நௌதாங்கி

நாட்டுப்புறக் கலை வடிவம்

நௌதாங்கி (Nautanki) என்பது தெற்காசியாவின், குறிப்பாக வட இந்தியாவில் மிகவும் பிரபலமான நாட்டுப்புற இசை நாடக அரங்க செயல்திறன் வடிவங்களில் ஒன்றாகும். [1] பாலிவுட் (இந்தி திரையுலகம்) வருவதற்கு முன்பு, வட இந்தியாவின் கிராமங்கள் மற்றும் நகரங்களில் நௌதாங்கி மிகப்பெரிய பொழுதுபோக்கு ஊடகமாக இருந்தது. நௌதாங்கியின் செல்வாக்கான இசை அமைப்புகளும் நகைச்சுவையான, பொழுதுபோக்கு கதைகளும் கிராமப்புற மக்களின் கற்பனையில் வலுவான செல்வாக்கைக் கொண்டுள்ளன. வெகுஜன ஊடகங்கள் (தொலைக்காட்சி மற்றும் இசைத்தட்டுகள் போன்றவை) பரவிய பிறகும், 10,000 முதல் 15,000 பேர் கொண்ட கூட்டத்தை சிறந்த நௌதாங்கி நிகழ்ச்சிகளில் காணலாம். நௌதாங்கியின் தோற்றம் வட இந்தியாவின் சாங்கிட், பகத் மற்றும் சுவாங் இசை நாடக மரபுகளில் உள்ளது. சாங்கித் ராணி நௌதாங்கி கா என்று அழைக்கப்படும் ஒரு சாங்கிட் மிகவும் பிரபலமடைந்தது. [2] அதன் முழு வகையின் பெயரும் நௌதாங்கி ஆனது.

சுல்தானா தாகுவில் சுல்தானா தாகுவாக முனைவர் தேவேந்திர சர்மாவும், பூல்குன்வாராக பாலக் ஜோஷியும்

நிகழ்ச்சிகள்

தொகு

காதல் கதைகள், புராணங்கள் அல்லது உள்ளூர் கதாநாயகர்களின் வாழ்க்கை வரலாறுகளிலிருந்து பெறப்பட்ட பிரபலமான நாட்டுப்புற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்ட நடன இசைப் பாடல்களை நௌதாங்கி நிகழ்ச்சிகள் கொண்டிருந்தது. செயல்திறன் பெரும்பாலும் தனிப்பட்ட பாடல்கள், நடனங்கள் மற்றும் குறுநாடகங்களுடன் நிறுத்தப்படுகிறது. இது பார்வையாளர்களுக்கு இடைவெளிகளாகவும் நகைச்சுவை நிவாரணமாகவும் செயல்படுகிறது. பார்வையாளர்கள் சில நேரங்களில் கழிவறைக்குச் செல்ல அல்லது தங்கள் வீடுகளிலிருந்தோ அல்லது அருகிலுள்ள கடைகளிலிருந்தோ உணவை எடுக்க இடைவெளிகளைப் பயன்படுத்துகிறார்கள். நௌதாங்கி நிகழ்ச்சிகளில் பார்வையாளர்களிடமிருந்து நிறைய சமூக பங்கேற்பு உள்ளது. உதாரணமாக, சமூக உறுப்பினர்கள் நௌதாங்கி நிகழ்ச்சிகளுக்கு தளவாட ஆதரவு, நிதி உதவி மற்றும் திறமையான நடிகர்களையும் வழங்குகிறார்கள். பார்வையாளர்கள் நௌதாங்கி நடிகர்கள் எந்த கதையை செய்யப்பட வேண்டும் என்பதைத் தேர்வுசெய்கிறார்கள். பெரும்பாலும் ஒரு பாடல் அல்லது குறுநாடகத்தை மீண்டும் ஒரு முறை நிகழ்த்தக் கோரி செயல்திறனின் போது தலையிடுவார்கள்.

 
அமர்சிங் ரத்தோரில் பிரபல நௌதாங்கி கலைஞரும், சங்கீத நாடக அகாதமி பெற்றவருமான பண்டிட் ராம் தயால் சர்மாவும், முனைவர் தேவேந்திர சர்மாவும் [3]

நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டிருக்கும் ஒரு கிராமத்தில் அல்லது அதைச் சுற்றியுள்ள எந்தவொரு திறந்தவெளியிலும் நௌதாங்கி நிகழ்ச்சிகள் நடைபெறலாம். சில நேரங்களில் இந்த இடம் கிராம சமுதாய மையம் மூலம் நடைபெறுகிறது. மற்ற நேரங்களில், உள்ளூர் பள்ளியின் விளையாட்டு மைதானம் செயல்திறன் தளமாக மாறும். ஒரு நௌதாங்கி மேடை தரையில் இருந்து உயர்ந்து மர கட்டில்களாலும் நிகழ்த்தப்படும் (பொதுவாக உள்ளூர் கிராமவாசிகளால் வழங்கப்படுகிறது). சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, இந்திய கிராமங்களில் மின்சாரம் இல்லை. எனவே பெரிய விளக்குகள் அல்லது பெட்ரோமேக்ஸ் (மண்ணெண்ணெய் எண்ணெயால் இயக்கப்படும் விளக்கு) மூலம் ஒளி வழங்கப்பட்டது.

நௌதாங்கியின் இன்பம் இரண்டு அல்லது மூன்று கலைஞர்களுக்கிடையேயான தீவிரமான பரிமாற்றங்களில் உள்ளது; ஒரு சேர்ந்திசை சில நேரங்களில் பயன்படுத்தப்படுகிறது. பாரம்பரியமான நௌதாங்கி நிகழ்ச்சிகள் வழக்கமாக இரவில் தாமதமாகத் தொடங்குகின்றன. பெரும்பாலும் இரவு 10 மணியளவில் தொடங்கி மறுநாள் காலை சூரிய உதயம் வரை இரவு முழுவதும் செல்லும் (மொத்தம் 8 முதல்10 மணி நேரம்). நௌதாங்கி நிகழ்ச்சிகளில் எந்த இடையூறும் ஏற்படுவதில்லை.

கலைஞர்கள்

தொகு

கோகுல் கொரியா, காசோ, சமாய்-கெராவின் ராம் ஸ்வரூப் சர்மா, மனோகர் லால் சர்மா மற்றும் கமான் மாவட்ட பாரத்பூரின் கிரிராஜ் பிரசாத், பண்டிட் ராம் தயால் சர்மா, சுன்னி லால், புரான் லால் சர்மா, அமர்நாத், குலாப் பாய், மற்றும் கிருஷ்ணா குமாரி ஆகியோர் பிரபலமான நௌதாங்கிக் கலைஞர்கள் ஆவர்.

குறிப்புகள்

தொகு
  1. Kathryn Hansen (1991). Grounds for Play: The Nautanki Theatre of North India. University of California Press. p. 354. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780520910881.
  2. Ramnarayan Agrawal (1976). Saangit:Ek Lok Natya. Rajpal and Sons. Delhi
  3. Devendra Sharma (2006). Performing Nautanki: Popular Community Folk Performances as Sites of Dialogue and Social Change. Ohio University.

வெளி இணைப்புகள்

தொகு
  • www.devnautanki.com
"https://ta.wikipedia.org/w/index.php?title=நௌதாங்கி&oldid=2942149" இலிருந்து மீள்விக்கப்பட்டது