நாய்விளா இந்தியா முழுவதும் காணப்படும் மரமாகும். தாவரப் பெயர் ஹெஸ்பெராதூசா கிரேனுலேட்டா (Hesperathusa crenuletta). இணை தாவரப் பெயர் லிமோனியா அசிடிசிமா ( Limonia acidissima). ரூட்டேசி குடும்பத்தைச் சேர்ந்தது. வறட்சியான குன்றுகளிலும் புதர்க் காடுகளிலும் 1 கி.மீ உயரம் வரையில் வளரும். வேர்கள் விரைவாக வளரும்.

நாய்விளா

அமைப்பு தொகு

ஏறத்தாழ 10 மீ உயரம் வளரும். பட்டை நிறமற்ற தக்கை போன்றிருக்கும். அடிமரம் 15-30 செ.மீ விட்டமுடையது. இளம்பச்சை இலைகளைப் பெற்றிருக்கும். வெண்ணிற, மணமிகு, சிறிய மலர்கள் உண்டாகும். புல்லி இதழ்கள் நான்கு மடல்களாக இருக்கும். அல்லி இதழ்கள் திருகு இதழமைவில் பிரிந்திருக்கும். சூழ்ப்பை நீள்சதுரமானது.

பயன் தொகு

மரம் எடையும், உறுதியும் மிக்கது. எலுமிச்சைப் பழம் நிறம் முதல் பழுப்புக் கலந்த மஞ்சள் நிறமாயிருக்கும். வழவழப்பாய் நீண்ட காலத்திற்கு உழைக்கும். பூச்சி பாதிப்பில்லை. வண்டி அச்சு, எண்ணெய்ச் செக்கு, மர உரல், நடைக்குச்சி (Walking stick) செய்யவும் பயன்படுகிறது. பெட்டி, கருவிகளின் கைப்பிடி, மரச்சுத்தி, அளவுகோல் (ஸ்கேல்), உருளை முதலியவற்றைச் செய்யலாம்.

விறகாக எரிக்கலாம். மியான்மர் போன்ற நாடுகளில் இம்மரப்பட்டையைச் சந்தனக் கட்டையுடன் சேர்த்துப் பொடியாக்கி ஒப்பனைப் பொருளாக பயன்படுத்துவர். அரேபிய, இந்தியா நாடுகளில் கனிகளைச் சமைத்து உண்பர். கனி கசப்பு மிகுந்தது.

இலை, கனி, வேர்கள் மருந்துகளாகின்றன. வேர் மஞ்சளாகவும், கசப்பாகவும், மணத்தோடும் இருக்கும். பேதியை உண்டாக்கும். வேர்வையைப் பெருக்கும் தன்மையுண்டு. உலர்ந்த கனிகள் உடலைத் தேற்றும். பசியைத் தூண்டும். தொற்றுநோய்க் காய்ச்சலைக் குணப்படுத்தும். முறிவு மருந்தாகவும் பயன்படும்.

[1]

  1. அறிவியல் களஞ்சியம் தொகுதி 13
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாய்விளா&oldid=3585692" இலிருந்து மீள்விக்கப்பட்டது