நுரையீரல் சவ்விடை வளிமத்தேக்கம்

நுரையீரல் சவ்விடை வளிமத்தேக்கம் (Pneumothorax) என்பது நுரையீரலைச் சுற்றியுள்ள சவ்வுகளுக்கிடையே காற்று தேங்குவதாகும்.[1] இயல்பான நிலையில் இச்சவ்வுகள் இடையே ஒரு மெல்லிய படலத்தில் நீர்மம் காணப்படுகின்றது. திடீரெனத் தோன்றும் நெஞ்சு வலி, மூச்சுவிடுதலில் சிரமம் போன்றன முதன்மை அறிகுறிகளாகும். கூரிய ஆயுதம் ஒன்றால் ஏற்படும் காயத்தால் வெளிப்புறத்தில் இருந்து காற்றானது நுரையீரல் சவ்விடைகளில் உட்புகுகின்றது. இவ்வாறு உட்சென்ற வளி, மூச்சுவிடும்போது காயத் துவாரம் ஊடாக மீண்டும் வெளியில் சென்றால் பெரிதளவில் பாதிப்பு ஏற்படுவதில்லை. ஆனால் இந்த நோய் நிலையில் சிலருக்கு மூச்சுவிடும்போது வெளிக்காற்று காயத்தின் துவாரமூடாக உள்நோக்கி மட்டுமே செல்லக்கூடும். இந்நிலையில் காயத்துவாரம் ஒரு அடைப்பிதழ் போன்று தொழிற்படுகின்றது. இதனால் சவ்விடையே உள்ள வளியின் தேக்கம் அதிகரித்து பெரும் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும்.[1]

நுரையீரல் சவ்விடை வளிமத்தேக்கம்
ஒத்தசொற்கள்நுரையீரல் சுருக்கம்
இடது புற நுரையீரல் சவ்விடை வளிமத்தேக்கம்.
இடது புற நுரையீரல் சவ்விடை வளிமத்தேக்கம். நுரையீரலின் விளிம்புப் பகுதி ஒரு கோடு போன்று தெரிவதை அவதானிக்கலாம். வாதனாளி மற்றும் இதயம் என்பன சற்று வலதுபுறம் தள்ளப்பட்டிருப்பதையும் இந்த எக்சு-கதிர் படத்தில் அவதானிக்கமுடியும்.
சிறப்புசுவாச நோயியல்
அறிகுறிகள்நெஞ்சு வலி, மூச்சுச் சிரமம், களைப்பு
வழமையான தொடக்கம்உடனடி
காரணங்கள்குத்துக் காயங்கள், நுரையீரல் நோய்கள், நெஞ்சு அறுவைச்சிகிச்சை, புகைப்பிடித்தல்
சூழிடர் காரணிகள்நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய், காச நோய்த் தொற்று,
நோயறிதல்நெஞ்சுஎக்சு-கதிர், மீயொலி, CT scan
ஒத்த நிலைமைகள்நுரையீரல் சவ்விடை குருதித்தேக்கம்
தடுப்புபுகைப்பிடித்தல் நிறுத்தம்

நோய் அறிகுறிகள்

தொகு

நெஞ்சு வலி, மூச்சுச் சிரமம், களைப்பு என்பன முதன்மை அறிகுறிகளாகும். முதன்நிலை வளிமத்தேக்கம் பெரும்பாலும் இள வயதினருக்கு உண்டாகலாம். பெரும்பாலும் இவ்வளிமத்தேக்கம் உடையோர் உடனடியாக மருத்துவ உதவியை நாடுவது குறைவு, இது பாரதூரமான பின்விளைவுகளை உண்டாக்கலாம்.[2] நெஞ்சு இறுக்கம் போன்று இருத்தல், இதயத் துடிப்பு அதிகரித்தல், விரைவுச் சுவாசம், இருமல், உடனடி நெஞ்சுவலி, மூச்சுச் சிரமம், களைப்பு என்பன வந்தால் உடனடியாக மருத்துவ உதவியை நாடுவது சாலச்சிறந்தது.

வகைகளும் காரணிகளும்

தொகு

முதன் நிலைத் தன்னியல்பு நுரையீரல் சவ்விடை வளிமத்தேக்கம், இரண்டாம் நிலை நுரையீரல் சவ்விடை வளிமத்தேக்கம், காயத்தால் ஏற்படும் வளிமத்தேக்கம், வளிமிகை அழுத்த வளிமத்தேக்கம் என வகைப்படுத்தப்படுகின்றது.

