நுண்ணுயிர் காப்புக்கூடு

நுண்ணுயிர் காப்புக்கூடு (Microbial Cyst) என்பது நுண்ணுயிரிகள் ஓய்வெடுத்தல் அல்லது செயல்படா நிலையின் ஒரு கட்டமாகும். வழக்கமாக பாக்டீரியங்கள், ஓருயிர்ம உயிரினங்கள், அரிதாக முதுகெலும்பிலிகள் போன்ற உயிரினங்கள் சாதகமற்ற சுற்றுப்புற சூழ்நிலைகளிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொண்டு உயிர் வாழ இந்தக் காப்புக்கூடு உதவவுகிறது. இந்நிகழ்வின் போது உயிரினத்தின் இயங்குநிலை முற்றிலும் நிறுத்தப்பட்டு உயிரணுக்களின் வளர்சிதைமாற்ற செயல்முறைகள் மெதுவாக குறைந்து, உணவூட்டம் மற்றும் இயக்கம் போன்ற அனைத்து செயல்களும் நிறுத்தப்படுகின்றன.

அமீபாவின் (Entamoeba histolytica) காப்புக் கூடு நிலை
கடல் உயிரியான ஆர்த்தீமியாவின் காப்புக் கூடு (Artemia salina)

இக்காப்புக்கூடு உருவாக்கம் நுண்ணுயிரியை மற்றொரு இடத்திற்கோ அல்லது அதிக சாதகமான சூழலுக்கோ புறக்காரணிகள் மூலம் (காற்று, நீர்) எளிதில் எடுத்துச்செல்லப்படுகிறது. பின்னர் நுண்ணுயிரியின் வளர்ச்சிக்கும் உயிர்வாழ்தலுக்கும் சாதகமான சூழல் திரும்பியவுடன் அல்லது அச்சூழலை அடைந்தவுடன் காப்புக்கூடு உடைந்து விடுகிறது. இச்செயல்முறைக்கு காப்புக்கூடு நீக்கம் (excystation) என அழைக்கப்படுகிறது. பின்னர் நுண்ணுயிரியானது இயல்பான வாழ்க்கை முறைக்குத் திரும்புகிறது.

காரணிகள்தொகு

சாதகமற்ற சூழ்நிலைகள் என்பன

  • போதிய ஊட்டச்சத்து அல்லது பிராண வாயு இல்லாமை
  • மிகக் கடுமையான வெப்பநிலை
  • ஈரப்பதக் குறைவு மற்றும்
  • நச்சு வேதியப் பொருட்கள்

இவை அனைத்தும் நுண்ணுயிரிகளின் வளர்ச்சிக்கு உதவாது [1]. ஆகையால் காப்புக்கூடு உருவாவதை மேற்கண்ட காரணிகள் தூண்டுகின்றன.

பல்வேறு உயிரினங்களில் காப்புக்கூடு உருவாக்கம்தொகு

பாக்டீரியத்தில்தொகு

பாக்டீரியாவில் (உதாரணமாக, அசோட்டோபாக்டர் sp.), செல் சுவரில் ஏற்படும் மாற்றங்களால் காப்புக் கூடுருவாக்கம் ஏற்படுகிறது. அணுக்குழைமம் (சைட்டோபிளாசம்) சுருங்கி, செல் சுவர் தடிப்புருகிறது. பாக்டீரிய காப்புக்கூடுகள் அவற்றின் அகவித்தத்தம் (endospores) உருவாக்க விதம், சாதகமற்ற சூழலை தாங்கும் சக்தி போன்றவற்றிலிருந்து வேறுபடுகிறது. அகவித்தமானது காப்புக்கூடுகளை விட அதிக எதிர்ப்புச் சக்தியைக் கொண்டுள்ளன.

மேற்கோள்கள்தொகு

  1. Eugene W. Nester, Denise G. Anderson, C. Evans Roberts Jr., Nancy N. Pearsall, Martha T. Nester; Microbiology: A Human Perspective, 2004, Fourth Edition, ISBN 0-07-291924-8