நிறைவுப் போட்டி (பொருளியல்)
பொருளியலில் நிறைவுப் போட்டி (Perfect Competition) நிலவும் பொழுது அங்காடியும், நிறுவனங்களும் குறுகியகாலத்திலும் நீண்ட காலத்திலும் ஒருசில நிபந்தனைகளுக்குட்பட்டு சமநிலை (Equilibrium) அடைகின்றன
ஒரு பொருளின் விலை அதன் தேவையையும் (Demand), அளிப்பையும் (Supply) சார்ந்துள்ளது. இவைகளே விலையை நிர்ணயிக்கின்றன. பொருள்கள் உற்பத்தியாளர்களால் உற்பத்தி செய்யப்பட்டு அங்காடிக்கு (market) வருபவைகளின் தொகுதி “அளிப்பு” ஆகும். ஒரே நிறுவனம் அங்காடி முழுவதற்குமாக உற்பத்தி செய்வது முற்றுரிமை என்றும் பல நிறுவனங்கள் உற்பத்தி செய்வது நிறைவுப் போட்டி என்றும் அழைக்கப்படும். செவ்வியல் பொருளாதார அறிஞர்கள் (Classical Economists) அங்காடியில் நிறைவுப் போட்டி நிலவுவாதகக் கருதி வந்தனர். ஆதலால் விலை நிர்ணயிக்கும் காரணிகளும் அதையொட்டியே அமையும் என்று கூறினர். நடைமுறையில் இவ்வாறு முற்றுரிமையோ அல்லது நிறைவுப் பேட்டியோ வாலாயமாகக் காண இயலாது. இதையே ஜோன் ராபின்சன் என்னும் அறிஞர் விளக்குகின்றார். அங்காடியில் அளிப்பையும் தேவையையும் பொறுத்து விலை மாறிக் கொண்டே இருக்கும்.
திருமதி ஜோன் ராபின்சன் அவர்களும், சோம்பாலின் மற்று டிரிபின் ஆகிய அறிஞர்கள் இது பற்றி விளக்குகின்றனர். அங்காடியில் ஒரு குறிப்பிட்ட விலையில் பொருளை வாங்குவதற்கும் விற்பதற்கும் முழுமையான போட்டி நிலவுவது நிறைவுப் போட்டியாகும்.
நிறைவுப் போட்டியின் இயல்புகள்
தொகு- எண்ணற்ற வாங்குவோர் விற்போர்: அங்காடியில் நிறைவு போட்டி நிலவும் போது எண்ணற்ற வாங்குவோரும் விற்போரும் இருப்பார்கள். வாங்குவர்களின் பங்கும் விற்பவர்களின் பங்கும் தனித்தனியாக சிறிய அளவில் உள்ளதால் தனிப்பட்ட யாரும் விலையை மாற்றமுடியாது. விற்பதின் அளவும் வாங்குவதின் அளவும் மொத்தமாக விலையைத் தீர்மானிக்கின்றன. ஆதலால் வாங்குபவரும் அங்காடியில் நிலவும் விலையை ஏற்றுக்கொண்டு செயலில் ஈடுபட வேண்டும்.[1].
- ஒரே சீரான பொருள்: விற்பனையாளர்கள் அங்காடிக்கு கொண்டுவரும் பொருள்கள் ஒரே மாதிரியானவையாக இருக்க வேண்டும். நுகர்வோர் இவைகளில் வேறுபாடு காணமால் ஒன்றிற்கு மற்றொன்று இணையில்லா மாற்று என்று உணரவேண்டும். பொருள்கள் ஒரே மாதிரியாக இருப்பதால் எந்த விற்பனையாளாரும் தனியாக விலை நிர்ணயத்தில் தாக்கத்தை ஏற்படுத்த முடியாது. விற்பனையாளர்கள் யாரும் தம் பொருளுக்கு விலையை அதிகரிக்க முடியாது.
- நிறுவனங்களுக்கும் உற்பத்திக்காரணிகளுக்கும் தடையற்ற நிலை: புதிய நிறுவனங்கள் எப்பொழுது வேண்டுமானலும் துவங்கப்பட்டு உற்பத்தி செய்து பொருள்களை அங்காடிக்கு கொண்டு வரவும் எற்கனவே உள்ள நிறுவனங்கள் எப்பொழுது வேண்டுமனாலும் உற்பத்தியை நிறுத்தி நிறுவனத்தை மூடிவிடவும் சுதந்திரம் இருக்கும். இது போலவே உற்பத்திக் காரணிகளும் தேவையை அனுசரித்து இடம் பெயரலாம், தடைஇருக்காது.