முதன்நிலைத் தன்னியல்பு நுரையீரல் சவ்விடை வளிமத்தேக்கம்

தொகு

ஏற்கனவே அறியப்பட்ட நுரையீரல் நோய்கள் ஒன்றும் இல்லாத ஒருவருக்குத் திடீரென்று நிகழும் சவ்விடை வளிமத்தேக்கம் முதன் நிலைத் தன்னியல்பு என வழங்கப்படுகின்றது.[3] ஏற்கனவே நுரையீரல் நோய்கள் இவர்களில் அறியப்படவில்லை என்றாலும், வரியோட்டவழிக் கணித்த குறுக்குவெட்டு வரைவி மூலம் அறியப்படக்கூடிய ஆனால் நோய் அறிகுறிகள் வெளிப்படாத சிறிய நுரையீரல் காற்றுக் குமிழிகள் காணப்படலாம். காற்றுக் குமிழிகள் உடையும்போது அங்கிருந்து சவ்வுகளுக்கிடையே காற்று உட்புகுகின்றது.[3] இத்தகையோர் பொதுவாக 18-40 அகவைகளுக்கிடையே மற்றும் மெலிந்த உடல் கொண்டவர்களாகவும், முக்கியமாக இது புகைப்பிடிப்பவராகவும் இருப்பார்கள்.

இரண்டாம் நிலை நுரையீரல் சவ்விடை வளிமத்தேக்கம்

தொகு

ஏற்கனவே இருக்கக்கூடிய நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் போன்ற நுரையீரல் நோய்களை உடையோருக்கு இரண்டாம் நிலை நுரையீரல் சவ்விடை வளிமத்தேக்கம் ஏற்படுகின்றது.[3] பின்வரும் நுரையீரல் நோய்கள் வளிமத்தேக்கத்தை அதிகரிக்கலாம்:

Type Causes
மூச்சுக்குழாய் நோய்கள்[4] நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய், ஈழை நோய்
நுரையீரல் தொற்றுகள்[4] நியுமோசிஸ்டிஸ் நுரையீரல் அழற்சி (PCP), காச நோய், நுரையீரல் அழற்சி
சிற்றிடைவெளி நுரையீரல் நோய்கள்[4] Sarcoidosis
தொடுப்பிழைய நோய்கள்[4] முடக்கு வாதம்
புற்று நோய்[4] நுரையீரல் புற்று நோய்
வேறு[5] மாதவிடாய் வளிமத்தேக்கம்

காயத்தால் ஏற்படும் வளிமத்தேக்கம்

தொகு

கூரிய ஆயுதங்கள் அல்லது துப்பாக்கிக் குண்டு துளைத்து துளைகள் ஏற்பட்டு உண்டாகும் ஊடுருவல் காயங்கள் மற்றும் ஊடுருவல் அல்லாத உட்காயங்கள் ஆகியவற்றால் இது ஏற்படலாம்.[5] உட்காயங்கள் அதிர்வுகளால் அல்லது தாக்குதல்களால் ஏற்படலாம். மருத்துவத்தால் ஏற்படும் வளிமத்தேக்கம் கூட ஒருவகை காயத்தால் ஏற்படும் வளிமத்தேக்கம் ஆகும். உயிரகச் செதுக்குக்காக ஊசிகள் மூலம் நுரையீரல் கலங்கள், இழையங்கள் உறிஞ்சப்படும் செயன்முறை மருத்துவ வளிமத் தேக்கத்திற்கான ஒரு முதன்மைக் காரணியாகும்.

இழுவை வளிமத்தேக்கம்

தொகு

உள் நுழைந்த காற்று வெளியே செல்லாமல் மேலும் மேலும் நுரையீரற் சவ்விடை வெளியில் வளி தேங்குவதால் இழுவை வளிமத்தேக்கம் ஏற்படுகின்றது. இது ஒரு உயிராபத்துத் தரக்கூடிய நிலையாகும்.[3] எனவே இது மருத்துவ அவசரநிலையாகக் கருதப்படுகின்றது. இது இடது புறத்தில் ஏற்படின் வாதனாளி மற்றும் இதயம் வலது புறம் தள்ளப்படும். இது மேலும் தீங்கை விளைவிக்கும்.

