நாலூர்
நாலூர் திவாரூர் மாவட்டத்திலுள்ள ஓர் ஊர்.
இவ்வூரில் சங்ககாலத்தில் கோசர் குடிமக்கள் வாழ்ந்துவந்தனர். இவர்கள் நாலூர்க்கோசர் எனப்பட்டனர். இவர்கள் அரசனுக்காக ஆலமரத்தடியில் இருந்துகொண்டு வரி தண்டுவர். [1] சங்ககாலத்தில் இவ்வூரின் பெயர் 'நாலை' என்னும் சுருக்கமான மரூஉ மொழியாலும் வழங்கப்பட்டது. [2] அக்காலத்தில் இவ்வூரின் தலைவன் நாகன். இவன் பெயரை 'நாலைகிழவன் நாகன்' என்று புறநானூற்றுப் பாடல் குறிப்பிடுகிறது. இவன் சிறந்த படைவீரனாகவும், அரசன் பசும்பூண் பாண்டியனுக்குப் படைவீரர்களையும், படைக்கருவிகளையும் வழங்குபவனாக விளங்கினான். அத்துடன் சிறந்த வள்ளலாகவும் விளங்கினான். [3]
இந்த ஊரில் குடிகொண்டுள்ள சிவபெருமான்மீது கி.பி. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞானசம்பந்தர் ஒரு பதிகம் பாடியுள்ளார். [4]
அடிக்குறிப்பு
தொகு- ↑ பறை பட, பணிலம் ஆர்ப்ப, இறை கொள்பு, தொன் மூது ஆலத்துப் பொதியில், தோன்றிய நாலூர்க் கோசர் வாய்மொழி போல வாயாகின்று – விடலை – மடந்தை நட்பு - ஔவையார் குறுந்தொகை 15
- ↑ ஒப்புநோக்குக - உறையூர் = உறந்தை
- ↑
'ஞாலம் மீமிசை வள்ளியோர் மாய்ந்தென,
ஏலாது கவிழ்ந்த என் இரவல் மண்டை
மலர்ப்போர் யார்?' என வினவலின், மலைந்தோர்
விசி பிணி முரசமொடு மண் பல தந்த
திரு வீழ் நுண் பூண் பாண்டியன் மறவன், 5
படை வேண்டுவழி வாள் உதவியும்,
வினை வேண்டுவழி அறிவு உதவியும்,
வேண்டுப வேண்டுப வேந்தன் தேஎத்து
அசை நுகம் படாஅ ஆண்தகை உள்ளத்து,
தோலா நல் இசை, நாலை கிழவன், 10
பருந்து பசி தீர்க்கும் நற் போர்த்
திருந்து வேல் நாகன் கூறினர், பலரே.
திணை வாகை; துறை வல்லாண் முல்லை.
நாலை கிழவன் நாகனை வடநெடுந் தத்தனார் பாடியது. புறநானூறு 179 - ↑ "நாலூர் மயானம், திருமெய்ஞ்ஞானம் என்னும் பெயர்களாலும் இந்த ஊர் வழங்கப்படுகிறது". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2015-01-20.