- விழிப்புணர்வு: வாங்குபவர்களும் விற்பவர்களும் பொருள்கள் குறித்தும், அவைகளின் விலை, தரம், அளவு குறித்தும் முழுமையான விபரங்களை அறிந்து வைத்திருப்பார்கள். ஆதலால் விலையை யாரும் தனியாக ஏற்றவோ இறக்கவோ முடியாது.
- விளம்பரம்: போக்குவரத்துச் செலவின்மை. நிறைவுப் போட்டியில் விளம்பர செலவோ, போக்குவரத்துச் செலவோ உற்பத்தியாளர்களுக்கு இருக்காது. இதனடிப்படையில் விற்கப்படும் விலையில் மாறுபாடு இருக்கக் கூடாது என்பது தான் கருத்து
- தயக்கமின்மை: வாங்குவோரும் விற்போரும் அங்காடியில் எங்கு வேண்டுமானால் சென்று விற்கவோ அல்லது வாங்கவோ தயங்கமாட்டார்கள். விலை குறைவாக கிடைக்கிறது என்றால் வாங்குவோர் அங்குச் சென்று பொருட்களை வாங்கவும், விலை அதிகம் என்றால் உற்பத்தியாளர்கள் அங்குச் சென்று விற்கவும் தயங்கமாட்டார்கள்.
- சமத்துவம்: விற்பனையாளார்கள் வாங்குபவர்கள் அனைவரையும், அதேபோல வாங்குபவர்கள் விற்பனையாளார்கள் அனைவரையும் ஒரே மாதிரியகத் தான் அணுகுவர். இவர்கள் ஒருவருக்கொருவர் பாகுபாடு காட்ட மாட்டர்கள். விருப்பு வெறுப்பின்றிச் செயல்படுவர்.
தூயப்போட்டியும் நிறைவுப் போட்டியும்
தொகுஅங்காடிகள், தூயபோட்டி (Pure competition), நிறைவுப் போட்டி என்று இரு வகையாக பிரித்துப் பேசப்படுகிறது. நிறைவுப் போட்டிக்கு பல இயல்புகள் உள்ளன. அவற்றில் எண்ணற்ற வாங்குபவர்களும், விற்பனையாளர்களும் இருத்தல், பொருட்கள் ஒரே சீரனவையாகவும் தன்மையானவையாகவும் இருத்தல், மற்றும் நிறுவனங்கள் தடையின்றி தொழிலைத் துவங்கவும் மூடவும் முடிதல் ஆகிய மூன்று நிபந்தனைகள் மட்டும் நிறைவேறியிருந்தால் அதனைத் தூயபோட்டி எனவும் மற்றவைகளை நிறைவுப்போட்டி எனவும் ஒருசில அறிஞர்கள் வேறுபடுத்துகின்றனர்.
நிறைவுப் போட்டியில் நிறுவனத்தின் தேவைக் கோடு
தொகுநிறைவுப் போட்டியின் முக்கியமான நிபந்தனை அங்காடி முழுவதும் ஒரே விலை நிலவ வேண்டும் என்பாதகும். விலையை எந்த ஒரு தனி நிறுவனமும் மாற்ற இயலாது. அவ்வாறு ஒரு நிறுவனம் விலையை ஏற்றி வைக்குமானால், பொருள்கள் ஒரே தரமானவையானதாலும் வாங்குபவர்கள் அனைவரும் விபரம் அறிந்தவர்களாகவும் உள்ளதால், விலை உயர்த்தப்பட்ட பொருளை யாரும் வாங்கமாட்டார்கள். [2]ஆதலால் தேவை முற்றிலும் நெகிழ்வுடையதாக இருக்கும். நிறுவனத்தின் தேவைக்கோடு படம் ஆ வில் காண்பது போல் கிடைமட்டமாக இருக்கும்
அங்காடியின் தேவை எப்படி தனி நிறுவனத்தின் தேவையை நிர்ணயம் செய்கின்றது என்பதை படம் அ மற்றும் படம் ஆ காட்டுகிறது
படம் அ வில் குறிப்பிட்டடுள்ளது போல் அங்காடியில் உள்ள அனைத்து வாங்குவோரும் நிறுவனங்களும் இவர்களின் தேவையும் அளிப்பும் எங்கு சந்திக்கின்றதோ அங்கு சமநிலை அடைவர். பொருளின் விலை 50 உரூபாயில் சமனிலை அடைகின்றது. அங்காடி நிர்ணயித்த விலை, நிறுவனத்தின் தேவைக்கோடாக எதிரொளிக்கும். இது படம் ஆ வில் காண்பிக்கப்பட்டுள்ளது.. இந்நிலையில் ஒரு நிறுவனம் எதிர்கொள்ளும் தேவைக்கோடு (Demand curve) கிடைமட்டத்தில் ‘d’ இருக்கும். நிறைவுப்போட்டியில் ஒரு நிறுவனத்தின் இறுதிநிலை வருவாயும் விலையும் சமமாக இருக்கும் (P = MR). அட்டவணைக்காணவும்
விலை உரூபாயில் | அளவு | மொத்த வருவாய் | இறுதி நிலை வருவாய் |
---|---|---|---|
50 | 1 | 50 | 50 |
50 | 2 | 100 | 50 |
50 | 3 | 150 | 50 |
50 | 4 | 200 | 50 |
எண்ணிக்கை அதிகமாகும் போது கூட இறுதிநிலை வருவாயும் விலையும் சமமாக இருப்பதைக்காணலாம் அதனால் அதன் தேவைக்கோடும் இறுதிநிலைகோடும் படுகிடையாக சமமாக இருக்கும்.
