நிக்கோலாய் ஒஸ்திரோவ்ஸ்க்கி

நிக்கோலாய் ஒசுதிரோவ்சுகி (Nikolai Alexeevich Ostrovsky, உருசியம்: Никола́й Алексе́евич Остро́вский, 29 செப்டம்பர் 1904 – 22 திசம்பர் 1936) சோவியத்து எழுத்தாளர். உருசிய உள்நாட்டுப் போரைக் களமாகக் கொண்டு தான் எழுதிய எப்படி எஃகு பதப்பட்டது என்னும் பொருள்படும் தலைப்பில் Как закалялась сталь (ஒலிப்பு: காக்(கு) (இ)சக்கல்யலசு (இ)சிட்டால்) என்ற புதினத்தால் நன்கறியப்பட்டவர்.

நிக்கோலாய் ஒசுதிரோவ்சுகி
Nikolai Alexeevich Ostrovsky
நிக்கோலாய் ஒசுதிரோவ்சுகி
நிக்கோலாய் ஒசுதிரோவ்சுகி
பிறப்புநிக்கொலாய் அலெக்சேவிச் ஒசுதிரோவ்சுகி
(1904-09-29)29 செப்டம்பர் 1904
விலியா, உக்ரைன்
இறப்பு22 திசம்பர் 1936(1936-12-22) (அகவை 32)
மாஸ்கோ, சோவியத் ஒன்றியம்
தொழில்எழுத்தாளர், படைவீரர், கம்யூனிசக் கட்சிப் பணியாளர்
தேசியம்உருசியா
குறிப்பிடத்தக்க படைப்புகள்எப்படி எஃகு பதப்பட்டது
Как закалялась сталь
(ஒலிப்பு: காக்(கு) (இ)சக்கல்யலசு (இ)சிட்டால்)

வரலாறு

தொகு

இவர் 1904-ம் ஆண்டு செப்டெம்பர் 29 ஆம் தேதி, உக்கிரேனில் உள்ள விலியா என்னும் ஊரில் ஒரு கூலித்தொழிலாளரான தந்தைக்கும், சமையற்காரரான தாய்க்கும் பிறந்தார்.[1] இவர் 32 வயது வரை மட்டுமே வாழ்ந்தவர். தனது 13 ஆவது வயதிலேயே போல்செவிக் கட்சியில் சேர்ந்து இயங்கினார்.[2] போர் முனையில் படுகாயமுற்றதால் தன் வாழ்வின் கடைசி 12 ஆண்டுகளை பார்வையில்லாமல் கழித்துள்ளார். 1931-ல் வீரம் விளைந்தது (எப்படி எஃகு பதப்பட்டது) என்கிற நூலை எழுதி முடித்தார். இந்நாவலின் முதல் வாசகருமாகவும் இருந்து, அவருக்கு கடைசிவரை ஆதரவும் தந்தவர் புகழ்பெற்ற எழுத்தாளர் மாக்சிம் கார்கி ஆவார். இதன் பின்னர் ஆசிரியர் உக்குரேன்-சோவியத்து ஒன்றியத்துகிடையே நடந்த போரின் அடிப்படையில் புயலின் மூலம் தோன்றியவர்கள் (Рождённые бурей (ஒலிப்பு: (உ)ரோழ்தொன்யி பு'ரே (Rozhdonnyye burey) ) எனும் நூலை எழுதத் தொடங்கினார். ஆனால் அந்நூலை எழுதி முடிக்கும் முன்பே இறந்துவிட்டார்.

”இந்நாவலை எழுதி முடித்ததும், என்னைச் சுற்றிவளைத்திருந்த இரும்பு வளையமொன்றிலிருந்து விடுபட்ட உணர்வு பெற்றேன். அசைய முடியாமை என்ற துன்பத்தை வென்றேன். மறுபடியும் போர்வீரர்களில் ஒருவனாக மாறிவிட்டேன்.” என எப்படி எஃகு பதப்பட்டது நூலை முடித்தவுடன் நிக்கொலாய் ஒஸ்திரோவ்ஸ்க்கி கூறியுள்ளார்.

உருசியாவின் மாசுகோ நகரின், முக்கிய வீதிகளில் ஒன்றான கோர்க்கி வீதியில் அவர் வாழ்ந்த 14-ம் எண் வீடு அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது. அதில் எப்படி எஃகு பதப்பட்டது நூலின் பன்னாட்டுப் பதிப்புகளும் சேகரித்து காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

குறிப்புகள்

தொகு
  1. Prominent Russians: Nikolay Ostrovsky, Russiapedia
  2. Dan Richardson (2001). The rough guide to Moscow. Rough Guides. p. 135. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-85828-700-6.