செயற்படுமுறை

தொகு

ஒவ்வொரு நுரையீரலையும் சவ்வுகள் அல்லது உறைகள் சூழ்ந்துள்ளன. நுரையீரலுடன் ஒட்டியபடியே அமைந்துள்ளது உடலக நுரையீரற்சவ்வு (visceral pleura) மற்றும் வெளியே அமைந்துள்ளது சுவர்ப்புற நுரையீரற்சவ்வு (parietal pleura) ஆகும். இவை இரண்டுக்கும் இடையே மெல்லிய படலத்தில் நீர்மம் காணப்படுகின்றது. இது நுரையீரலைப் பாதுகாக்க, உராய்வு நீக்கியாக மற்றும் நுரையீரல் சுயாதீனமாக சுருங்கி விரிய உதவுகின்றது. இயல்புக்கு மாறாக இந்த நுரையீரல் சவ்விடையில் சீழ் தேங்குதல், குருதி தேங்குதல், நிணநீர் தேங்குதல், வளிமம் தேங்குதல் போன்றன ஏற்படலாம்.

நுரையீரல் காற்றின் அழுத்தம் நுரையீரல் சவ்விடை வெளியின் அழுத்தத்தைவிடக் கூடுதலாக இருப்பதாலும் இவற்றுக்கு இடையே ஒரு தொடர்பும் இல்லாது இருப்பதாலும் இயல்பான நிலையில் நுரையீரல் சவ்விடையுள் நுரையீரல் காற்று உட்செல்வதில்லை. இதுபோலவே வெளிச் சூழலுடன் எதுவிதத் தொடர்பும் அற்று இருப்பதால் வளிமண்டலத்தில் இருந்து காற்று உட்புகுவதில்லை. துப்பாக்கிக் குண்டு துளைத்தல் அல்லது கத்தியால் குத்தப்படல் போன்ற சம்பவங்களில் நுரையீரல் சவ்வில் ஏதேனும் துளை ஏற்பட்டால் நுரையீரல் சவ்விடையே வளிமத்தேக்கம் ஏற்படுகின்றது.

காயத் துவாரம் வழியாக வெளியிலிருந்து உள்வரும் காற்று சுவாசச் செயன்முறையில் மீண்டும் காயத் துவாரம் வழியாக வெளியே சென்றால் பேரிடரைக் கொடுப்பதில்லை, எனினும் இதனைப் புறக்கணிக்கலாகாது. இதனை விட ஆபத்தான நிகழ்வு என்னவெனில் காயத் துவாரம் வழியாக காற்று உள்ளேமட்டும் செல்லும் ஆனால் வெளியே மீண்டும் திரும்பாது. காயத்தின் துவாரம் ஒரு அடைப்பிதழைப் போன்று தொழிற்படுவதே இதற்குக் காரணம் ஆகும். இதனால் நுரையீரல் சவ்விடை உப்பல் அடைகின்றது. இது மேலும் மேலும் பெருக்க நுரையீரல் ஒருபுறம் தள்ளப்பட்டு சிறிதாகச் சுருங்குகின்றது. இது நுரையீரல் பெருஞ்சுருக்கம் (collapsed lung) எனப்படும். இதுதான் இழுவை வளிமத்தேக்கம் ஆகும்.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Bintcliffe, Oliver; Maskell, Nick (8 May 2014). "Spontaneous pneumothorax". BMJ (Clinical research ed.) 348: g2928. doi:10.1136/bmj.g2928. பப்மெட்:24812003. 
  2. MacDuff, Andrew; Arnold, Anthony; Harvey, John (December 2010). "Management of spontaneous pneumothorax: British Thoracic Society pleural disease guideline 2010". Thorax 65 (8): ii18–ii31. doi:10.1136/thx.2010.136986. பப்மெட்:20696690. 
  3. 3.0 3.1 3.2 3.3 Stephen L., Hauser. "Chapter 263. Disorders of the Pleura and Mediastinum". In S. Fauci, Anthony (ed.). Harrison's™ PRINCIPLES OF INTERNAL MEDICINE. The McGraw-Hill Companies, Inc. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-07174889. {{cite book}}: Check |isbn= value: length (help); Unknown parameter |Edition= ignored (|edition= suggested) (help)
  4. 4.0 4.1 4.2 4.3 4.4 Tschopp, Jean-Marie; Rami-Porta, Ramon; Noppen, Marc; Astoul, Philippe (September 2006). "Management of spontaneous pneumothorax: state of the art". European Respiratory Journal 28 (3): 637–50. doi:10.1183/09031936.06.00014206. பப்மெட்:16946095 இம் மூலத்தில் இருந்து 2011-04-11 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110411064734/http://erj.ersjournals.com/content/28/3/637.long. 
  5. 5.0 5.1 Noppen, M.; De Keukeleire, T. (2008). "Pneumothorax". Respiration (Karger Publishers) 76 (2): 121–27. doi:10.1159/000135932. பப்மெட்:18708734 இம் மூலத்தில் இருந்து 2015-01-17 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150117111901/http://www.karger.com/Article/FullText/135932.