப்பியாறு ஆகலாம். காப்பியனார் - பல்காப்பியனார், தொல்காப்பியர் என்னும் புலவர்களைப் போல இவரும் காப்பியன் என்னும் பெயர் பூண்டு விளங்கிக், காப்பியனார் என்று சிறப்பிக்கப்பட்டிருக்கிறார். களங்காய்க்கண்ணி - சேர அரசர்கள் பனந்தோடு (பனைமட்டை) கொண்டு செய்த மாலையைத் தம் குடியின் அடையாள மாலையாக அணிந்துகொள்வது வழக்கம். நார்முடி - பாடல் 39-ல் விளக்கம் உள்ளது. கண்ணி என்னும் சொல் தலையில் அணியும் மாலையைக் குறிக்கும். இவன் தலை நார் போல நரைத்த முடியைக் கொண்டிருந்தது. அதனால் 'நார்முடி' என்னும் அடைமொழிப் பெயர் இவனுக்கு அமைந்தது என்று கொள்ளவும் இடம் உண்டு. எனினும் பாடலில் தெளிவான விளக்கம் இருக்கும்போது வீண் கற்பனை வேண்டாத ஒன்று.

வெளி இணைப்புகள்

தொகு

பதிற்றுப்பத்து என்னும் சங்க இலக்கியத் தொகுதியில் அடங்கியுள்ள பாடல்களைக் கீழ்வரும் மின் இணைப்புகளில் காணலாம்: