நிக்காட்டீன்
நிக்கோட்டின் (Nicotine) எனப்படுவது C10H14N2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இதை நிக்காட்டீன் என்றும் அழைக்கிறார்கள். சில தாவர வகைகளில், சிறப்பாகப் புகையிலையிலும், சிறிய அளவில் தக்காளி, உருளைக்கிழங்கு, கத்தரி, பச்சை மிளகு போன்றவற்றிலும் இது காணப்படுகின்றது. இதனை, கோகேயின் என்னும் பொருளுடன் சேர்த்து கொக்கோ தாவரத்தின் இலைகளிலும் காணலாம். புகையிலையின் உலர் நிறையில் 0.6 - 3.0% நிக்காட்டீன் உள்ளது. இது புகையிலைச் செடியின் வேரில் உருவாக்கப்பட்டு இலையில் சேமிக்கப்படுகிறது. நிக்கோட்டின் ஒரு தாவர உண்ணி எதிர்ப்பு வேதிப்பொருள் ஆகும். இதனால் நிக்காட்டினை பூச்சிக்கொல்லிகளில் பயன்படுத்தினார்கள் . இதனையொத்த இமிடாகுளோப்பிரிட்டு சேர்மம் இன்னும் பரவலாகப் பயன்பாட்டில் உள்ளது.
தயாரிப்பு
தொகுமுதலில் பச்சைப் புகையிலையை நசுக்கி நீர் கொண்டு சாறு இறக்குகிறார்கள். கரைசலுடன் சிறிதளவு அமிலம் சேர்த்து பின்னர் ஈதர் கொண்டு அதிலுள்ள ஐதரோகார்பன்கள் நீக்கப்படுகின்றன. எஞ்சியிருக்கும் கரைசலுடன் காரம் சேர்க்கப்படுகிறது. பின்னர் ஈதர் ஆவியாக்கப்பட்டு நிக்கோட்டின் தயாரிக்கப்படுகிறது. 1828 ஆம் ஆண்டில் கிறிசுட்டியன் வில்லெம் போசெல்ட்டு மற்றும் செருமனியைச் சேர்ந்த காரல் லுட்விக் ரீமான் ஆகியோர் முதன் முதலில் புகையிலையில் இருந்து நிக்கோட்டினைப் பிரித்தெடுத்தனர்[1][2][3]. இதன் அனுபவ வாய்ப்பாட்டை மெல்சென்சு விவரித்தார்[4].
வரலாறு
தொகுபுகையிலை தாவரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் இதற்கு நிக்கோட்டின் என்று பெயர் வைக்கப்பட்டது. புகையிலைக்கு நிகோட்டினா டபாக்கம் என்பது பெயராகும். போர்த்துகீசியத்திற்கான பிரெஞ்சு தூதர் யீன் நிக்கோட் டி வில்லிமெயின் நினைவாகவும் இப்பெயர் சூட்டப்பட்டது. ஏனெனில் இவர் 1560 ஆம் ஆண்டில் பாரிசு மன்னருக்குப் பரிசாக புகையிலை மற்றும் விதைகளை அனுப்பிவைத்தார் [5]. இதனுடைய மருத்துவப் பயன்பாடுகளை எடுத்துரைத்தார். சுரம் போன்ற நோயை நீக்குவதற்கு, குறிப்பாக பிளேக் நோயிலிருந்து விடுபடுவதற்கு புகைபிடித்தல் சிறந்த மருந்து என அக்காலத்தில் நம்பப்பட்டது. புகையிலை 1559 ஆம் ஆண்டில் ஐரோப்பாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது, 17 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இது புகைபிடிப்பிற்காகவும் பூச்சிக்கொல்லியாகவும் பயன்படுத்தப்பட்டது. உலக அளவில் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு 2,500 டன் நிகோட்டின் பூச்சிக்கொல்லியாக பயன்படுத்தப்பட்டது. ஆனால் 1980 களில் நிகோட்டின் பூச்சிக்கொல்லி பயன்பாடு 200 டன்னாக குறைந்தது. . மற்ற பூச்சிக்கொல்லிகள் மலிவாக கிடைத்ததும் அவை பாலூட்டிகளுக்கு குறைந்த அளவு தீங்கு விளைவிப்பதன் காரணமாகவும் இக்குறைவு உண்டானது. நிகோட்டினை தூசி வடிவில் கூட பூச்சிக் கொல்லியாகப் பயன்படுத்துவதை அமெரிக்காவின் கரிம வேளாண்மைக்கான அமைப்பு தடை செய்துள்ளது. அமெரிக்காவின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமை 2008 இல் நிக்கோட்டின் பூச்சிக்கொல்லியை இரத்து செய்யக் கோரும் கோரிக்கையைப் பெற்றுள்ளது. இக்கோரிக்கை ஏற்கப்பட்டு சனவர் 2014 முதல் நிக்கோட்டின் பூச்சிக் கொல்லியை பயன்படுத்துவது தடை செய்யப்பட்டது.