குறுகிய காலத்தில் நிறுவனத்தின் சமநிலை
தொகுகுறுகிய காலத்தில் நிறைவுப்போட்டியில் ஒரு நிறுவனம் எவ்வளவு உற்பத்தி செய்யும் என்பதைக் காணலாம். வரைபடத்தில் நிறைவுப்போட்டியில் ஒரு நிறுவனத்தின் தேவைக்கோடும் இறுதிநிலை வருவாய்க்கோடும் (d, MR) சமநிலை விலையில் ரூ.50 ல் காண்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிறுவனத்தின் இறுதிநிலை உற்பத்திச் செலவுக்கோடும் (MC) வரையப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் தமது இறுதி நிலைவருவாய் இறுதிநிலை உற்பத்திச் செலவைவிட அதிகமாக இருக்கும் வரை உற்பத்தி செய்யும். இறுதிநிலை வருவாய் இறுதிநிலை உற்பத்திச் செலவை விடகுறையும் பொழுது அதற்குமேல் உற்பத்தி செய்யாது. அதிக லாபம் ஈட்டும் விதியின் படி, நிறுவனம் தமது இறுதிநிலை வருவாயும் இறுதிநிலை உற்பத்திச் செலவும் சமமாகும் வரை உற்பத்தியை அதிகரிக்கும். அதற்கு மேல் உற்பத்தியை அதிகரிக்காது. அதிகலாபம் ஈட்டும் விதியின் படி நிறுவனம் MR = MC என்னும் அளவிற்கு உற்பத்தி செய்யும்.[3]
குறுகிய காலத்தில் நிறுவனத்தின் அளிப்பு வளைகோடு
தொகுகுறுகிய காலத்தில் நிறுவனம் தமது சராசரி மாறுபடும் உற்பத்திச் செலவை (Average variable cost) விட விலை அதிகமாக இருந்தால் மட்டுமே உற்பத்தியை அதிகரிக்கும். சராசரி மாறுபடும் உற்பத்திச் செலவை விட விலை குறைவாக இருந்தால் அது உற்பத்தியை நிறுத்தும். அதனால் நிறுவனத்தின் குறுகியகால அளிப்பு (Short term supply curve) வளைகோடு (Firm's supply curve in the short run) சராசரி மாறுபடும் உற்பத்திச் செலவிற்கு (Average Variable Cost) அதிகமாக உள்ள இறுதிநிலை உற்பத்திச் செலவு (Marginal cost) வளைகோட்டுப் பகுதியே ஆகும் . வரைபடத்தில் இது காட்டப்பட்டுள்ளது
அங்காடியின் அளிப்பு வளைகோடு
தொகுஒரு நிறுவனத்தின் அளிப்பு வளைகோடு (Industry supply curve) அதன் சராசரி மாறுபடும் உற்பத்தியின் வளைகோட்டை விட அதிகமாக உள்ள இறுதிநிலை செலவு வரைகோடு என்பதனால், அனைத்து நிறுவனங்களின் அளிப்பு வளைவுகோடுகளின் கூட்டுத் தொகையை தொழிலின் மொத்த அளவின் வளைவுகோடு ஆகும். ஒரு அங்காடியில் ABC என மூன்று நிறுவனங்கள் இருப்பதாக வைத்துக்கொள்வோம். ஒரு குறிப்பிட்ட விலையில் A நிறுவனம் 100 அலகுகளையும், B நிறுவனம் 80 அலகுகளையும் C நிறுவனம் 180 அலகுகளையும் உற்பத்தி செய்து வழங்குவதாக வைத்துக்கொள்ளலாம்.அங்காடி முழுவதுக்குமான அளிப்பு குறிப்பிட்ட விலியில் 360 அலகுகள் (100+80+180) ஆகும்.
