நாயன்மார்கட்டுக் கல்வெட்டு

நாயன்மார்கட்டுக் கல்வெட்டு யாழ்ப்பாண இராச்சிய மன்னனாகிய சிங்கையாரியனைப் பற்றிக் குறிப்பிடும் தமிழ்க் கல்வெட்டு ஆகும். யாழ்ப்பாண மன்னா் தொடா்பாக நல்லூரிற் கண்டுபிடிக்கப்பட்ட முதலாவது சாசனம் என்ற வகையில் இதற்கு தனிமுக்கியத்துவம் உண்டு. 1942 ஆம் ஆண்டு நல்லூர் இராசதானியின் கிழக்கு எல்லையாகிய நாயன்மார்கட்டுக் கிராமத்திலுள்ள நாயன்மார்கட்டு அரசடிப்பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னுள்ள திருக்குளம் ஆழமாக்கிய போது கண்டு பிடிக்கப்பட்டு ஆலயத்தில் நீண்டகாலம் சிவஶ்ரீ செ.சதாசிவக்குருக்களின் பாரமரிப்பில் வைக்கப்பட்டிருந்தது. இது பின்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறைச் சிரேஷ்ட விரிவுரையாளர் செ. கிருஷ்ணராசாவினது முயற்சியால் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூதனசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு வைக்கப்பட்டுள்ளது. 2 அடி நீளமும், 1.5 அடி அகலமும் கொண்ட இக்கல்வெட்டில் ஐந்து வரிகள் உள்ளன. இதனை வாசித்தோர் கலி 3925 இல் தீர்த்தங் கொடுக்கச் சிங்கையாரியனால் அமைக்கப்பெற்றது என வாசித்து இதன் காலத்தை கி.மு முதலாம் 9ம் நூற்றாண்டு எனவும் கொண்டுள்ளனர்.

நாயன்மார்கட்டுக் கல்வெட்டு

இக் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள ஆண்டு தமிழ் எண்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கு குறிக்கப்பட்டுள்ள ஆண்டை வாசிக்கும் போது அதன் இரண்டாவது எழுத்து தெளிவில்லாது காணப்படுகின்றது. அதனை வாசிப்போர் கலி 3025 எனவும், கலி 3625 எனவும் கலி 3925 எனவும் கொள்ளுகின்றனர். இக்கலியுக ஆண்டுகளுக்கு சமனான கிருத்துவ ஆண்டுகளை கருதின் கலி 3025 என்பது கி.மு. 77 எனவும், கலி 3625 என்பது கி.பி. 523 எனவும், கலி 3925 என்பது கி.பி. 823 (9ம் நூற்றாண்டு) எனவும் கொள்ளலாம்.

உசாத்துணை நூல்கள் தொகு

  • சிற்றம்பலம், கலாநிதி, சி.க. யாழ்ப்பாண இராச்சியம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வெளியீடு, திருநெல்வேலி, 1992 ப.19
  • புஷ்பரத்தினம், ப., யாழ்ப்பாண இராச்சியம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வெளியீடு, திருநெல்வேலி, 1992 பக் 98 99
  • சதாசிவக்குருக்கள், சிவஶ்ரீ செ. நாயன்மார்கட்டு அரசடிப்பிள்ளையார் ஆலயல இரதோற்சவ மலர், - 1990
  • நடராசன், பி. மயிலங்கூடலூர், "கைலாயமாலைக்குப் புதிய ஔி", கைலாயமாலை, சுழிபுரம் வள்ளியம்மை முத்துவேலு நினைவு வெளியீடு, யாழ்ப்பாணம், 1983 ப.XIII
  • நடராசன், பி. மயிலங்கூடலூர், "ஈழத்துத்தமிழர் தொன்மை வரலாறு", வெளிச்சம், பங்குனி-வைகாசி, 2006
  • கிருஷ்ணராசா, செ. நாயன்மார்கட்டில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டு வீரகேசரி வாரமலர் 30-12-1979

நாயன்மார்கட்டின் வரலாறுத் தொன்மைகள்