வேதியியல்
தொகுநிக்கோட்டின் நீருறிஞ்சும் தன்மை கொண்டது ஆகும். நிறமற்றதாகவும் பச்சை, பழுப்பு வண்ணங்களிலும் எண்ணெய் போன்ற திரவமாகவும் இது காணப்படுகிறது. ஆல்ககால், ஈதர் அல்லது பெட்ரோலியம் போன்ற கரைப்பான்களில் எளிதில் கரையக்கூடியதாக உள்ளது. 60 ° செல்சியசு வெப்பநிலைக்கும் 210 ° செல்சியசுக்கும் இடைப்பட்ட வெப்பநிலையில் நீருடன் கலக்கிறது. நிக்கோட்டினை ஆக்சிசனேற்றம் செய்தால் நிக்கோட்டினிக் அமிலம் கிடைக்கிறது. நிக்கோட்டின் அமிகங்களுடன் சேர்ந்து உப்புகளை உருவாக்குகிறது. இவைதிண்மமாகவும் நீரில் கரையக் கூடியனவாகவும் உள்ளன. 95° செல்சியசு வெப்பநிலையில் இது தீப்பற்றி எரிகிறது. நிக்கோட்டின் எளிதில் ஆவியாகிறது. இதன் ஆவி அழுத்தம் 25 பாகை செல்சியசு வெப்பநிலையில் 5.5 பாசுக்கல் ஆகும்.
விளைவுகள்
தொகுநிக்கோட்டின் உடலில் நுழைந்தவுடன் அது இரத்த ஓட்டத்தில் கலந்து விரைவாக விநியோகிக்கப்படுகிறது. மூச்சுடன் உள்ளிழுக்கப்பட்ட 10-20 வினாடிகளுக்குள் மூளைக்கு சென்று சேர்கிறது. உடலுக்குள் சென்ற நிகோட்டின் அங்கிருந்து நீக்கப்படும் அரை வாழ்வு நேரம் சுமார் இரண்டு மணி நேரம் ஆகும். புகைபிடிப்பவரின் உடலில் உறிஞ்சப்படும் நிகோட்டின் அளவு புகையிலையின் வகைகளை உள்ளடக்கிய பல காரணிகளைச் சார்ந்தது ஆகும். புகை நேரடியாக எடுக்கப்படுகிரதா அல்லது வடிகட்டி எடுக்கப்படுகிறதா என்பதும் கருத்திற்கொள்ளப்படுகிறது. நிக்கோடின் புகைப்பவர்களை எளிமையாக அடிமைப்படுத்திக் கொள்ளும். சராசரியாக ஒரு சிகரெட்டில் 2 மி.கி. நிக்கோடின் உறிஞ்சப்படுகிறது. இது பாலூட்டிகளில் தூண்டலை ஏற்படுத்துகிறது. நிக்கோட்டின் அளவு 50 மி.கி முதல் 100 மி.கி அளவை எட்டும்போது மிகவும் அபாயகரமான தீங்குகளை விளைவிக்கிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Posselt, W.; Reimann, L. (1828). "Chemische Untersuchung des Tabaks und Darstellung eines eigenthümlich wirksamen Prinzips dieser Pflanze" (in German). Magazin für Pharmacie 6 (24): 138–161. https://books.google.com/books?id=cgkCAAAAYAAJ&pg=RA1-PA138.
- ↑ "Nicotine psychopharmacology research contributions to United States and global tobacco regulation: a look back and a look forward". Psychopharmacology 184 (3–4): 286–91. March 2006. doi:10.1007/s00213-006-0308-4. பப்மெட்:16463054.
- ↑ Bugge (October 26, 1940). "Die Entdeckung des reinen Nikotins im Jahre 1828 an der Universität Heidelberg durch Reimann und Posselt, mit einer Beschreibung ihrer Vorläufer und mit Abb. Von P. Koenig 90 S., 29 Abb., 8. Verl. A. Geist, Bremen 1940, Pr. kart. RM. 5,——.". Angewandte Chemie 53 (43‐44): 515. doi:10.1002/ange.19400534320.
- ↑ Melsens, Louis-Henri-Frédéric (1843) "Note sur la nicotine," Annales de chimie et de physique, third series, vol. 9, pages 465-479; see especially page 470. [Note: The empirical formula that Melsens provides is incorrect because at that time, chemists used the wrong atomic mass for carbon (6 instead of 12).]
- ↑ Rang H. P et al., Rang and Dale's Pharmacology 6th Edition, 2007, Elsevier, page 598