நீண்டகாலத்தில் நிறைவுப்
தொகுநீண்ட காலத்தில் அங்காடியில் சமநிலை அமைய அங்காடியின் தேவையும் அளிப்பும் சமமாக இருக்கும். நிறுவனத்தைப் பொறுத்த வரை அதன் தேவை, விலை, இறுதி நிலை வருவாய், இவைகளோடு இறுதி நிலைச் செலவு, குறுகிய கால சராசரி மொத்த செலவு, நீண்ட கால சராசரி மொத்த செலவு அனைத்தும் சமமாக இருக்கும். வரைபடத்தில் இது தெளிவாகக் காண்பிக்கப்பட்டுள்ளது. ஒரு தொழிலில் அல்லது அங்காடியில் நிறுவனங்கள் எண்ணிக்கை குறுகியகாலத்திலும் நீண்ட காலத்திலும் வேறுபடும். அங்காடியில் நிறுவனங்கள் குறுகிய காலத்தில் அதிக லாபம் ஈட்டினால் புது நிறுவனங்கள் தொழிலுக்கு வந்து நீண்டகாலத்தில் உற்பத்தியை அதிகரிக்கும். அது போலவே குறுகியகாலத்தில் நிறுவனம் நட்டம் அடைந்தால், சில நிறுவனங்கள் மூடப்படும். அதனால் உற்பத்தி சுருங்கும் நீண்டகாலத்தில் அங்காடி சமநிலையை நோக்கி நகர்ந்து கொண்டே இருக்கும்.
நீண்ட காலத்தில் அங்காடியில் சமநிலையின் இயல்புகள்
தொகு- எந்த நிறுவனமும் அதிக லாபம் ஈட்ட முடியாது. அதன் குறுகிய கால மொத்த செலவும் விலையும் சமமாகவே இருக்கும். (Price = Short term Average Cost)
- நிறுவனங்கள் பொருட்களின் விலையும் இறுதிநிலை உற்பத்திச் செலவும் சமமாகும் அளவிற்கு பொருட்களை உற்பத்தி செய்யும்.(Price = Marginal Cost)
- எந்த நிறுவனமும் தமது உற்பத்தி கட்டமைப்பை மாற்றி உற்பத்தியைக் கூட்டவோ குறைக்கவோ முயற்சி செய்யாது.
- அங்காடியில் நீண்டகாலத்தில் சமநிலை நிலவும் பொழுது எந்த நிறுவனத்திற்கும் அங்காடியை விட்டு வெளியே செல்லவோ அல்லது உள்ளெ வரவோ ஆர்வமிருக்காது. அதுபோலவெ உற்பதியைக்கூட்டவோ குறைக்கவோ ஆர்வமும் இருக்காது.
அன்றாட நடைமுறையில் இதுபோன்று நிறைவுப்போட்டியைக் காண்பது மிகவும் அரிதாக இருந்தாலும் இதனைப்பற்றிய அறிவு மற்ற அங்காடிகளின் தன்மையை அறிந்து கொள்ளவும் , இந்த உன்னத நிலையிலிரிந்து ஒவ்வொரு நிபந்தனைகளாகத் தளர்த்தி உண்மை நிலை எவ்வாறு இருக்கும் என்பதை அறிந்து கொள்ளவும் இது உதவும்..
மேற்கோள்கள்
தொகு- ↑ Karl E Case, Ray C Fair, Principles of Economics Pages 135, 136, Pearson Education ( Singapore ) Pte Ltd. (2002), ISBN81-7808-587-9
- ↑ Roger A Arnold, Economics, Page 500,, West Publishing company (1996) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-314-06589-X
- ↑ Paul Samuelson, William D Nordhaus, Indian Adaptation by Sudip Chaudhuri, Anindya Sen, Economics Page number 187-190, McgGraw HILL education India Pvt Ltd, (2010), பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-07-070071-0, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-07-070071-0